அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்!
(அ) கைபர், போலன் கணவாய்வழியாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததாகச் சொல்வது நிகழாத ஒன்று. இல்லாத ஆரியப் படையெடுப்பை நம்மீது சுமத்தினார் பெரியார். என்று
அசல் மோசடியான குற்றச்சாட்டைப் பெரியார்மீதும் திராவிட
அமைப்புகள்மீதும் சுமத்துகிறார் குணா.
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பது இதுதான். ஒரு மனிதன் ஏமாற்றுவதற்கும், பொய் சொல்வதற்கும் அளவு வேண்டாமா? வரலாற்று ஆய்வாளர்கள் நுணுகி ஆய்ந்து தெளிந்த முடிவு இது.
மாந்தவியல் ஆய்வுகளும் மறுப்புக்கு இடமின்றி இதை உறுதி செய்கின்றன. அப்படியிருக்க இப்படியொரு பொய்யை சொல்கிறார் குணா என்றால் அவர் முழுமுதல் நோக்கம் ஆரியப் பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாய் வெளிப்படுகிறது.
சங்பரிவார் அமைப்புகளான, ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.
போன்றவை சொல்வதையே குணாவும் சொல்கிறார் என்றால், இவரும் அந்த அமைப்பின் அணுக்கத் தொண்டர் என்பது உறுதியாகிறது. தமிழர் நலனுக்குப் பேசுவதுபோல எதிராளிக்குத் துணை நிற்கும் எத்தர்களின் சித்துவேலையை இவர் இந்நூலின் வழி செய்திருக்கிறார். எனவே, தமிழர்கள் ஆரியப் பார்ப்பனர்களைவிட இவர்களிடந்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!
குணா கூறுவது எவ்வளவு அப்பட்டமான மோசடியான பொய் என்பதை இனி காண்போம்
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற இவரது நூலை யாருடைய நினைவாக வெளியிட்டுள்ளாரோ, யாருடைய படத்தை அந்நூலின் தொடக்கத்தில் அச்சிட்டுள்ளாரோ அந்த மாபெரும் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆரியர் வருகைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கூறினால், குணாவின் குறுக்குச் சிந்தனைகளுக்கு நறுக்கென்று தெளிவு கிடைக்கும் என்பதால் அதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
பாவாணர் எழுதிய ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒப்பற்ற நூல் ஒப்பியன் மொழி நூல் என்ற ஆய்வு நூல். 1940 ஆம் ஆண்டு முதற்பதிப்பு செய்யப்பட்டது. 2001 இல் தமிழ்த் தொண்டர் கோ.
இளவழகன் அவர்கள் மறுபதிப்பு செய்துள்ளார். அந்த மறுபதிப்பின் பகுதி ஒன்றில் பக்கம் 20 இல் தொடங்கி பாவாணர் கூறியுள்ளவற்றை அப்படியே தருகிறேன்.
ஆரியர் தொல்லகம்
ஆரிய வருணத்தாரின் தொல்லகம் ஆசியாவினின்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமே இருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிரும் வாலமுகமும் கொண்ட மக்கள் அங்கு நின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள்மேல், தங்கள் தலைமையையும் மொழியையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும், அய்ரானிலும் உள்ள கீழை ஆரியர், ஆரிய வருணத்தின் கடைசியும் மிகச் சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாபில் தங்கினர் என்று முதலாவது லத்தாம் (Latham)
எடுத்து விளக்கி, பின் மாந்தனூலும்
(Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளாலும், பொயஸ்கே (Poesche) யும், பெங்கா ((Penka) வும் திறம்படத் தாங்கிய கொள்கையை நான்முற்றும் ஒப்புக் கொள்கிறேன் என்று சாய்ஸ் (Sayce)
கூறுகிறார்.
ஆரியர் வருகை
ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்று பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும் பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவினபின் இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை ஹிந்து என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை இந்தி என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. (அது தொடர்கிறது) என்கிறார் பாவாணர்.
ஆய்வாளர் எஸ்.ஏ.
டாங்கே, தமது பண்மைக்கால இந்தியா என்ற நூலில் இதையே ஏற்கிறார்.
இந்தியாவிற்கு வெளியில் ஏதோ ஒரு இடத்திலிருந்து (பொதுவான பிறப்பகத்திலிருந்து) ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்ற கருத்தை (ஓரிருவரைத் தவிர) எல்லா சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆரிய இனத்தின் சில கிளைகள் மேற்கே அய்ரோப்பா, ஆசியா மைனர் முதலிய பகுதிகளுக்குச் சென்றன. சில ஹிமாலய மலை வழியாக, பாஞ்சாலம், காஷ்மீரம் வழியாக இந்தியாவுக்கு வந்தன.
பொதுவாக ஆரியப் பிறப்பகம் எது?
வடதுருவத்திற்கு அருகில் சைபீரியா என்று நாம் குறிக்கும் பகுதி என்று திலகர் போன்றோர் கூறுகின்றனர்.
வால்கா நதிக்கரையில், காஸ்பியன் கடலுக்கு அருகில் என்று சிலர் கருதுகின்றனர்.
காசியப முனிவர் என்று ஆரியப் புராணக் கதை,
காஸ்பியன் கடலைத்தான் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
என்று மற்றவர் கருத்துக்களை எடுத்துக்காட்டும் டாங்கே, இந்தியாவுக்கு வெளியே ஒரு பொதுவான பிறப்பிடத்திலிருந்தே ஆரியர்கள் பல இடங்களுக்கும் பரவினர். அவர்களுள் ஒரு பகுதி ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பதை ஏற்கிறார்.
அது மட்டுமன்றி அவ்வாறு ஆரியர்கள் நுழையும்போது, இங்கு திராவிடர்கள் சிறப்பானதொரு நாகரிக வாழ்வை வாழ்ந்தனர் என்பதையும் ஒப்புகிறார். அத்துடன் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது காட்டு மனிதர்களாக, நாகரிகமற்றவர்களாக இருந்தார்கள் என்பதையும் உறுதி செய்கிறார். மத்திய ஆசியாவில் போராடி, இந்தியாவை நோக்கி பரவி, இந்தியாவினுள் நுழைந்து, இறுதியில் இந்தியாவைக் கைப்பற்றி குடியேறியவர்கள் ஆரியர்கள் என்கிறார் டாங்கே. தமிழர்களே! இப்போது சொல்லுங்கள், நாம் எதிர்க்க வேண்டியது அயல்நாட்டிலிருந்து ஆடுமாடு மேய்க்க வந்து, நம்மையே சூழ்ச்சியால் அடிமையாக்கி, நம் மண்ணுரிமையையும், மொழிப் பெருமையையும் கெடுத்து, நம்மை மூடத்தனத்தில் தள்ளி, நம் கல்வியைப் பறித்து, நம்மை இழிமக்கள் என்று ஒதுக்கி, நம் மண்ணுரிமை போகவும், மொழிவளம் கெடவும், தமிழ் சிதையவும், திரியவும், நம்முள் ஜாதிப் பிரிவுகள் உருவாகவும் காரணமான ஆரியர்களையா? அல்லது நம் இரத்த இனமான, நம் தாய் மொழியையே முதலில் பேசி, பிற்காலத்தில் ஆரிய கலப்பால் தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையாளமாகவும் திரிந்து போன மொழிகளைப் பேசி வரும் கன்னடர், தெலுங்கர், மலையாளிகளையா?
அக்காலத்தில் மட்டுமல்ல, பெரியார் காலத்தில் மட்டும் அல்ல இக்காலத்திலும் தமிழர் வீழ்ச்சியையே தன் முதல் இலக்காகக் கொண்டு செயல்படுபவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். எனவே, பெரியார் ஆரிய எதிர்ப்பை எடுத்ததுதானே சரியான அறிவியல் அணுகுமுறை? தொடக்க காலத்தில் ஆரிய எதிர்ப்பு போர் நிகழ்த்திய பெரியாரை எதிர்த்த பொதுவுடைமைக் கட்சிக்காரர்களே, பின்னாளில், பெரியார் அணுகுமுறையின் நியாயத்தை உணர்ந்து பெரியாரை ஆதரித்தனரே!
உண்மை இப்படியிருக்க பெரியார் அணுகுமுறை தவறு என்பதும், ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வரவில்லையென்பதும் அசல் மோசடிப் பிரச்சாரமல்லவா? பித்தலாட்டச் செயல் அல்லவா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்! அத்தோடு, இல்லாத ஆரியப் படையெடுப்பை நம்மீது சுமத்தினார் பெரியார் என்கிறார் குணா.
இது எல்லாவற்றையும்விட உலக மகா மோசடிக் கருத்து. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, மண்ணின் மக்களான தமிழர்களை (திராவிடர்களை) சூழ்ச்சியால் பிரித்து, சிதைத்து, அழித்து, அகற்றி இடங்களைப் பிடித்து, ஆரிய வர்த்தமாக்கி தங்கள் பகுதியை வளர்த்தது; நமது மொழியைச் சமஸ்கிருதம் கலந்து கெடுத்தது, நமது பண்பாட்டை ஒழித்து ஆரிய பண்பாட்டை நடைமுறைப்படுத்தி, அதையும் நம் மக்கள் பின்பற்றச் செய்தது என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்கள், நூற்றுக்கணக்கான ஆய்வுகள், நூல்கள் இருக்கையில், முழுப் பூசணிக்காயை ஒரு சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் குணா.
ஜவகர்லால் நேரு அவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவராயினும், ஆரிய திராவிடப் போர் என்பதை ஒத்துக் கொண்டு, அன்று ஆரியர்கள் மண்ணின் மைந்தர்களிடம் திராவிடர்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஒரு பரிகாரமாக சில நற்காரியங்களைச் செய்து (இட ஒதுக்கீடு போன்றவை அளித்து) திராவிடர்களை, ஒடுக்கப்பட்ட மக்களை மேல் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இனத்தைச் சேர்ந்தவரே ஒத்துக் கொள்கிறார். ஆனால் குணாக்கள் ஆரியத்திற்குக் காரியம் ஆற்றுகிறார்கள். அதையும் கேட்டுக் கொண்டு சில அரை வேக்காட்டுத் தமிழர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்!
முதலில் தமிழ்த் தேசியம் பேசும் தமிழர்கள் ஒவ்வொருவரும் வரலாறுகளை முதலில் முழுமையாகப் படிக்க வேண்டும். அதன்பின் கொடி பிடிக்க வேண்டும்! (ஆ)
கைபர், போலன் கணவாய் வழியாக வந்ததாகக் கூறப்படும் ஆரியர்களோ, ஆரிய வழியினரோ தமிழகத்தைப் படைகொண்டு வென்ற வரலாறே இல்லை. ஆனால், அருகம் (சைனம்), புத்தம் ஆகிய ஆரியச் சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும் பண்பாடும் தமிழகத்திற்குள் புகுந்தன. என்று உண்மை கலவாத ஒரு கற்பனைச் செய்தியைத் தன் நோக்கத்திற்கு ஆதரவாய்க் கூறுகிறார் குணா.
சைனமும், புத்தமும் ஆரிய மதங்கள் என்பது முழு பொய், மோசடியான கருத்து. அவைதான் ஆரிய கொள்கைகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தன என்பது அதைவிடப் பொய், திரிபு.
அது மட்டுமல்ல, புத்தமும், சைனமும் ஆரியக் கொள்கையைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தன என்று கூறும் இதே குணா, காவிரி சமவெளியிலும், வைகையாற்றங் கரையிலுமென ஆரியப் பார்ப்பனீயம் ஊடுருவி விட்ட காலம் கரிகாலன் காலம் என்கிறார். அதாவது கி-.மு.
எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிலே ஆரிய பார்ப்பனீயம் தமிழகத்திற்குள் ஊடுருவி விட்டது என்கிறார் தமிழர் வரலாறு என்ற அவரது நூலில்.
ஆரியப் பார்ப்பனீயம் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக குணா குறிப்பிடும் காலமான கரிகாலன் காலத்தில் (அதாவது கி.மு.
எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில்) புத்தரும் மகாவீரரும் பிறக்கவே இல்லை. புத்தமும் சைனமும் தோன்றவே இல்லை. புத்தமும் சமணமும் தோன்றாத காலத்தில் தமிழகத்திற்குள் ஊடுருவிய ஆரிய பார்ப்பனியத்தைப் புத்தமும் சமணமும் கொண்டு வந்தன என்பது அயோக்கியத்தனமான, பித்தலாட்டமான பிரச்சாரம் அல்லவா? நாம் எழுப்பும் இக்கேள்விக்கு குணா நாணயமாகப் பதில் சொல்ல வேண்டும்!
அதுமட்டுமல்ல, சைனமும், புத்தமும் வளர்ந்து நின்ற காலத்திற்கு முன்பே, சேர நாட்டில் வந்தேறிய ஓர் ஆரிய பார்ப்பனனாகிய பரசுராமன் இத்துணைக் கண்டத்தில் எங்குமே இல்லாத தூயதொரு பார்ப்பனராட்சியை முதன் முதலில் நிறுவினான் என தமிழர் வரலாறு என்ற அதே நூலில் (பக்கம் 23) குணா குறிப்பிடுகிறார். பரசுராமன்தான் ஆரியப் பார்ப்பன தூய ஆட்சியை நிறுவினான் என்று கூறிவிட்டு, புத்தமும் சமணமுமே ஆரிய கொள்கையைக் கொண்டு வந்தன என்பது முரண் அல்லவா?
