பெரியார் போராட்டங்கள் கட்சியைக் காக்கவா?
தம்மோடு இருந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கென பெரியார் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது அயோக்கிய குணாவின் அடுத்த குற்றச்சாட்டு இது. அதாவது பெரியார் செய்த சாதனைகள், அவரின் தனித் தன்மைகள், அவரது சிறப்புகள், அவரது நாணயமான, நேர்மையான, நம்பகமான போக்கு என எல்லாவற்றையும் எப்படியாவது கேவலப்படுத்தி, அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த மனிதர் எழுதுகோலை எடுத்துள்ளார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
மேற்கண்ட குற்றச்சாட்டை போல ஓர் அற்பத்தனமான குற்றச்சாட்டை யாரும் காட்ட முடியாது. அந்த அளவிற்கு உண்மை கலவாத, மோசடியான முழுப் பொய்யான குற்றச்சாட்டு இது.
நான் ஒருவனே எழுதி நான் ஒருவனே அச்சுப் போட்டு நான் ஒருவனே படிப்பவனாக இருந்தாலும், குடிஅரசு பத்திரிகையை நடத்துவேன் என்று உறுதி கொண்டு களம் கண்ட ஓர் ஒப்பற்ற மாமனிதரைப் பார்த்துதான் இந்த மண்டூகங்கள் குறை சொல்லுகின்றன. தன் பின்னால் எத்தனை பேர் வருவார்கள்; எத்தனை பேர் நிலைத்து நிற்பார்கள்; எத்தனை பேர் நம்பகத் தன்மையுடையவர்கள் என்று சிந்தித்து, எதிர்பார்த்து இயக்கம் நடத்தியவர் அல்ல பெரியார். அவர் இயக்கம் ஆதாயம் தரும் இயக்கமும் அல்ல. எனவே, பயன் கருதி எவரும் அந்த அமைப்பில் நிலைக்க முடியாது. ஆதாயம் கிடைக்காத ஓர் அமைப்பில் தொண்டர்கள் நிலைத்திருப்பதே கடினம், அப்படியிருக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டு, அதுவும் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு எவர் தொடர்ந்து இருப்பர். எனவே, தொண்டர்களைத் தக்க வைக்க பெரியார் போராட்டம் நடத்தினார் என்பது முட்டாள்தனமான வாதம் அல்லவா?
ஏச்சும், பேச்சும், வெறுப்பும், எதிர்ப்பும் மட்டுமே பரிசாய் கிடைக்கும் ஒரு பணியைத் தெரிந்தே தேர்வு செய்து மேற்கண்ட இணையற்ற ஏந்தல் பெரியார்.
இதைப் பெரியாரே சொல்கிறார்
நாமும் இதுவரை என்ன செய்துவிட்டோமென்று கவலைப் படவில்லை. ஏனெனில், நம் இலட்சியம் பெரியது. இதற்காக நாம் செய்யும் முயற்சி மிகச் சிறியது. இதனுடைய நஷ்டம் நமக்குப் பெரிதல்ல...
மலை போன்ற காரியத்தைக் கொண்டு வருவதற்காக, தலைமுடியைப் போன்ற அற்ப சங்கதியைக் கொண்டு கட்டியிழுக்கப் பார்க்கிறோம்; வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும்; அறுந்து போனால் முடி போன்ற நமது அற்ப முயற்சிகள் வீணாய்ப் போகட்டும்.
- (தரங்கம்பாடியில் 25.5.1931இல் பெரியார் பேசியது) மேலும், இந்த இயக்கத்தை ஆரம்பிக்கும்போதுகூட நாம் என்னையே எண்ணி இப்பெரும் பணி ஏற்றேன் என்று ஒரு பாட்டில் சொல்லப்படுதல் போல, நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், எண்ணியும் நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோமே ஒழிய, நமக்குத் தொண்டர்கள் உண்டு, தலைவர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு, பணஉதவி செய்கிறவர்கள் உண்டு என்று நினைத்து, அவர்கள் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்து இவ்வியக்கத்தில் நாம் இறங்கவில்லை. ஆதலால், நம் கொள்கைகளை உத்தேசித்து வருகின்றவர்களை வர வேண்டியதும், போகிறவர்களைப் போகச் சொல்ல வேண்டியதும் ஒழுக்கமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களைத் தள்ளப்பட வேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகி விட்டது.இவ்வியக்கத்தில் நமக்கு உள்ள உறுதிதான் இவ்வியக்கத் திற்குச் சொத்தும், அஸ்திவாரமுமே ஒழிய வேறொன்றும் இல்லை.
- (குடிஅரசு 16.2.1930)
இப்படிக் கூறி இயக்கம் நடத்திய தலைவரைப் பார்த்து இன்றைக்கு முளைத்த காளான்களும் களைகளும் கூறுகின்ற, பெரியார் தொண்டர்களைத் தக்க வைக்க போராட்டம் நடத்தினார் என்று.
இந்த ஒரு குற்றச்சாட்டை ஆராய்ந்தாலே குணா கும்பலின் சாயம் வெளுத்துவிடும்.
1957இல், ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தினார். இது தேசிய அவமதிப்புக் குற்றம் என்ற வகையில் கொடுந் தண்டனைக்கு உரிய குற்றமாக அரசால் கருதப்பட்டது. இதை நன்கு அறிந்தும், 10,000 தொண்டர்கள் அரசியல் சட்டநகலை எரித்தனர். 2 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இருவர் உயிர் இழந்தனர். நீண்ட நாள் சிறை என்பதால் பல குடும்பங்கள் வாழ்விழந்தன. சிறையில் ஆயிரக்கணக்கானோர் இன்னலுற்றனர். தொண்டர்களைத் தக்க வைக்க இப்படிப்பட்ட போராட்டமா நடத்துவார்கள்?
பொய்யைச் சொன்னாலும், மோசடியாய் அவதூறு கூறினாலும் அதற்கு ஓர் அளவு வேண்டாம்! ஆரியத்திடம் ஆதாயம் பெற்ற அளவிற்கு அவதூறுகளையும் அள்ளி வீசியுள்ளார் இந்த அற்ப மனிதர் என்றே எண்ண வேண்டியுள்ளது.
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment