3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா - part- 3
(7.) வேதங்களின் காலத்தில், பிரம்மா என்ற கடவுளைப் பற்றிய கருத்தோ, அவருடைய முகம், தோள், தொடை, கால் முதலான இடங்களிலிருந்து இந்துக்களின் நான்கு முதன்மையான ஜாதிகள் தோன்றி வளர்ந்தன என்னும் கருத்தோ இல்லை! இந்தக் கருத்தியலே அப்போது உருவாகவில்லை.
இந்துக்களின் மூன்று கடவுளரில் ஒருவராகிய பிரம்மா மனித இனத்தை ஈன்றெடுத்த பெற்றோராகிய பிரமா, வேதங்களில் எந்த இடத்திலும் ஒரு கடவுளாகக் குறிப்பிடப்படவே இல்லை!
பிரம்மா என்பது வேத மொழியில் ஆண் பெண் பால் வேறுபாடு காட்டாத பெயர்ச் சொல்லாகும். வழிபாடு என்பது இதன் பொருளாகும்.
பிரம்மா ஆண்பால் பொருளில் வழிபாடு செய்கிறவன் என்று வருகிறது. நெருப்பு, வேள்வி இவற்றின் கடவுளாகிய அக்னி; நெருப்பு, வேள்வி இவற்றின் வழிபாட்டு முறைக்கு பிரம்மா என்று பெயர். விருகஸ்பதி, பிரிகஸ்பதி அல்லது பிரமணாஸ்பதி ஆகியவை ரிக் வேதம் முழுமையிலும் வழிபடு முறையின் தலைவனாகவே கூறப்படுகின்றன. டாக்டர் ரோத் எனும் அறிஞர், இந்த பதி கடவுளர் அனைவருமே ஏதோ ஒன்றின் எதிரொளி (பிரதிபலிப்பு) என்றும், பிற்காலத்திய கண்டுபிடிப்பு இது என்றும் முடிவு செய்கிறார். அவர் விஷ்பதி, விஷாம்பதி, மானசாஸ்பதி என்று அழைக்கப்பட்டாலும் அவர் மனிதர்களின் தலைவர்; வைஷ்வனாரா என்பது அனைத்துயிரினங்களின் முடிமன்னன்; ஜாதவேதாஸ், வேதாஸ் சாஸ்வதா இவை மனிதர்களைக் காவல் புரியும், நிலையான காவல் ஆய்வாளர்; இவர் மனிதர்களின் சமூக வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும் உதவியாகப் பயன்படுபவர்;
தொடர்ந்து வேள்வியில் பலியிடப்படும் பொருள்களை நுகர்வோர் இவரே; சொர்க்கத்தின் மகன் என்றும் இப்பூவுலகின் மகன் என்றும் இவர் பேசப்படுகிறார். இவற்றின் பெற்றோராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார்; ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்ட கடவுளாகவும் படைப்பாளராகவும் குறிப்பிடப்படுகிறார். தொன்மையுடைய சுக்தாக்கள் இயற்றப்பட்டபோது இவ்வாறு நிலைமை இருந்தது. பருப்பொருளாக விளங்குகின்ற இயற்கை, ஆற்றல் ஆகிய கடவுளருக்கு அப்பால், வழிபடுவதற்கென்றே ஒரு தனிக் கடவுள் தேவை என்ற விருப்பம், வேதங்களில் கூறப்படும் தொன்மைத் தெய்வங்களாகிய இவர்களுக்கு அப்பால் வழிபடு கடவுள் ஒருவர் தேவை என்ற விருப்பம், வெளிப்படையாக வேதங்களின் எழுத்துக்களில் தோன்றத் தொடங்கின.
பிரம்மா என்னும் செயற்பாட்டால் அக்னி - இந்தக் கடவுளாகத் தேர்வு செய்யப்பட்டான். பிராமணர்கள், முடிவில் பிரம்மாவை நுண்பொருள் வடிவிலான தனிக் கடவுளாக ஏற்றுக்கொண்டு பொது மக்களிடையே பிரம்மாவை அறிமுகப்படுத்தி விட்டார்கள். ஆனால், பிராமணர்கள் எவ்வளவுதான் பிரம்மாவைப் பெரிதுபடுத்திச் சிந்தித்து மக்களிடையே புழக்கத்தில் விட்டபோதிலும், இந்திய மக்களிடையே பிரம்மா வழிபாட்டை நிலைநிறுத்துவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் பிரம்மாவுக்கென்று ஒரேஒரு கோயில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு பிரம்மா பொதுமக்களால் வெறுக்கப்பட்டமைக்கு ஒரு காரணம் உண்டு; பிரம்மாவின் ஒழுக்கக் கேடான நடத்தைக்காக சிவன், பிரம்மாவின் ஒரு தலையை வெட்டியெறிந்து விட்டு அவனுக்குச் சாபம் கொடுத்துவிட்டதால் பிரம்மா இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்தக் கதையானது கற்பனையாகப் புனையப்பட்டுப் பிற்கால சாஸ்திரங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரம்மா (புனிதமான பொருளாகிய பிரம்மா) புனைவியலான வேதாந்தத்தின் இந்தக் கண்டுபிடிப்பு பல தெய்வ வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்; வேதங்களுக்கு மிகப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது; இந்த முறையானது, அவற்றை வேதங்களின் நோக்கம் அல்லது முடிந்த முடிபு என்ற பெயரில் ஒதுக்கி வைப்பதற்காகவே இது வடிவமைக்கப்பட்டது.
(8) இந்துக்களின் தற்காலச் சமூக, மத வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள, தொடுவதனால், உண்பதனால், தண்ணீர் குடிப்பதனால், ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குவழிப்பட்ட தீண்டாமைக் கொள்கை அல்லது தீண்டாமை என்ற அமைப்புமுறை ஜாதி இருப்பைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. இந்தத் தீண்டாமை, ஜாதிய அமைப்பு முறையை எடுத்த எடுப்பிலேயே, திடீரென்று வேதங்கள் ஏற்கவில்லை. தீண்டாமை சாதிய அமைப்பு முறை, ஆகியவை வேதப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்திருக்குமேயானால், குறிப்பாகவோ மறைமுகமாகவோ இது இடம் பெற்றிருக்கும். ஆதலின் இவை (தீண்டாமை, ஜாதி) தொன்மைக் காலத்தில் இல்லை என்பது தெளிவு.
இத்தகைய கருத்துக்களை நாம் இன்னும் எளிதாக விரிவுபடுத்திப் பார்க்க இயலும். நான் எதற்காக அவற்றையெல்லாம் இங்கு எடுத்துக்காட்டினேனோ அதற்கு இது போதும் என்று நான் கருதுகிறேன்; அதாவது ஜாதி என்பது தற்காலத்தில் எந்தப் பொருளில் எதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ அந்தப் பொருளைப் பற்றித் தொன்மைக்கால இந்தியர்களுக்குத் தெரியாது. ஜாதி என்பது அவர்கள் அறியாத ஒன்றாக இருந்தது. பிற சமுதாயங்களைச் சேர்ந்த கூட்டாளிகளைப் போல வெவ்வேறு தொழில்களும் அமைப்புகளும் அவர்களிடையே இருந்தன என்பதுவே உண்மை.
பஞ்சுக்ஷிதி, பஞ்சஜனா எனும் சொற்கள் வேதங்களில் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவை நான்கு வருணங்களைக் (ஜாதிகளை) குறிப்பவை என்று சாயன ஆச்சாரி கூறுகிறார். ஆனால் பேராசிரியர் லேசன், இது முற்றிலும் தவறான விளக்கம்; இதனை ஏற்க முடியாது என்கிறார். வேதங்களைப் பற்றிய நம்முடைய ஆராய்ச்சிக்கு இந்த உண்மையைப் பற்றிய கண்டுபிடிப்பு மிக இன்றியமையாததாக விளங்குகிறது. கடுமையான மனவேதனை தருகின்ற, தங்களைத் தாழ்த்துகின்ற ஜாதி நுகத்தடியைத் தங்கள் கழுத்திலிருந்து தாங்களாகவே தூக்கியெறிய முடியாமல் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இது உதவியாக இருக்கலாம். (வாய்ப்புண்டு).
வேதங்களை ஆராய்ந்ததன் விளைவாக நாங்கள் கண்டுபிடித்த மற்றுமோர் ஒத்த தன்மையை நான் உற்று நோக்கினேன். வேதங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் அறிவுக்குப் பொருந்தாத இந்த ஜாதி உருவாக்கம் மக்களின் கற்பனையிலோ, நடைமுறையிலோ இல்லை. மனிதனுடைய நிலைக்கு இந்த முறை உயர்த்தப்படவில்லை; (உகந்ததாகவும் இல்லை)
கடவுளின் படைப்புகளில், அவற்றில் மட்டுமே அறிவாற்றல், நேர்மை உணர்வு ஆகியவற்றையும், அவர்களுக்கு தெரிதல், அன்பு செலுத்துதல், மனமகிழ்வோடு பணிசெய்தல், படைத்தவனிடத்திலும், காப்பவனிடத்திலும் பக்தியோடிருத்தல் ஆகிய தன்மைகள் வழங்கப்பட்டன. MAN என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள MANU (உடமையாகப் பெற்றிருப்பவன்) MANA அல்லது MANAS (லத்தின் மொழியில் MENS) உள்ளம் என்று (மனம் என்று பொருள்படும் என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும் கீழ்நிலை விலங்குகளின் பெயர்கள் எல்லாம் சுவையான மொழியிலேயே அமைந்துள்ளன.