எப்போதும் உண்மையைச் சொல்கிறவர்கள்தான் ஒரே நிலையில் முரண்படாது கூறுவார்கள். குணாவைப்போல், மோசடிக் கருத்துக்களைப் பரப்பவென்று நூல் எழுத வந்தால் இந்த அபத்தங்கள் அணிவகுக்கவே செய்யும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்தான் ஆய்வறிஞராம்! அவர் சொல்வதைக் கண்மூடித்தனமாக அப்படியே ஏற்கின்ற தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
குணாவின் கூற்றைக் கூர்ந்து நோக்கினால் நான்கு முரண்பட்ட செய்திகள் உள்ளன.
1. தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு ஏற்பட்டற்குக் காரணம் சைன புத்தமதங்கள்.
2. ஆரியப் பண்பாட்டைப் பரப்பியவன் கரிகாலன்.
3. ஆரியப் பண்பாடு வந்தது குலோத்துங்கனால்.
4. தூய ஆரிய பண்பாட்டை நிறுவியது பரசுராமன் என்ற ஆரியப் பார்ப்பனர்.
இப்படி நான்கு முரண்பட்ட செய்திகளை ஒருவரே (குணாவே) கூறுகிறார். உண்மை என்னவென்றால் இவர் ஆய்வாளர் அல்ல; இவர் எதையும் ஆராயவும் இல்லை; மாறாக, பீராய்ந்து பெற்ற (பிறரிடம் திருடிப் பெறும்) சில உதிரிக் கருத்துக்களை ஒட்டு சேர்த்து, ஏதோ தானே முயன்று கண்டதாகக் காட்டும் ஒரு கயமை எழுத்தாளர். இவருக்கு எந்த ஒன்றிலும் ஆழமான அறிவும் இல்லை, ஆய்வும் இல்லை. இவரது நூல்களை நன்கு ஆய்வு செய்வோருக்கு இது நன்கு விளங்கும்.
இவர் நூல் எழுத 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஆராய்ச்சிக்கல்ல. எதை எப்படித் திரிக்கலாம், எப்படி மாற்றலாம், தன் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி பொய் கூறலாம், ஒட்டு சேர்க்கலாம் என்பதற்கே!
முனைவர் குருசாமி என்பவர் தலித் என்ற சொல்லுக்கு மாற்றாக மறையர் என்பதைப் பயன்படுத்தலாமே என்று சேரி என்ற இதழுக்கு 1997 டிசம்பரில் எழுதிய ஒரு வாழ்த்து மடல் செய்தியை அடிப்படையாக வைத்து 350 பக்கத்தில் வள்ளுவப் பார்ப்பாரியம் என்று ஒரு நூலே எழுதி விட்டார் இந்த குணா. அதில் சொல்லப்படுபவை நிறுவ முடியாத, உறுதி செய்ய இயலாத, உண்மைக்கு மாறானவை.
மறை என்ற சொல் வேதத்திற்கு மாற்றாக தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆரியர் தவிர மற்றவர் ஓதா வண்ணம் மறைக்கப் பட்டதால் மறை என்ற காரணப் பெயரை ஆரிய வேதத்திற்குச் சூட்டினர். அப்படியிருக்க தமிழ்ப்படுத்தப்பட்ட ஒரு சொல் ஒரு இனத்திற்கு எங்ஙனம் ஆகும்.
மேலும், தமிழில் நல்ல வேதங்கள் இருந்தன என்ற இவர் போன்றோர் கூற்றை வாதத்துக்கு எடுத்து ஆய்வு செய்தாலும், தமிழர்கள் எதையும் மறைக்காதபோது தமிழர் வேதங்களுக்கு மறை என்று பெயர் வர வாய்ப்பு இல்லை. எனவே மறையர் என்பது தமிழர்க்கு உரியது அல்ல. அப்படியே பிற்காலத்தில் ஆரிய வேதம் ஓதியதால் வந்திருந்தாலும் அது பறையர்க்கு உரியது அல்ல.