பசு, கால்நடை, அல்லது விலங்குகள் ஆகியவை மனிதனின் உடைமைகளாகக் கருதப்பட்டன. லத்தீன் மொழியில் பெசு (PECU) என்றும், பெசுனியா (PECUNIC) என்றும் அழைக்கப்படுகின்றன. வேதகாலத்து இந்தியர்கள் வேள்வியில் விலங்குகளைப் பலியிட்டார்கள். அசுவமேத யாகம் அல்லது குதிரையைப் பலியிடும் யாகம் அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது, என்பது வேதங்களில் உள்ள முகாமையான பகுதிகள் பலவற்றில் கூறப்படுகின்றது. கால்நடைகளோடு தொடர்புடைய விலங்குகளை வேள்வியில் பலியிடுவதும் அவர்களது நடைமுறையில் இருந்தது.
பரதனின் வழிவந்த அக்னியே! கருவுற்ற பசுக்களையும், காளைகளையும், ஈனாப் பசுக்களையும் வேள்வியில் பலியிடும்போது நீ முழுமையாக எங்களுக்கு உரியவனாகிறாய் என்று கிருட்சமாதா என்ற ரிசி கூறுகிறார். ஆனால், தற்காலத்தில் இந்து என்ன சொல்கிறான்? இவ்வாறு வேள்வியில் கொல்லப்பட்ட இந்த விலங்குகளை ரிசிகள் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள் என்று கூறுகிறான். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒரு சிறிய அடிப்படைச் சான்றுகூட வேதத்தில் இல்லை.
மேலும் வேள்விகளில் உயிர்ப்பலி கொடுப்பதற்காக மட்டும் இத்தகைய விலங்குகளைப் பண்டைக்காலத்து இந்தியர்கள் பயன்படுத்தவில்லை; இவற்றை உணவிற்காகவும், அவர்கள் தங்கு தடையின்றிக் கொன்றார்கள். இந்தச் செயலுக்குச் சான்றளித்து வேதங்கள் தெளிவுபடுத்துவதைப் போல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர், தொன்மைக் காலத்து இந்தியர்களிடையே மாட்டுக்கறியை உண்பதைப் பற்றி அச்சமோ, தயக்கமோ ஏதும் இல்லை என்று கூறுகிறார். இந்திரனின் சுக்தாக்கள் ஒன்றில் காணப்படும் குறிப்பை வைத்து அவர் இக்கருத்தைத் தெளிவுப்படுத்துகிறார்! ஒரு பசுவை வெட்டுவதைப் போல விருத்தனின் கால்களைத் துண்டு துண்டாக வெட்டினான் என்னும் இந்தக் குறிப்பே அவருக்குத் துணையாகின்றது.
அவருடைய ரிக்வேத மொழிபெயர்ப்பின் மூன்றாம் தொகுதியில், வேதங்களில் உள்ள மேலும் இரண்டு பகுதிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்; அவர் எடுத்துக்காட்டும் பகுதிகள், நம்முடைய துணிவான முடிவுகளின் நேர்மைத்தன்மையை உறுதி செய்கின்றன. வான்முகில்களின் கதவுகளைப் போதுமான அளவு அவன் திறந்துவிட்டான்; தண்ணீரைப் பாய் நீரோடை போல அவன் வழங்கினான்; ஆதலின் பக்திமான்களெல்லாம் உணவிற்காக இந்திரனிடம் புகலிடம் தேடினார்கள். இந்திரன் அவர்களின் உணவிற்காக கவுரா, கவாயா போன்ற விலங்குகள் அதிகம் நடமாடும் இடத்தைக் கண்டு அவர்களுக்கு அவற்றை உணவாக்கினான்.
இந்திரனைப் பணிந்து வணங்குங்கள்; இந்தத் தெய்வீகமான புனித உணவை உங்களுக்கு அளித்து அவன் உங்களைப் பெருமைப்படுத்துகிறான்! இந்த உணவு வகையில் மிக உயர்ந்தது கால்நடை (பசு, காளை)களின் இறைச்சிதான். அந்தச் சமஸ்கிருதப் பேராசிரியரின் மொழிபெயர்ப்புக்கு முற்றிலும் வேதங்களே மூல ஆவணங்களாக விளங்குகின்றன. தொன்மைக்கால இந்தியர்கள் மாட்டுக் கறியை விரும்பி உண்டனர் என்பது கேள்விக்கிடமில்லாதது! இதனால் அவர்கள் தங்களைக் கொடுமையானவர்கள் என்றோ, இரக்கமற்றவர்கள் என்றோ ஒருபோதும் கருதவில்லை. ஒரு காளை மாடானது ஒரு வண்டியில் அல்லது உழவுப் பணியில் நாள் முழுவதும் துன்பப்படுவதைவிட அதனை வெட்டுகின்றவன் விடுகின்ற குத்து, அடி, வெட்டு என்று அவனது கொலைக் கருவிகளின் மூலமாகத் தருகின்ற துன்பம் மிகக் குறைவுதான்; அல்லது இரைதேடி வருகின்ற காட்டு விலங்குடன் அந்தக் காளை மாடு சிக்கிக் கொண்டு அது நடத்துகின்ற சண்டை மிகப் பெரிய துன்பத்தைத் தருவதாகும். (இதனால் இறைச்சிக்காக அவர்கள் மாட்டைக் கொல்வது, அதன் துன்பத்தைத் தணிப்பதற்காக என்னும் கருத்துடையவர்கள் என்பது பெறப்படுகின்றது.) கீழ்க்காணும் பகுதி நமக்கு ஒரு தெளிவைத் தருகின்றது. இதைப் பற்றிய ஒரு புரிதலை நமக்கு வழங்குகிறது. ஆப்பிரிக்க கொலம்பஸ் என்று அழைக்கப்படுகின்ற டாக்டர் லிவிங்ஸ்டன் அவர்களின் சுற்றுப் பயண நூல்களின் ஒரு தொகுதியில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது:
அந்தச் சிங்கம் திடீரென்று பாய்ந்து என் தோளைப் பற்றிக்கொண்டது; நாங்கள் இருவரும் ஒன்றாகத் தரையில் சாய்ந்தோம். என் காதருகில் பயங்கர சத்தத்துடன், ஒரு வலிமையான நாய் எலியைப் பிடித்து கவ்வி ஆட்டுவதைப் போல அந்தச் சிங்கம் என்னைப் பற்றி ஆட்டியசைத்தது. பூனை எலியைக் கவ்வி ஆட்டிய முதல் ஆட்டத்திலேயே அந்த எலி ஒரு மயக்க நிலைக்குப் போய்விடுவதைப்போல, அந்த அதிர்ச்சியால் மயக்க நிலைக்கு நான் போய்விட்டேன். அது ஒரு கனவு நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது. அந்த நிலையில் வலி உணர்வு தெரியவில்லை; அச்சம் என்ற உணர்வில்லை;
ஆனால் என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. ஒரு நோயாளிக்குப் பாதி மயக்க மருந்து (குளோரோபார்ம்) கொடுத்த நிலையில், பாதி மயங்கிய நிலையில் அவரால் தனக்குச் செய்யப்படும் அறுவை மருத்துவத்தைக் கண்களால் பார்க்க முடியும்; ஆனால் கத்தியால் ஏற்படும் வலி தெரியாது; இதைப் போல எனது நிலை இருந்தது. அந்த அசைவு ஆட்டம் அச்சத்தைப் போக்கிவிட்டது. அந்த விலங்கை இப்போது அருகில் நின்று பார்ப்பதால் அச்ச உணர்வே சிறிதும் இல்லாதவாறு அந்த முதல் ஆட்டம் செய்துவிட்டது. மற்றவற்றின் இறைச்சியை உண்ணுகின்ற விலங்குகளால் கொல்லப்படுகின்ற பிற விலங்குகள் அனைத்திற்கும் இந்த உணர்வே ஏற்படும். அதனால் பெருந்தன்மை வாய்ந்த நம் படைப்புக் கடவுள், மரணத்தின் வலியைக் குறைப்பதற்காக, நமக்கு முன்னேற்பாடாகச் செய்து கொடுத்த இரக்கமுடைய வழிவகை இதுவாகும்.
இதிலிருந்து என்ன கருத்தைப் பெறமுடியும் என்பதை இங்கே கூடியுள்ள பெருமக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இங்கு, குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் உருவாக்கம் ஆனவுடன் அவற்றின் மீதான ஆளுமையைப் பண்டைக்கால ஆரியர்கள் தொடர்ந்து பாதுகாத்து வந்தார்கள். அவற்றைத் தங்களின் பணியாளர்களாகவும், மனிதர்களின் உதவியாளர்களாகவும், உழைப்பிற்காகவும் தங்கள் உணவிற்காகவும் ஆரியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மனித உயிர் இடம் விட்டு இடம் பெயர்ந்து வேறோர் உருவமாக விலங்காகவோ, பயிர்களாகவோ மறுபிறப்புக் கொள்ளும் என்ற கருத்துத் தோன்றாத காலம் அது. உயிர், கூடுவிட்டுக் கூடு பாயும் என்ற கோட்பாடு, தொன்மைக்கால வேதங்களில் (இசைப் பாடல்களில்) எந்த இடத்திலும் இல்லை; ஒரு சிறு அடையாளத்தைக்கூட அவற்றில் காண முடியவில்லை.
அங்கிரர், ரிபஸ், சுதன்வன் ஆகியோருடைய மகன்கள்.இறுதியாக ஏழு ரிசிகளின் மகன்கள் ஆகியோர் தெய்வீகத் தன்மை வாய்ந்த விண்மீன்களாக உயர்த்தப்பட்டனர். இக்கருத்தானது மனித ஆன்மாவைத் தெய்வீகப் பொருளாக ஈர்த்துக் கொள்ளுதல் என்னும் கோட்பாட்டிற்கு எதிரானது. இதன்பின் உயிர்களின் கூடுவிட்டுக் கூடுபாய்தல் கொள்கை கண்டுபிடிக்கப்பட்டுப் பரப்பப்பட்டது. இது இந்துக்களின் அறிவின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்துவிட்டது. விலங்குகளை மனித நிலைக்கு உயர்த்திக் கொண்டுவந்த செயலானது மனிதனை விலங்கு நிலைக்குத் தாழ்த்திவிட்டது.
இது மனிதப் படைப்பில், மனிதனது உயர்நிலையைச் சரியான நிலையைப் புரிந்துகொள்ள விடாமல் அவனை முழுமையாக நீண்ட தொலைவில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. அது மனிதனை அலங்கோலமாக்கிச் சிதைத்துச் சீர்குலைத்து, விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன முதலான உயிரினங்களின் இழிந்த நிலைக்குத் தள்ளிவிட்டது; மற்ற விலங்குகளின் இழிந்த நிலைக்கு மனிதனை இறக்கிவிட்டது; தாவரங்களைப் போன்ற விலங்குகளின் நிலைக்கு, தாவர வகையில் ஒவ்வோர் உயிரிவகைக்கும் கீழான நிலைக்கு இந்துக்களைத் தள்ளிவிட்டது. இப்போது நான் அறிவுத்திறன் மிகுந்த மனிதனாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்; ஆனால், விரைவில் (மறுபிறப்பில்) குறும்பு செய்யும் ஒரு குரங்காக நான் பிறக்கலாம்!
தற்போது நான் இளகிய மனம் படைத்த ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அடுத்து வரும் பிறவியில் கொள்ளையடித்துக் கொண்டு போகும் குள்ளநரியாகலாம்! இப்போது நான் நன்கு படிக்கும் மாணவன்; அடுத்து வரும் ஆண்டில் நான் முட்டாள்தனமான ஓர் எருமையாக இருப்பேன்! இப்போது நான் விளையாடி மகிழும் ஒரு சிறுமி; அடுத்த பிறவியில் நான் துள்ளிக் குதித்தோடும் ஒரு வெள்ளாடு! கரைந்து பறந்தோடும் அதோ அந்தக் காகம், காலஞ்சென்ற என் தந்தையாக இருக்கலாம்! பசியோடு அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பூனை, அன்பு நிறைந்த என் அம்மாவாக இருக்கலாம்! அதோ சீற்றம் கொண்ட அந்தக் கரடி, ஒரு காலத்தில் எனக்கு அண்ணனாக இருந்தது! ஊர்ந்து வருகின்ற பாம்பு, காலஞ்சென்ற என் தங்கை! மறுபிறப்புக் கோட்பாட்டின் சரியான வாசகங்கள் இவை!
இந்த நாட்டின் மக்களிடையே தற்போதும் நடைமுறையிலிருக்கும் நம்பிக்கை இது! ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கும் கீழாக விலங்குகளைவிடக் கேவலமான அடிமைத் தன்மையும் அச்சமும் கொண்ட மக்களாக இந்த நம்பிக்கை அவர்களைக் கீழ்நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. தற்போதைய ஜாதிய நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கும் இவற்றைப் பாதுகாக்கின்ற நிறுவனங்களுக்கும் ஏற்ப இவை அமைந்துள்ளன. அதே நேரத்தில், இந்த நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்கள் இவர்களின் வாழ்விடங்களுக்குள் வந்துவிட்டாலும் அவற்றை இவர்கள் கொல்வதில்லை; இது வேதத்தின் கருத்தியலுக்கு எதிரானதாகும்.
(பாம்பின் நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் வழிவகையைப் பற்றி ரிக் வேதம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. மேலும், நச்சுப் பாம்புகளை அடித்துக் கொல்வதைப் பற்றியும் வேதம் விளக்குகிறது.)
நம் கவனத்தை ஈர்க்கின்ற சுவை மிகுந்த கண்டுபிடிப்புகள் பலவற்றை வேதங்களை ஆராய்ந்ததன் வழியாக நாம் பெற்றுள்ளோம். சதி எனும் கொடுமைச் சடங்கிற்கு வேதம் ஒப்புதல் தரவில்லை; வேதத்தின் எந்த இடத்திலும் சதியை (உடன்கட்டை ஏற்றுதல்) ஏற்றுக் கொண்டமைக்கான சான்று இல்லை. இருந்தபோதிலும் வேதங்களிலிருந்து சில பகுதிகளை பிராமணர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டி. இவை கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றுமாறு கூறுகின்றன என்று எடுத்துக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளை ஆழ்ந்து ஆராய்ந்த பேராசிரியர் வில்சன், பிராமணர்கள் எடுத்துக் காட்டும் இந்தப் பகுதிகளெல்லாம் கைம்பெண்களைப் பேணிக் காப்பாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகின்றனவே தவிர அவர்களை எரித்துக் கொல்வதைப் பற்றியல்ல என்று தெளிவாகக் கூறுகிறார். அறிஞர் கோல்புரூக் எடுத்துக்காட்டும் அந்தப் பிராமண மொழிபெயர்ப்பு வருமாறு: ஓம்! இந்தப் பெண்கள் விதவைகளாக்கப்படக் கூடாது; அவர்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டு தங்களை ஒப்பனை செய்து கொண்ட நல்ல மனைவியர்கள்; நெய்க் கிண்ணங்களைக் கையில் ஏந்தியவாறு அவர்கள் இதோ எரிந்து கொண்டிருக்கின்ற இந்த நெருப்பிற்குத் தங்களை ஒப்படைக்கப் போகிறார்கள்! அவர்கள் அழிவற்றவர்கள்; குழந்தைகள் இருக்கிறார்கள்! கணவன்மார் இருக்கிறார்கள். நல்ல அணிமணிகளால் தங்களை ஒப்பனை செய்துகொண்ட அவர்கள், இதோ இந்த நெருப்பில் இறங்கட்டும்! அதன் மூலக்கூறு தண்ணீர்தானே! மொழிநூல் அடிப்படையிலான, திறனாய்வு வழிப்பட்ட இதன் மொழிபெயர்ப்பு வருமாறு:
இந்தப் பெண்கள் எல்லாம், விதவைகளல்லர்; ஆனால் நல்ல கணவன்மாரைப் பெற்றிருக்கிறார்கள்! கைகளில் எண்ணெய்க் கிண்ணத்தோடும் வெண்ணெய்யோடும் அருகில் வரட்டும்! பிள்ளைப் பேறடைந்து தாயானவர்கள், முதலில் அந்த வழிபாட்டு இடத்திற்குச் செல்வார்களாக! துன்பமோ கவலையோ இல்லாமல், அணிமணிகள் பூண்டு தங்களை நன்கு ஒப்பனை செய்து கொண்டு செல்வார்களாக! இப்பகுதி மிருத்யூ என்பவருக்கு அல்லது மரணத்திற்குச் சொல்லப்பட்ட ஓர் இசைப் பாடலில் இடம் பெற்றுள்ளது ரிக் வேத பிராமணர்களால் இறுதிச் சடங்கின்போது இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தப் பகுதியின் பொருள் மாற்றிக்கொள்ளப்பட்டதற்குச் சொற்களின் உருத்திரிபே காரணமாக இருக்கலாம். (ஹபசந என்பதற்குப் பதிலாக ஹபநோ என்று பொருள் கொண்டார்கள்) தாய்மார்கள் முதலில் அந்த வழிபாட்டு இடத்திற்குச் செல்வார்களாக! என்ற தொடர், தாய்மார்கள் முதலில், அந்த நெருப்பின் கருவறைக்குள் செல்வார்களாக என்று படிக்கப்பட்டதன் விளைவாகப் பொருள் மாறாட்டம் ஏற்பட்டிருக்கலாம். டாக்டர் முல்லர் மிக நன்றாகவே சொன்னார்: பழி பாவங்களுக்கு அஞ்சாத புரோகித வர்க்கத்தால் செய்ய முடிந்த மிக மிக இழிந்த செயல் இதுவாகத்தான் இருக்க முடியும்.