தாழ்த்தப்பட்ட மக்களிலே பறையடித்தவர்கள் பறையர் என்பதே (தொழில் பெயர் என்பதே) உண்மை! வள்ளுவர் என்பவர்கள் மறை ஓதியவர்கள் அல்ல. அவர்கள் வானிலை ஆய்வாளர்களும் அல்ல. இதை வேறு ஓர் இடத்தில் விளக்கியுள்ளதை நினைவு கூறுங்கள்!
ஆக, ஊகங்களாலும், தொடர்புபடுத்தும் கற்பனைத் திறத்தாலும், பல நூல் செய்திகளை ஒட்டு சேர்ப்பதாலும் தன்னை ஒரு புதுமைச் சிந்தனையாளராய், புதியன காணும் சிந்தனை யாளராய், ஏராளமாய்க் கற்றவராய் காட்டிக் கொள்ளும் ஒரு கபட பேர்வழி என்பது நுணுகி நோக்குவோர்க்கு விளங்கும்.
இவரைப் பற்றி ஆய்வு அறிஞர் அ. மார்க்ஸ் அவர்கள் கீழ்க்கண்டவாறு மிகச் சரியாகக் கூறுகிறார். குணா முன் வைக்கிற எந்த அதிரடியான கருத்திற்கும் அவர் உரிய ஆதாரங்கள் எதையும் தருவதில்லை. வெறும் ஊகமாக எதையாவது சொல்லி விட்டுப் பின்பு அதையே ஆதாரமாக்கிப் புதிய புதிய சிந்தனைகளை(!) உதிர்த்துக் கொண்டே போவதுதான் அவரது ஆய்வு முறையாக உள்ளது. இதன் மூலம் அவர் வாசகர்களைச் சுய சிந்தனையற்ற மூடர்களாகக் கருதுவது ஒருபுறமிருக்க ஆய்வு நெறிகளையெல்லாம் காற்றில் பறக்க விடுவது குறிப்பிடத்தக்கது எவ்வளவு சரியான கணிப்பு பாருங்கள்!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற இந்த நூலும் ஆரியத்திற்கு ஆதரவாய் அவர்களின் கையாளாய் நின்று எழுதப்பட்டதே! ஆரியத்திற்காக எழுத வந்ததால், ஆரிய நரித்தனங்கள் அத்தனையும் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளார். இது தமிழ்த் தேசியத்திற்கு வழிகாண வந்த நூல் அல்ல. ஆரியத்தின் பழி துடைத்து, அவர்களைத் தமிழர்களோடு கலக்கவிட்டு, தமிழர்களின் மிச்ச மீதியையும் ஒழிக்க வந்தது. தமிழர்களை மூளைச் சலவை செய்ய வந்தது.
எனவே, குணாவின் இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் விழிப்புடன் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், மரம்தான் தேனைத் தந்தது; ஈக்கள் அதைத் திருட வந்தன என்று மாற்றுவார்! எச்சரிக்கை!
அடுத்து, தமிழகத்தின்மீது முதன் முதலில் படையெடுத்து வந்து தமிழகத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள் களப்பிரர்கள் என்பது குணாவின் குற்றச்சாட்டு. களப்பிரர் என்றாலே அவர் தமிழர்களின் முதல் எதிரி என்பதாக எரிந்து விழுகிறார்.
உண்மை என்னவென்றால் களப்பிரர்கள் யார் என்பதே இன்னும் உறுதி செய்ய முடியாத நிலையில், அவரைத் தமிழரின் எதிரியாக கொத்திக் குதறுகிறார் குணா. களப்பிரர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்களின் கருத்து என்பதைத் தவிர அது உறுதி செய்யப்படாத செய்தி என்பதே உண்மை.
களப்பிரர்களைத் தமிழர்கள் எனச் சொல்லும் ஆதாரங்களும் உண்டு. (K.P.Aravaman,
Jain Cmtriburion of Tamil Grammer 1974
P-61)
ஆனால், ஏன் குணா இவர்கள்மீது இவ்வளவு வெறுப்பையும், எதிர்ப்பையும் காட்டுகிறார் என்று ஆய்வு செய்தால் அதன் உள்நோக்கு தெள்ளிதின் புலப்படும். ஆரியர்களுக்குச் சார்பானவற்றை ஆதரித்தல்; ஆரியர்க்கு எதிரானவற்றை எதிர்த்தல் என்ற குணாவின் அளவுகோலை இங்கு பொருத்திப் பார்த்தால் உண்மை புலப்படும்.
திராவிடர் இயக்கம் ஆரியத்திற்கு எதிரானது அதை எதிர்த்தார்.
பெரியார் ஆரியர்க்கு எதிரானவர் அவரை எதிர்த்தார், பழித்தார், துரோகிப் பட்டம் சூட்டினார். புத்தமும் சமணமும் ஆரியர்க்கு எதிரானவை. அதை எதிர்த்தார். எதிர்த்ததோடு நில்லாமல் அவைதான் ஆரியத்தைப் பரப்பின என்ற அபாண்டத்தைக் கூறினார். அதேபோல் களப்பிரர்கள் ஆரியர்க்கு எதிராகச் செயல்பட்டனர் என்பதால் அவர்களை எதிர்க்கிறார்.
களப்பிரர்களை அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்துள்ள ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடுகள். இச்செப்பேடு வடமொழி மற்றும் தமிழில் எழுதப்பட்ட 18 பக்கங்கள் கொண்டது. இச்செப்பேடு சொல்லும் செய்தி என்ன?
பராந்தகன் நெடுஞ்சடையான் என்னும் பாண்டிய மன்னன் ஒருநாள் மதுரை நகரில் வீதிவலம் வந்து கொண்டிருக்கையில், கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்னும் ஆரியப் பார்ப்பனன் அம்மன்னன் முன்வந்து ஒரு முறையீடு செய்கிறான்.
பராந்தகன் நெடுஞ்சடையானின் முன்னோனான பல்யாக சாலை முதுகுடுமிப் பெரும் வழுதி (சங்ககாலப் பாண்டிய மன்னன்)யின் ஆட்சி காலத்தில் இந்த நற்சிங்கனின் முன்னோனான நற்கொன்றன் என்னும் ஆரியப் பார்ப்பான், முதுகுடுமி மன்னனுக்காக ஒரு வேள்வி நடத்திக் கொடுத்தமைக் காக
(பரிசாக) மன்னன் பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை மான்யமாக அவ்வாரிய பார்ப்பானின் பரம்பரைக்குத் தானமாகக் கொடுத்தான் எனவும், அப்படி கிடைத்த மான்யத்தைப் பாண்டியனுக்குப் பின்வந்த களப்பிரர் என்னும் கலியரசர் பிடிங்கிக் கொண்டார் எனவும், எனவே, அதை மீண்டும் தனக்குத் திருப்பித் தர வேண்டும் எனவும் நரசிங்கன் முறையீடு செய்தான். நெடுஞ்சடை யானும் அக்கோரிக்கையை ஏற்று வேள்விக்குடியைத் திருப்பி அவ்வாரிய பார்ப்பானுக்கும் அவன் வாரிசுக்கும் அளித்தான் என்பதே செப்பேடுகள் செப்பும் செய்தி.
(குறிப்பு: களப்பிரர்களைப் பாண்டியன் கடுங்கோன் என்பவன் வென்று மீண்டும் பாண்டியர் ஆட்சியைக் கொண்டு வந்தான் (பிற்கால பாண்டியன் ஆட்சி) அவன் மரபில் வந்தவன் தான் நெடுஞ்சடையான் பராந்தகன்)
மேலும், இரண்ய கர்ப்பம் போன்ற வைதீக பாகங்கள், சடங்குகள் செய்தது; ஆரியப் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தது; மகீதலம் பொதுநீக்கி ஆண்டது; (யாருக்கும் காணியுரிமை இல்லாமல் ஒட்டுமொத்தச் சமூக உடைமை இருந்த நிலத்தைக் கைப்பற்றி, ஆரியப் பார்ப்பன வேளாளக் குடிகளுக்குக் கொடுத்தல்), குறுநில ஆளுகையைக் குலைத்தது, மண்ணின் மைந்தர்களின் நிலத்தை மனம் போனபடி ஆரியர்களுக்கு வாரி வழங்கியது போன்ற காரியங்களைப் பாண்டிய மன்னர்கள் செய்தனர்.
மாறாகக் களப்பிரர்கள், ஆரியப் பார்ப்பனர்களின் மேலாண்மைக்கு எதிராக, பண்ணை முறைக்கு எதிராக நின்று அடித்தட்டு மக்களை ஆதரித்தனர் என்கிறார் வரலாற்று ஆசிரியர் பர்ட்டன் ஸ்டெய்ன்-.-. அதுமட்டுமல்ல, களப்பிரர் காலம் முடிவுற்றதன் காரணமே, ஆரியப் பார்ப்பன நிறுவனங்களையும், இந்துத்துவத்தையும் ஏற்க மறுத்ததும், குறு மையங்களின் தலைவர்களை ஏற்க மறுத்ததுமேயாகும் என்கிறார் இவர். (Peadant
Staie g¡f«
- 77)
மேலும், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழை மாற்றியது களப்பிரர்கள்தான் என்கிறார் சீனி வேங்கிடசாமி (நாட்டார்).