மேல் எடுத்துக்காட்டிய அந்தப் பகுதி இழப்புக்குஆளான கைம்பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், அவளிடம் துக்கம் விசாரிக்க வந்த இழப்புக்கு ஆளாகாத பெண்களைப் பற்றிப் பேசுவது. கையற்ற நிலையில் உள்ள அந்தக் கைம்பெண்ணை நோக்கி ரிக் வேதம் இவ்வாறு கூறுகிறது:
பெண்ணே நீ எழுக! இந்த உலக வாழ்க்கைக்கு வா! எவனுடைய அருகில் நீ துயில் கொண்டிருந்தாயோ அவனது வாழ்க்கை இப்போது முடிந்துபோய்விட்டது. எழுந்து வா! எங்களோடு இணைந்துகொள்! உன் கைகளைப் பற்றி உனக்குத் தாய்மைப் பேற்றை நல்கிய உன் கணவனுக்கு மனைவி என்ற முறையில் நீ அனைத்துக் கடமைகளையும் அவனுக்குச் செய்து முடித்திருக்கிறாய் அக்கறையோடு விடுக்கப்படும் இந்த அழைப்பில் அன்பும் இரக்கமும் கலந்த இனிமையான வெளிப்பாட்டைக் காண முடிகிறது. குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்ட (சதிக்கு) இக்கைம்பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கெட்ட பெயர், இந்துத்துவத்தின் பழைய தொன்மையான வடிவங்களில் இல்லை. உடன்கட்டை ஏறுதலுக்கு (அல்லது) சதி நடந்ததற்கான சான்றோ அல்லது அது நடத்தப்பட வேண்டும் என்ற கட்டளையோ மனுதருமத்தில்கூட இல்லை.
உடன்கட்டை ஏற்றுதல் நிகழ்வில் இன்று நடைபெறுவதைப் போல, அன்றும் ஆண்களை உயிர்ப்பலி கொடுக்கும் முறையை வேதங்கள் நேரடியாகவே, வெளிப்படையாகவே ஊக்கப்படுத்துகின்றன என்பதை என்னால் மறுக்க இயலவில்லை; அதற்காக நான் வருந்துகிறேன். மனித உயிர்ப் பலி அல்லது நர்மேதா என்று அதற்குப் பெயர். ரிக் வேதத்தின் முதல் அஷ்டகாவில், ஒரு மதச் சடங்கு நிகழ்வில் மனித உயிர்ப்பலி பற்றிய குறிப்பு வருகிறது. அஜிகார்த்தா என்பவனின் மகனான சுனாசெபாஸ் உயிர்ப்பலி கொடுக்கப்படுகின்ற கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுப் பலியிடப் போகின்ற மதச் சடங்கின்போது அவன் வேத இசைப் பாடல்களை இடைவிடாது ஓதிக் கொண்டிருந்தான் என்பதை ரிக் வேதத்தின் பலஇசைப் பாடல்கள் கூறுகின்றன.
இந்த மதச் சடங்கு ஏறக்குறைய வேத காலத்திலிருந்து இன்றுவரை இந்தியர்களிடையே தொடர்ந்து இருந்துவருகிறது. (எலிபென்டா குகைச் சிற்பங்களில் சிவன், பைரவர் வடிவில் ஒரு குழந்தையைப் பலியிடப் போகிற காட்சி காணப்படுகிறது. தன் ஒரு கையில் பலியிடப் போகிற குழந்தையைப் பைரவர் பிடித்திருக்கிறான்; மற்றொரு கையில் அந்தக் குழந்தையை வெட்டுவதற்குக் கூர்மையான வாளை வைத்திருக்கிறான்; மூன்றாவது கையில், நிகழ்வைத் தெரிவிக்கும் மணி; நான்காவது கையில் வெட்டப்படும் குழந்தையின் குருதியைப் பிடிப்பதற்காக ஒரு பாத்திரம்; இவ்வாறாக அந்தச் சிற்பம் மேலும் நான்கு கைகளுடன் மொத்தம் எட்டுக்கைச் சிற்பமாக பைரவனாகச் சிவன் செதுக்கப்பட்டுள்ளான்.)
குழந்தைத் திருமணங்கள் எவையேனும் வேதகாலத்தில் நடந்திருக்குமேயானால் அவை ஒருபோதும் கட்டாயப்படுத்தப் பட்டவையாக இருக்கவில்லை. பின்வரும் பகுதி அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது; நல்லொழுக்கமுடையவளாகப் பெண் தன் பெற்றோருடன் ஒரே வீட்டில் வளர்ந்து வருகிறாள்; அவர்களின் நல்லாதரவை நாடுபவளாக அவள் இருக்கிறாள்; ஆதலின் செல்வம் வேண்டி நீ எங்களிடம் வருவாயாக. வேதத்தில், பெண் ஆரியர்களின் குடும்ப விளக்காகக் காட்டப்படுகிறாள்; அவளுடைய இன்றியமையாச் சிறப்பும், அவள் பெற்ற அன்பும் அய்யப்பாட்டிற்கிடமில்லாத அடையாளங்களாக அமைகின்றன.
பெண்ணுக்குப் பெற்றோர் அடிக்கடி பொருள் கொடுத்து உதவினார்கள்; அது அவளுக்கென்று ஒதுக்கப்பட்டது. அவள் கணவனது உடைமையை விடத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அது இருந்தது. தற்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தனிமைச் சிறையில் இருப்பதைப் போன்ற துன்பங்களை அன்று அவள் அனுபவிக்கவில்லை. மதச் சடங்குகளில் கூடத் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதற்கு அன்று பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பேராசிரியர் வில்சன், இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்; சட்டம், மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதைத் தடை செய்கிறது; திருமணத்தில் அவர்கள் பங்கேற்கலாம்; புனிதமான, வேத மந்திரங்களைப் பெண்கள் ஓதக் கூடாது என்று சட்டம் தடைசெய்கிறது என்று கூறுகிறார்.
வேத காலத்து ஆரியர்களால் நிறுவப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வந்த மதத்தின் செல்நெறியானது, மதப் பற்றற்ற ஒரு காலம் நிலவிய தொன்மைமிக்க அந்தக் காலத்தில் கூட, பிற்காலத்து இந்துக்கள் பின்பற்றிவரும் மதச் செயற்பாடுகளைவிட மிக எளிமையானதாகவும், திறன்மிக்கதாகவும் அமைந்திருந்தது.
முப்பத்துமூன்று கடவுளர்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். சொர்க்கத்தில் 11 கடவுள்கள்; இந்தப் பூமியில் 11 கடவுள்கள்; நடுவானில் புகழோடு விளங்கும் 11 கடவுள்கள். ஆக முப்பத்து மூவரும் ஆகிய நீங்கள், நாங்கள் கொடுக்கும் இந்த உயிர்ப்பலியால் மகிழ்ச்சியடைவீர்களாக, என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
பிற்காலத்து இந்துக்கள் தம் மனம்போன போக்கில் ஏழு சுழியங்களை (சைபர்களை) இந்த 33 உடன் சேர்த்து 330,000,000 கடவுளர்களாகப் பெருக்கிக் கொண்டார்கள். சொல்வதற்கு இது எளிமையாக இருக்கிறது என்பதற்காக இப்படிப் பெருக்கிக் கொண்டார்கள். ரிக் வேதத்திலேயே இவ்வாறு கடவுளரின் எண்ணிக்கையை மனம்போன போக்கில் பெருக்கிக் கொண்டமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.
வேதங்களின் பல பகுதிகளில், சொர்க்கத்தையும், இந்தப் பூமியையும் மூலக் கடவுளர்களாகக் (பெற்றோர் கடவுள்) குறிப்பிடுகின்றனர். மற்ற கடவுளர்கள் எல்லாம் இவர்களின் புதல்வர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. மற்ற கடவுளர்களும் வேதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். முப்பெருங் கடவுளர்களாக நம் கவனத்திற்குக் கொண்டு வரப்படும் மூவரும், கொள்கை வழியாகத் தொடர்புடையவர்களல்லர். கருத்து வழியாகத் தொடர்புடையவர்களுமல்லர். அவர்களில் இந்திரன் நம்முடைய வான்வெளிக் கடவுள், வான் முகில்களைத் தனது இடிமுழக்கத்தால் துளைத்து, (இடி என்பது இந்திரனின் உதவியாளர் துவாஸ்திரி) மழைச் செல்வத்தைக் கொட்டுமாறு அவர்களைத் தூண்டுகிறான்.