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா இவற்றோடு நில்லாமல் தாழிசை, துறை, விருத்தம் எனப் புதிய பாவகைகளை உருவாக்கியவர்கள் களப்பிரர்கள். அவிநயம், காக்கைபாடினியம், நத்தகம், பல்காப்பியம், பல்காயம் போன்ற இலக்கண நூல்களையும், நரிவிருத்தம், எலிவிருத்தம், கிளிவிருத்தம் முதலிய இலக்கிய நூல்கள், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய காப்பியங்கள், விளக்கத்தார் கூத்து என்ற கூத்து கலை நூல், கார்நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி முதலிய கீழ்க்கணக்கு நூல்கள்,சிவபெருமான் திருவந்தாதி, இறையனார் களவியல் போன்றவை படைக்கப்பட்டது களப்பிரர் காலத்தில். திரமான சங்கம் மதுரையில் நிறுவப்பட்டது களப்பிரர் காலத்தில்தான். ஆக, ஆரியத்திற்கு எதிராகவும், தமிழுக்கும், அடிதட்டுத் தமிழர்க்கு ஆதரவாகவும் செயல்பட்டவர்கள் களப்பிரர்கள்.
சங்க காலத்தின் இறுதிப் பகுதி (பாண்டியர் காலம்) ஆரியப் பார்ப்பனர்களுக்குப் பொற்காலமாகவும், நற்காலமாகவும் இனித்தற்கும், களப்பிரர் காலம் அவர்களுக்குக் கசந்ததற்கும் உரிய காரணம் இப்போது புரிகிறதா?
ஆக, களப்பிரர்கள் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகச் செயல்பட்டுத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என்பதாலேதான், ஆரியர்களும் அவர்களை வெறுத்தனர்; அவர்களின் அடிவருடி குணாவும் வெறுக்கிறார். நம்மையும் வெறுக்கத் தூண்டுகிறார். எனவே, குணா ஆரிய அடிச்சுவட்டில், அவர்கள் நலம் காக்க, மிகத் திறமையாகக் காய் நகர்த்தி வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஆரியத்தை அறவே வெறுத்த பாவாணரின் பெயரைச் சொல்லிக் கொண்டே, ஆரியத்தைத் தூக்கி நிறுத்தப் பார்க்கிறார் இந்த ஆரியதாசர் குணா.
அடுத்து குணா எழுப்பும் ஒரு திசை திருப்பும் கேள்வி என்னவென்றால், ஆரியர்களா தமிழகத்தில் படையெடுத்து வந்தனர் என்பதாகும். வரலாற்று அறிவுள்ள எவரும் இப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டார்கள்.
அவன் படையெடுத்து வராமலேயே அவன் சிறு கூட்டமாக இந்தியாவிற்குள் அயல்நாட்டிலிருந்து நுழைந்த கூட்டம் என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே அவர்கள் படையெடுத்து வந்து நம்மை வெல்லவில்லை; வெல்ல வாய்ப்பும் இல்லை. ஆனால், ஆரியர்கள் படையெடுப்பெல்லாம் பண்பாட்டு படையெடுப்பு. இது ஆயுதப் படையெடுப்பைவிட ஆபத்தானது. காரணம், பண்பாட்டுப் படையெடுப்பு ஒரு இனத்தின் அனைத்து கூறுகளையும் அழித்து அடிமையாக்கி, மீள முடியாமல் செய்யும். எனவேதான் இன்னமும் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பு வீழ்ச்சியினின்று இந்த தமிழகம் மீள முடியாமல் கிடக்கிறது. அதை மீட்க பெரியார் எடுத்த முயற்சி மட்டும்தாம் தமிழ் நாடலால் வெற்றி பெற்றது. ஆரியம் தோற்றது பெரியாரிடம் மட்டுமே! அதையும் கெடுக்க குணாக்கள் என்னும் குள்ளநரிகள் கள்ளத்தனம் புரிகிறார்கள்!
தமிழும் தமிழினமும் ஆரியப் படையெடுப்பால் கெட்டனவா? திராவிடராம் கன்னடர், தெலுங்கர், மராத்தியர் ஆகியோரால் கெட்டனவா? என்று அடுத்து ஒரு வினாவை எழுப்புகிறார் குணா.
ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு; அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் அவர்களால் படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றல் என்பது இயலாத செயல் என்பதால், ஆட்சியில் இருப்போரை கைப்பற்றினர்; பின் தங்கள் கைக்குள் போட்டனர்.
ஆக, கன்னடன் ஆண்டாலும், மராட்டியன் ஆண்டாலும், பாண்டியர் ஆண்டாலும், சேரன் ஆண்டாலும், சோழன் ஆண்டாலும், தெலுங்கர் ஆண்டாலும், உண்மையில் ஆண்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்களே! இதை மறைத்து, ஆரியர் மீதான பழியை, வெறுப்பினை மாற்ற குணா மேற்கொள்ளும் தந்திரமான கேள்வியே மேற்கண்ட கேள்வி. ஆரியப் பார்ப்பனர்க்கு அடிமையாய் நின்று அவர்கள் ஆட்டுவித்தபடி ஆட்சி புரிந்தவர்களுள் முதன்மையானவர்கள் சேர மன்னர்கள். ஆரியப் பார்ப்பனர்களுக்கு அளவற்ற செல்வங்களை வாரி வழங்கினர். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் குழந்தை வேண்டி புத்திரக் காமேஷ்டி யாகம் செய்தான் (பதிற்றுப் பத்து
7)
பெருநற்கிள்ளி, இராச சூய யாகம் நடத்தினான். கரிகால் சோழன் யாகம் நடத்தி சாதனை படைத்தான்.
பாண்டியர்கள் ஆரியப் பிரியர் மட்டுமல்ல; அவர்கள் காட்டிய வைதீகப் பிடியிலும் சிக்கினர். பூதப்பாண்டியன் மனைவி உடன்கட்டை ஏறி ஆரிய நெறியை நிலைநாட்டினாள். யாகம் செய்தே பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்று பெயர் பெற்றான் பாண்டிய மன்னன்.
தெலுங்கு மன்னர்களும், கன்னட மன்னர்களும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டே கிடந்தனர். ஆரியப் பார்ப்பனர்களுக்கு வீடுகளையும், லட்சக்கணக்கான பசுக்களையும், பொற்காசுகளையும் தானமாக வழங்கியுள்ளனர். இதில் கிருஷ்ண தேவராயர் முதன்மையானவர். தனுஷ்கோடிக்குச் சென்று தன் எடையைப் போல மும்முடங்கு தங்கத்தினைத் தராசில் நிறுத்து ஆரியப் பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கியிருக்கிறான்.
மதுரையை ஆண்ட நாயக்கர்களும் ஆரியப் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே செயல்பட்டனர். திருமலை நாயக்கர் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் 64 கோபுரங்களைக் கட்ட முயன்றார். வருவாயின் பெரும்பகுதியை ஆரியர் கூறும் ஆரியச் சடங்குகளுக்குச் செலவிட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தான். தனக்கு ஆரியப் பார்ப்பனர்களையே அமைச்சர்களாக நியமித்துக் கொண்டார்.
கொள்ளையடித்தவர்களை விட்டுவிட்டு, ஏமாந்து நின்ற இளைச்சவாய் மன்னர்களைக் கன்னடர், தெலுங்கர் என்று பிரித்துக் காட்டி நம் எதிர்ப்பை, வெறுப்பை ஆரியத்தின் பக்கமிருந்து திருப்பி, இவர்கள் பக்கம் மாற்றி, ஆரியத்தைக் காப்பாற்றி, மீண்டும் அவர்களுக்கு வசதியான தடம் போட்டுத் தருகிறார் தமிழர்
போர்வையில், தமிழர் விரோத செயல்புரியும் குணா.
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
தமிழ்நாட்டில் ஒரு கோடி பரையர்கள் இருக்கிறார்கள் அனைவரும் பறை மேளம் அடித்தவர்களா? மேளம் அடிக்காத பல சேரிகள் இருக்கிறது , ஒரு சிலர் பறை அடிப்பதால் ஒட்டுமொத்தமாக அனைவரும் எப்படி பறையர்கள் ஆனார்கள் , பரையர் என்பதை மாற்றி இழிவுப் படுத்த பறையடித்ததால் பறையர் என்று உருவானது என்று உங்களை போன்ற சிந்தனையாளர்கள் திரித்து நிலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் , இதிலிருந்து உங்கள் விமர்சனங்களின் உள் நோக்கம் தெரிகிறது.
ReplyDelete