கிரேக்கர்களின் அவ்ரணா என்பது வருணா - வருணபகவான் சொர்க்கத்தின் மேற்கூரைக் கடவுள்; வெப்பம் - நெருப்பின் கடவுளாகிய அக்னி (லத்தீனில் இக்னிஸ்) அக்னியின் வேலை புரோகிதம் செய்தல், தன்வயப்படுத்திக் கொள்ளல், மற்ற கடவுளர்க்குத் தகவல் தெரிவிப்பவராக இருப்பது அல்லது கொடுப்பவர். அதாவது அனைத்து உயிர்ப்பலிகளையும் மற்ற கடவுளர்க்கு வழங்குபவர். இந்தக் கடவுளர்களுக்கெல்லாம் முறையே இந்திராணி (இந்திரன்), வருணானி (வருணன்), அக்னாயி (அக்னி) என்று மனைவியர் உள்ளனர். இந்திரனோடு தொடர்பு கொண்டவரும் அடிக்கடி அவனுக்குத் துணையாயிருப்பவரும் ஆகிய, காற்றுக் கடவுளாகிய வாயு; சிவனின் இன்னொரு பெயராகிய ருத்ரா வேதங்களில் காணப்படாத பெயர் இது; அப்போது ருத்ரனைப் பற்றி எவருக்கும் தெரியாது. ருத்ரன் சீறும் புயல்களின் கடவுள்; மாருட்ஸ் அல்லது தென்றல். இவர்கள் ருத்ரனின் மகன்கள்; வான்வெளி மண்டலத்தின் கடவுள் விஷ்ணு. ஒளியின் கடவுளர்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றனர்; அவர்கள் சூரா அல்லது சூரியா, சூரியன் எனப்படுகின்றனர்.
சூரியனின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற விளைவுகளின் அடிப்படையில், நாளும் பொழுதும் மாதமும், பருவமும் அடைகின்ற முன்னேற்றங்களினால் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டன. உஷா என்றும் புலரும்பொழுது என்றும் அஷ்வின்ஸ் அல்லது குதிரைகள் பூட்டிய தேர் மீதமர்ந்து செல்வோன் என்றும், முன்னோடி வருகின்ற சூரியக் கதிர்கள் என்றும் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன; சந்திரமாஸ் அல்லது நிலாவும் கூடப் புலரும் பொழுதின் முன்னோடியாகக் கருதப்பட்டது. சந்திரமாஸ் (சந்திரன்) என்பது சமஸ்கிருதத்தில் ஆண்பால்! பேராசிரியர் லேசன் சந்தார் (உயனேடிச). ஒளி வெளிச்சம் என்று பொருள்படும் லத்தீன் மொழியிலிருந்து வந்தது என்கிறார். உயர்வுபடுத்திக் கூறப்படும் சூரிய ஒளிக்கதிர்கள் வாசுஸ் எனப்பட்டன. நக்தா அல்லது (சூபைவ) இரவு என்பது பெண்பாற் கடவுள்! நக்தா என்பது லத்தீன் மொழியிலுள்ள நாக்சு என்ற சொல்லோடும் கிரேக்கமொழிச் சொல்லாகிய நிக்த் என்பதனோடும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். எமா (எமன்) மனிதர்களின் விதியை முடிவு செய்யும் கடவுள்; யாமி என்பது எமனுடைய மனைவி; மிருத்யா என்பது மரணம்; இவை யாவும் அன்று வழக்காற்றில் வந்துவிட்டன. சுக்ரா என்பது சமஸ்கிருதத்தில் ஆண்பால்; (கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது (எநரேள-கோள்) சுக்ரா என்பது வெள்ளிக் கோள்; சோமபானத்தால் சுக்கிரன் போதையூட்டப்பட்டதாக சாம வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
சோம பானத்தின் கடவுள் சோமன்; சில இடங்களில் நிலாவைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரகஸ்பதி, வேதங்களில் வியாழன் (துரயீவைநச) என்னும் கோளாகக் குறிக்கப்படவில்லை. அக்னியின் மற்றொரு பெயராகிய வழிபாட்டின் கடவுள்; (வழிபடு முறைக்குக் கடவுள் என்று பெயர்). இதற்கு வேறு பல பெயர்களும் உண்டு; பிரம்மா என்பதைப் பற்றி முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம். பின்னர், சரஸ்வதி, பிரம்மாவின் மனைவியாகிறாள்; இவள் சொல்லாற்றல் சொல்வன்மையின் கடவுள். இலா அல்லது இடா என்பவற்றோடும் பாரதி (பூமி) என்பதனோடும் தொடர்புபடுத்தப் படுகிறாள். இவர்கள் இசைப்பாடலின் தெய்வங்கள்! அபா என்பது தண்ணீர்; இது பன்மையில் வருகிறது தண்ணீர்கள்; மிக உயர்வுபடுத்திக் கூறப்படுகிறது.
அப்தியாஸ் என்பவர்கள் தண்ணீரின் கடவுள்கள். விஷ்வ தேவர் என்பவர்கள் ஒட்டுமொத்தக் கடவுளர்களாகச் சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்றனர். சில நேரங்களில் மனிதரைப் பாதுகாக்கும் சிறப்புக் கடவுளராகவும் இவர்கள் குறிக்கப்படுகின்றனர். பார்சி இனத்தவரின் அம்சாஸ்பாண்ட்ஸ், இசாட்ஸ் ஆகியவற்றோடு இவை உறவுடையவை என்று நான் கருதுகிறேன். புனைந்து மேம்படுத்தப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்க மற்றொரு கடவுள் ஆகா (ஹபாய) என்பது. இது தீமையின் கடவுளாகும். இது பெண்பாற் கடவுள்; பார்சிகளின் அஃகி ரிமான் என்பதனோடு இது தொடர்புடையதாகும்.
சிந்து அல்லது இண்டஸ் ஆறு ஒரு கடவுள்; வேதங்களில் கூறப்படுகின்ற மற்ற ஆறுகளும் கடவுளர்களே! அனைத்தும் பெண்பாற் கடவுளர்கள். கடலும் ஒரு புனிதமான தெய்வம்! பிட்ரிஸ் (பிதிர்கள்) அல்லது சிறந்த முன்னோர்கள், பார்சிகளின் ஃபாருகான்சை ஒத்தவர்கள். அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். வாசுக்கள் எனப்படுவோர், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சூரியக் கதிர்கள் ஆவர்; இவர்களும் அவர்களைப் போலவே கடவுளராவர். ரிபூ என்போர், தெய்வத் தன்மை பொருந்திய மனிதர்கள்; பின்னர் இவர்கள் விண்மீன் குழுக்களில் ஒன்றில் முதன்மை மீன்களாக மாறியவர்கள். இனிமேலும் வேதக் கடவுளர்களைப் பற்றி விரித்துரைக்க நான் விரும்பவில்லை.
இந்துக்களின் முதன்மை-யான கடவுளரில் பலர் வேதங்களில் ஒருமுறைகூடக் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் கோடிட்டுக் காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். மேலும் அவை பிற்காலத்தவரின் கண்டுபிடிப்புகள் என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது. வேதங்களில் நாம் சிவனைக் காண முடியவில்லை; வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற ருத்ரனைச் சிவனாகப் பிராமணர்கள் காட்ட விரும்புகிறார்கள். சிவனுடைய குடும்ப உறுப்பினர்களான அவன் மனைவியர்கள் துர்கா அல்லது காளி, அவன் மகன்கள் கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் எவரையும் வேதங்களில் காணமுடியவில்லை.
வேதங்களில் நாராயணன் இல்லை; வேதங்களில் வருகின்ற விஷ்ணு, இன்று மும்மூர்த்திகளில் ஒருவராகக் காட்டப்படுகின்ற விஷ்ணு அல்ல; இருவரும் வெவ்வேறு பண்புடையவர்கள். இராமனும், கிருஷ்ணனும் வேதங்களில் இல்லை. அதன் பின்னர், தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட வீரர்களாக, விஷ்ணுவின் அவதாரங்களாக அவர்கள் புகழப்பட்டார்கள். வேதங்களில், விண்கோள்கள், தெய்வங்களாக்கப்பட்ட விண்கோள்களையும், இந்துக்களின் பல சிறு தெய்வங்களையும் நாம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வேதங்கள் இந்தக் கடவுளர்களைக் கையாண்டுள்ள முறை மிகவும் சுவை பயப்பதாகும். இது பல தெய்வ வழிபாட்டு முறை, புராணப் புனைகதைகள் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ளப் பேருதவியாய் இருக்கின்றது. பொதுவாகப் பல்வேறு பொருள்கள், ஆற்றல்கள், முகவர்கள், இயற்கையின் செயற்பாடுகள் ஆகியவற்றிற்குத் தெய்வீகத் தன்மையை ஏற்றி இவற்றை வான் மண்டலத்தோடு தொடர்புபடுத்தி வைத்துவிட்டனர். கடவுளின் தெய்வீகத் தன்மையையும், எங்கும் நிறைந்திருக்கும் இயல்பையும் உணர்ந்து கொள்ளத் தவறுகின்றவர்கள் அல்லது ஏற்க மறுக்கின்றவர்கள் மரபுவழியாக அதாவது வழிவழியாகச் சில கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ள ஆற்றலையும் புகழையும் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டி அவற்றைப் பல்வேறு தெய்வங்களின் அறிவார்ந்த செயல்களாக ஏற்றிவிட்டனர்.
இது ஓரளவுக்குக் குறிப்பாகவும், கவிதைவகை விளக்கமாகவும் உயர்வு நவிற்சியாகவும் கலந்து காலப்போக்கில், உயிர் வாழும் மாந்தரின் வெளிப்பாடெனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டது. இந்த நகரத்தின் படித்த இளைஞர்களை, வேதமதத்தின் இந்த இயல்புகளை ஆராய வேண்டுமென்று என் சொற்பொழிவுகளின் வாயிலாக நான் வலியுறுத்தி வந்தேன். டாக்டர் மாக்ஸ் முல்லர், 1856இல் ஆக்ஸ்போர்டு கட்டுரைகள் 1856 என்ற நூலில், ஒப்பியல் நோக்கில் புராணப் புனைவியல் என்ற தலைப்பில் வேதமதத்தின் இயல்புகளை வியக்கத்தக்க முறையில் ஆராய்கின்றார். மிகச் சிறந்த அந்த ஆவணத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்;
நல்வாய்ப்பாக மத அமைப்பு முறையோ, புராணப் புனைவியலோ வேதத்தில் இல்லை; வேத இசைப்பாடல் சிலவற்றில் காணப்படும் பெயர்கள் மக்களின் பொதுப் பெயர்களாகவும், வேறு சிலவற்றில் கடவுளரின் பெயர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே கடவுள் சில இடங்களில் தலைமைக் கடவுளாகவும், சில இடங்களில் சமநிலையில் உள்ள கடவுளாகவும், வேறுசில இடங்களில் மற்ற கடவுளர்க்குக் கீழ்நிலையில் உள்ள கடவுளாகவும் காட்டப்படுகிறார். கடவுளர்களாகக் காட்டப்படுகிற இவர்களின் முழுத் தன்மைகளும், இயல்புகளும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. அவர்களின் மூதாதையர் வழி மரபு வரலாறு இல்லை!
ஆண் கடவுளர்களுக்கும், பெண் கடவுளர்களுக்கும் முறையாக முடிவு செய்யப்படுகின்ற திருமணங்கள் காணப்படவில்லை; தந்தை சில இடங்களில் மகனாகவும், சகோதரன் கணவனாகவும், ஒரு வேத இசைப் பாடலில் தாயாக வருபவள், மற்றோரிடத்தில் மனைவியாகவும் இருக்கிறார்கள். அதை எழுதிய கவிஞனின் சிந்தனை மாறுபடுகிறபோது இந்தக் கடவுளரின் இயல்புகளும் தன்மைகளும் மாறுபடுகின்றன.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஓமர் எனும் கவிஞரின் கவிதைகளுக்கு அடிப்படையாக அமைந்தவை புராணக் கதைகளே. ஓமரின் கவிதைகளில் முழு வளர்ச்சி நிலையை அடைந்து அதன் பின்னர் வீழ்ச்சியடைந்துவிட்ட புராணக்கதைகளையும், வேதங்களில் வளர்க்கப்பட்டுவந்த புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும்போது இந்தியாவின் தொன்மைக்காலக் கவிதைகளுக்கும், தொன்மைக் காலக் கிரேக்க இலக்கியங்களுக்கும் மிக நீண்ட இடைவெளி இருப்பதை நாம் தெளிவாக உணர முடிகின்றது. வேதம் என்பது ஆரிய இனத்தவரின் உண்மையான இறைமரபுக் காவியம் (தெய்வப் பரம்பரைக் கவிதைகள்); கிரேக்க ஈசியாட் என்பது மூலப் படிவங்களின் உருச்சிதைவிற்குள்ளான கேலிச் சித்திரங்கள். மனித மனம், ஒரு புனிதமான ஆற்றலைப் பற்றிய இயல்பான விழிப்பு நிலையில் இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத வகையில் வலிமையான மொழி ஆற்றலால், இயற்கைக்கு மாறான, புலனாகாத நுண்பொருட் கருத்துக்களால் இழுத்துச் செல்லப்படுவதை அறிய வேண்டுமானால் நாம் வேதத்தைப் படிக்க வேண்டும்.
இந்துக்கள் எதை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு நாம் சொல்ல விரும்பினால் அவர்கள் வழிபட்டுக் கொண்டிருப்பவை, குறிப்பிடத்தக்க இயற்கை நிகழ்வுகளின் வெறும் பெயர்கள்தான்! அவை தெளிவற்றதோர் இருண்மை நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உயர்வுபடுத்தப்பட்டுப் படிப்படியாகத் தெய்வீக நிலைக்கு ஏற்றப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள அவர்கள் வேதத்தைப் படிக்குமாறு நாம் செய்ய வேண்டும். பண்டைக்கால மதகுருமார்கள், மாற்று மதக் கடவுளர்களை (புறச் சமயக் கடவுளரை)ப் பேய் பூதங்களாக, கெட்ட ஆவிகளாக எண்ணிப் பரப்பியது மிகப் பெரிய தவறாகும். இதே தவறை, இந்துக் கடவுளர்களைப் பற்றி நாமும் செய்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயாஸ், எமேரா, நிக்ஸ், அபேதா ஆகியோரைப் போலப் பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட கடவுளர்களாக இந்துக் கடவுளர்களைக் கருத இயலாது. அவர்கள் நடிகர்களில்லாத வெறும் முகமூடிகள்; அவர்கள் மனிதர்களின் படைப்புகள்; அவர்கள் மனிதர்களைப் படைத்தவர்களல்லர். அவர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே! தெய்வத்தன்மை சார்ந்தவர்களல்லர்! உயிர்கள் இல்லாத பெயர்கள்! பெயர்கள் இல்லாத உயிர்களுமல்ல!
இதேமுறையில்தான் புராணக் கதைப் புனைவுகளின் தோற்றத்தைப் பற்றியும் வேதங்கள் விளக்குகின்றன. ஆன்ம நேய அனைத்து இறைக் கோட்பாட்டின் (பல தெய் வழிபாடு) தோற்றம் பற்றியும் அவை நமக்குத் தெளிவாக விளக்குகின்றன. இக்கோட்பாட்டினைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளவாறு வேதங்கள் உறுதியாக ஆணித்தரமாக எதனையும் கூறவில்லை.
வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற தனிக் கடவுளர்களை வழிபடுவோர் அக்கடவுளர்களே தங்களுக்கு எல்லாமாகி இருப்பவர்கள் என்றும், கூட்டுக் கடவுளர்களின் வேலைகளையெல்லாம் அவர்களே செய்கிறார்கள் என்றும், அவர்களே அனைத்துப் பொருள்களின் மேலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றும் பேசப்படுகின்றனர். இந்தப் பூமியின் கடவுளச்சியாகிய ஆதித்தி இவ்வாறு பேசப்படுகிறாள்:
ஆதித்திதான் சொர்க்கம்; ஆதித்திதான் வான் மண்டலம்; ஆதித்தி தான் தந்தை, தாய், மகன் எல்லாம்; ஆதித்திதான் விஷ்வ தேவா (அனைத்துக் கடவுளரும் ஒன்று சேர்ந்தநிலை) ஆதித்தி மக்கள் அய்ந்தன் தொகுதி; ஆதித்தி தலைமுறை; ஆதித்திதான் பிறப்பு
இவ்வாறு ரிக் வேதம் கூறுகிறது. இவ்வாறே இந்திரனும் கீழ்க்கண்டவாறு கூறுவதாக வேதம் கூறுகிறது:
நானே மனுவாக இருந்தேன்; நானே சூரியனாக இருக்கிறேன்; அறிவிற் சிறந்த ரிஷியாகிய காக்ஷிவான் நான்தான்; என்று இன்னும் பலவாறாக இந்திரன் பேசுகிறான்.
சூரியனாக இருந்த அவனை, இந்திரா, மித்ரா, வருணா, அக்னி என்று அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். விண்ணுலகைச் சேர்ந்த வலிய இறக்கைகளைக் கொண்ட காருட்மேத் ஆகவும் அவன் விளங்குகிறான். திறமைவாய்ந்த ஒருவனைப் பல பெயர்களால், அக்னி, யமன் மாதரிஷ்வன் என்று அழைக்கின்றனர் என்று ரிக் வேதம் கூறுகின்றது. இவ்வாறு இக்கடவுளர்கள் பலவாறு அடையாளப் படுத்தப்பட்டு உயர்வுபடுத்தப்பட்டு, தெய்வத்தன்மை உடையவர்களாக்கப்பட்டுக் காட்டப்படுகின்றனர். இது நேரடியாகப் பல தெய்வ வழிபாட்டு முறைக்கு வழியமைத்துக் கொடுக்கிறது. குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்ட இவை, இந்துத்துவக் கருத்து யூக வளர்ச்சியில், உண்மை நிகழ்வுகளாகக் கருதப்பட்டன. முதலில் இறைநிலை உணர்வாக இருந்த ஒன்று, பிற்காலத்தில் ஒரு நிறைவான தத்துவமாகக் கருத்துருவாக்கம் பெற்றது.
கடவுளரின் கற்பனை உருவங்கள், அதாவது சிலைகள் மனிதர்களின் கைவண்ணத்தால் உருவானவை; இச்சிலைகள் சில பகுதிகளில் மட்டும் வேதகாலத்தில் பயன்பாட்டில் இருந்தன. சில நேரங்களில் இச்சிலைகளைப் பற்றித் தனிச் சிறப்புடன் பேசப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆரியர்களின் நேரடியான மதச் செயற்பாடுகளில் இச்சிலைகள் இடம் பெறவில்லை; இச்சிலைகளைப் பற்றிய குறிப்பும் இல்லை; ஆரியர்களின் மதச் செயற்பாடுகளில் முதன்மையாகப் புனிதமான நெருப்பை வளர்த்தல் கடவுளர்க்குச் சோம பானம் கொடுத்தல், நெய் அளித்தல், விலங்குகளை வேள்வியில் பலியிடுதல், வேத இசைப் பாடல்களை ஓதிப் பாடுதல் முதலானவை அடங்கும்.
பிற்காலத்தில் இந்தியர்கள் அவர்களின் வழிபாட்டில் துணைப் பொருட்களாய் இருந்தவை மறையத் தொடங்கியபோது, அவர்களின் கடவுளர் சிலைகளை - உருவங்களைச் செயற்கையாகச் செய்து வைத்தனர்; ஆரியர்களின் பாக்டீரியா சகோதரர்கள் (நுண்ணுயிரிகள்) சொராஸ்டிரியர்கள் இவர்களின், பார்சி மொழியில் காணப்படும் இசைப்பாடல்கள் வேத இசைப்பாடல்களோடு பெரிதும் ஒத்திருந்தன; இந்தியர்கள் வழிபட்ட கடவுளர்களை அவர்கள் வழிபட்டவாறே இவர்களும் வழிபட்டனர்.
இது வழிபாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றும் ஊழல் மலிந்ததென்றும் கருதப்பட்டு பெரும் எதிர்ப்புக்குள்ளானது. இந்துக்களின் தேவர்களைப் பூதங்கள் என்றும், இந்திரனை அண்டார் பூதம் என்றும், அவர்கள் நடத்தினர். ஒருவகையில் இந்த எதிர்ப்புக்காக சொராஸ்டிரியர்களை நாம் மதிக்க வேண்டும். மேற்கில், மிகுந்த தொலைவிலிருந்து வந்துள்ள நாம், ஆரியர்களின் உடன்பிறந்தவர்களாகிய நாம், உருவ சிலை வழிபாட்டை அது இயற்கையோ செயற்கையோ சிலை வழிபாட்டை அது எந்த வடிவினதாயினும் அதனை எதிர்த்து நாம் குரல் எழுப்புகிறோம்.
சொர்க்கத்தின் ஒளிப்பிழம்பாய் நிற்போராயினும், புகழ்வாய்ந்த பொருளாக நம் கண்களுக்குத் தோற்றமளிப்பதற்கும்கூட, தலைவர், அசுரா, அல்லது அகுரா என்ற பெயர்களைக் கொடுப்பதற்கு நாம் மறுக்கிறோம். (அசுரா என்பது ரிக் வேதத்தில் சூரியனுக்கும், நெருப்புக்கும் வழங்கப்படும் பெயர்கள். அகுரா என்பது அறிவுசான்ற ஆசிரியன்.) சூரியனைப் பரம்பொருளின் (தெய்வத் தன்மையின்) செயலாகவும், அதன் பொருட்டுச் செயற்படுகின்ற இயற்கை ஆற்றலாகவும் நாம் கருதுகிறோம். ஆதலால், மிகுந்த பக்தியுடன், எல்லையற்ற இறைவனே! நிகரில்லாத ஒருவன் நீ! யாருடைய புகழ், அதோ அந்தச் சூரியனில் ஒரு பெரும் புள்ளியாக விளங்குகிறதோ, உன்னோடு ஒப்பிடுகிறபோது, அவனுடைய அழகு எப்படி மங்கி ஒளிகுன்றி நிற்கிறது! அவனுடைய பொன்னிற ஒளிக்கதிர்கள் ஒளிவீசித் தணிந்து போய்விட்டன! என்று நாம் கூறுகிறோம்.
இதுவரை இங்கே குறிப்பிட்டுக் காட்டப்பெற்ற கருத்துக்களை, இப்போது அவற்றின் மதத் தொடர்புக் கூறுகளோடு விரிவாக நான் விவாதிக்க விரும்பவில்லை. சிறுசிறு கருத்துக்கள் நம்முடைய முதன்மைப் பொருளோடு தொடர்புடையவையாக இருந்தாலும், எல்லாவற்றையும் விருப்பமின்றி நான் விட்டுவிடவில்லை. இப்போது இவற்றை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகிறேன்.
இண்டஸ் ஆற்றின் கரைகளில் இருந்த ஆரியர்களைப் பற்றிய நம்முடைய சுருக்கமான இந்த ஆய்வு இங்கு கூடியுள்ள அனைவருக்கும் பயன்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக எழுச்சி மிகுந்த பல்வேறு தட்பவெப்பநிலைகளைக் கொண்ட பிரிட்டனின் ஆதரவைப் பெற்ற இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து இங்கு குழுமியுள்ள இந்தியக் குடிமக்கள் பலருக்கும் இந்தச் சொற்பொழிவு பயனுடையதாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அரங்கில் உங்கள் அனைவரையும் என் முன்னே காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வேதங்களின் மூலப்படிகள் நமக்குக் கிடைத்திருப்பது, பண்டை உலகின் சுவைமிகுந்த ஒரு பகுதியைப் பற்றிய பல்வேறுபட்ட செய்திகளை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது.
மேலும், ஒரு குறிப்பிடத்தக்க சூழ்நிலையில், நிலைமைகளில் மனித மனம், மனித அறிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதனையும் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவை அதன் சமுதாயத் தன்மைகளை வைத்து நோக்கும்போது, பல்வேறு கூறுகளில், தற்கால இந்தியாவைவிட அது சிறப்புடையதாக விளங்கியது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தற்போது இந்தியா, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா, தவறுகளின், துன்பங்களின் குழந்தைப் பருவத்தில் இருந்தது.
அச்சம் தரக்கூடிய வளர்ச்சியை அடைவதற்கு முடிவு செய்திருந்தது. சிந்தனையிலும் வழிபாட்டிலும் அது சொர்க்கத்தையும் பூமியையும் உருவாக்கிய அந்தப் பெரியோனுடைய காட்சியை இழந்துவிட்டது. உண்மை, ஒளி, அன்பு ஆகியவற்றின் மய்யப் பகுதியிலிருந்து, யூகங்களிலும் நடைமுறையிலும் இங்கும் அங்குமாக அது அலைந்து கொண்டிருந்தது. எங்கும், எல்லாமாகி நிற்கிற, எல்லா வல்லமையும் படைத்த கடவுளால் நெறிப்படுத்தப்பட்ட ஓருலக முன் கருத்தியல் எண்ணம் அதற்கு இல்லை. இயற்கையின் செயல்பாடுகளையும் அவற்றிற்குத் துணையாக இருப்பனவற்றையும் தெய்வத் தன்மை யுள்ளவைகளாக மாற்றி, இவற்றின் மூலவரின் குறிப்பான ஒப்புதலின்றி அவற்றின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தார்கள்.
புனிதச் சட்டங்களுடன் உறவுடைய ஒழுக்கத் தத்துவம் (நேர்மை உணர்வு) (இவை ஒன்றுடன் ஒன்று ஒப்புமைத் தொடர்புடையவை), ஒரு தெளிவற்ற கருத்தையே கொண்டிருந்தது. இந்த ஒழுக்கத் தத்துவம், உயிர்ப்பலிக்கு இன்றியமையாத இடம் கொடுத்திருந்த போதிலும், அது அதன் அடிப்படைக் கோட்பாட்டைக் கடந்து போய்விட்டது; பண்டைக் காலத்திய மனிதரின் குற்றத் தன்மைகளுக்கேற்பத் தண்டனை வழங்கப்பட்டுப் பெருந்தொகை, கடவுளின் கருணையால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அக்கால இந்தியாவில் துதிபாடும் பாடகரும் புரோகிதரும் இருந்தனர். இவர்கள் செல்வத்தின் மீதும் புகழ்மீதும் பேராசைப்பட்டவர்கள். தங்களுக்கு அளவற்ற செல்வத்தை வாரி வழங்கியவர்களைப் பற்றி இவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து தள்ளினார்கள்.
ஜாதிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரத்தையும் தனிஉயர்நிலைத் தத்துவத்தையும் இவர்கள் முன்னிலைப்படுத்தி, அவற்றைச் செயற்படுத்தி நடைமுறை வழக்கமாக மாற்றுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். அக்கால இந்தியாவின் ராணுவ ஆட்சியாளர்கள் பல்வேறு நாடுகளையும் மக்களையும் வென்று அடிமைப்படுத்தினார்கள். மிகக் கொடுமையான அடக்கு முறைகளை அவர்கள் மீது ஏவி அவர்களைத் துன்புறுத்தினார்கள். அவர்களின் மத உரிமைகளைப் பறித்துக் கொண்டார்கள்; அவர்களும் மனிதர்களே என்ற பொதுவான இரக்க உணர்வுகூட இல்லாமல் அவர்களை மனிதர்களாகவே நடத்தவில்லை.
தற்போது இந்தியா, வேதகாலம் தொடங்கித் தொடர்ந்து வளர்ந்துகொண்டு வருகின்ற தீமைகளின் உச்சநிலையில் இருக்கின்றதெனினும், அவற்றை அழிக்க முடியவில்லை என்றாலும், அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. அது இப்போது ஒன்றிணைந்திருக்கிறது. ஒரு பகுதி விருப்பத்தின் பேரிலும் மறுபகுதி வெற்றிகொண்ட முறையிலும் உலகின் அறிவாற்றல் மிகுந்த மனிதர்களை நேசிக்கின்ற கொடைக் குணமுள்ள நாடாக அது மாறியிருக்கிறது. ஓராண்டுக்கு முன்னர், ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இது தொடர்பான நன்மைகளை என்னால் நன்கு உணர முடிந்தது.
இதன் விளைவு என்னவெனில், வன்முறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் இந்தியா விடுதலை பெற்றதுதான்; சில மாவட்டங்களைத் தவிர; இந்தியா அதன் பின்னர் அமைதி, சட்டம் ஒழுங்கு, மத உரிமைகள், வாழ்த்துக்கள் ஆகியவற்றுடன் முன் எப்போதும், எந்த அரச மரபினரின் ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நல்வாய்ப்புகளை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளையும் இடர்ப்பாடுகளையும் பொருட்படுத்தாது, இந்தியாவைத் தன் அன்பினாலும், தாய்மைத் தழுவுதலோடும் பிரிட்டன் அரவணைத்துத் தன் அன்பான வாழ்த்துக்களை வழங்குகிறது; எதற்காக இந்தியா கடுமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த அமைதியைப் பெறுவதற்கு நாம் வாழ்த்துகிறோம்.
தன் சுமைகளைக் குறைப்பதற்காகவும் சரிசெய்து கொள்வதற்காகவும் இந்தியா கடின உழைப்பை மேற்கொண்டிருக்கிறது; தன் வேளாண்மை வளங்களைப் பெருக்குவதற்காகப் பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளோடு வணிக உறவை வளர்த்துக்கொள்வதற்காகப் பரந்து கிடக்கின்ற கடற்பரப்பில்அமைதியான வழிகளை அது தன் கப்பல்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாவட்டத்தோடு மாவட்டத்தையும் மாநிலத்தோடு மாநிலத்தையும் சாலை வழியாகவும், பாலங்களின் வழியாகவும் மலைகளை அகழ்ந்து கணவாய்களின் வழியாகவும் அனைத்தையும் இந்தியா இணைத்திருக்கிறது. நீர்வழியாகவும், வான் வழியாகவும், தரைவழியாகவும் கடல் வழியாகவும் தகவல் தொடர்புகளை இந்தியா ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு இந்தியக் குடிமக்கள் வியப்படைந்து நிற்கிறார்கள். மனிதகுல வளர்ச்சியில் தன் இனமரபுக் குடிமக்களையும் வளர்ச்சியை நோக்கி உயர்த்துவதற்கு இந்தியா முயன்று கொண்டிருக்கிறது.
ஓர் அறிவிழந்த மகன், உயிரோடுள்ள இறந்துபோன தன் பெற்றோருக்குச் சேர்த்து நெருப்பிடுபவன் கைகளைக் கட்டிப்போடுவது போல, ஜாதி உணர்வால், தன் குலப்பெருமையைக் காப்பாற்றக் கொடூரமான முறையில் பெண் குழந்தையைக் கொலை செய்யத் துடிக்கும் பெற்றோரின் கைகள் கைது செய்யப்பட்டுள்ளன. தவறான வழிகாட்டுதலுக்குள்ளாகி, துன்பத்திற்குட்பட்டுத் தன் சொந்த வாழ்க்கையை அழித்துக் கொள்ள முற்பட்டவன் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறான். கடவுளர்களுக்கும், பேய் பூதங்களுக்கும், மனித ரத்தத்தையும் மனித இறைச்சியையும் படைக்கும் பழக்கத்தையும், மது வகைகளைப் படைத்து வழிபடுதலையும் இந்தியா ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
நாடு முழுக்க நேர்மையான நீதிமுறை கிடைப்பதற்கு அது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. காலந்தோறும் தனது ஆட்சிமுறையை நிர்வாகத்தை மேம்படுத்திக் கொண்டு வருகின்றது. கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி, தன் எல்லைப் பகுதிகளில் உண்மையையும் நம்பிக்கையையும் பரப்புவதில் அது கடைப்பிடித்துவரும் நடைமுறையும் முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சிறந்து விளங்குகிறது; அவற்றில் மிகுந்த கவனத்துடன் அது இருக்கிறது. பிரிட்டானிய இந்தியாவின் வரலாற்றுப் பதிவேடுகளில் கடந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இந்தியக் குடிமக்களில் ஒரு பகுதியினர், மாபெரும் பழியுடன் கூடிய கொடுமைத்தன்மையுடன், தங்களுக்கு நன்மை செய்து ஆதரித்தவர்களையே அழிப்பதற்கு முற்பட்டார்கள்.
இங்கே நான் பயன்படுத்திய கடினமான சொற்களை மாற்றிக் கொள்ளவா? இல்லை! இந்த நிகழ்ச்சிகளின் பொதுவான தன்மையுடன் அவற்றை உற்றுநோக்கும்போது, இறைப்பற்றுமிக்க ஒப்புதலுடன் நல்வாய்ப்பான நீதிமுறை வழங்குவது என்பது இன்னும் புகழ்வாய்ந்த ஒரு செயலைக் கருதியேயாகும். பிரிட்டானியர்களாகிய நமக்குக் கடந்த கால நிகழ்வுகள், நம்மைச் சுற்றியிருந்த சமூகவியல் சூழல்களைப் புரிந்துகொள்வதில் நாம் செய்த தவறுகளை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன; அத்துடன் நமக்கும் அவற்றுக்கும் இடையே தொடர்புண்டாக்கி அவற்றை எதிர்கொள்ள வைத்தவர்களினால் நமக்கு ஏற்பட்ட குறைபாடுகளையும் அவை உணர்த்துகின்றன. ஆனால், அவை நம்முடைய இரக்க மனப்பான்மையையும் நற்செயல் விருப்பத்தையும் அன்புதவிகளையும் விரைவுபடுத்தி விட்டனவே தவிர அழித்துவிடவில்லை;
மேலும் இந்தியாவின் மேம்பாட்டிற்காக நாம் உழைக்க வேண்டும் என்ற நம் உறுதிப்பாட்டிற்கு அவை வலிமை சேர்ந்திருக்கின்றனவேயன்றி நம் உறுதியைக் குலைத்துவிடவில்லை. அத்துடன் பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டானியப் பேரரசின் உலைவில்லா நிலைத்த தன்மைக்கு அவை உரம் சேர்ப்பனவாக அமைந்துவிட்டன. இனிமேல், வளர்ந்துவரும் இந்தியாவின் அறிவுத்திறன், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடவுளின் பார்வைக்குக் கீழ் உள்ள நமது வலிமையை ஆற்றல் மிகுந்த அதிகாரத்தை உணர்ந்துகொள்ளும்; நம்முடைய அரசியல் அதிகாரம் பரந்து விரிந்துள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் நாம் வழங்கும் நல்வாழ்த்துக்களை அது பாராட்டும். பிரிட்டானியப் பேரரசு இங்கு, பரிவுடனும் இரக்க உணர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் இன்னும் இருக்கிறது. படைவீரன் இங்கே இருக்கிறான்;
அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநிறுத்துவதற்காக அவன் போராடிக் கொண்டிருக்கிறான்; போர் செய்வதற்காகவோ கொள்ளையடிப்பதற்காகவோ அவன், இங்கு நிற்கவில்லை; நம் ஆட்சியாளன் (நிர்வாகி) இங்கு இருக்கிறான்; பொதுமக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காகவும் நேர்மையான நீதி முறையை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காகவும் அவன் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான்; வணிகன் இங்கே இருக்கிறான்; விளைபொருட்களைக் கொடுத்து அதற்கு மாற்றாக அவன் பெற முடியாததைப் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து அவன் பெற்றுக் கொள்கிறான். பொறியாளர் இங்கே இருக்கிறார்; இயற்கையின் நுட்பங்களோடு இணைந்து, அதனால் வழிகாட்டப்பெற்று, நல்வாய்ப்புடன் கலை, அறிவியல் ஆகியவற்றின் உதவி ஆதாரங்களோடு, மதிப்பிடற்கரிய பொதுப் பணிகளை அவர் வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறார்;
மக்களின் பயன்பாட்டிற்கு அவை பேருதவியாக உள்ளன; இந்த நிறுவனத்தின் தலைவர் நமக்கு இங்கே காட்டியுள்ள கலையழகு மிகுந்த கட்டடங்களைப்போல! கல்வித்துறை ஊடகத்துறை சார்ந்த கல்வியாளர் இங்கே இருக்கிறார்; மதச்சார்பற்ற கல்வியையும் அது தொடர்பான துணைக் கருவிகளையும் உலகில் முன்னேறியிருக்கின்ற பல நாடுகள் பெற்றிருக்கின்ற அறிவு நுணுக்கங்களையும் அவர் இங்கே வழங்கி வருகிறார். அமைப்பு வழிப்பட்ட பார்ப்பனியச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து ஆரியர்களின் (வந்தேறிகளின்) இடமாக விளங்கும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிலவுகின்ற தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆரிய நாகரிகமே காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Comments
Post a Comment