ஆரியர் படையெடுப்பு என்பது தவறா?
வடஇந்தியாவில், விந்திய மலைக்கு மிகவும் அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து, அந்த வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றின்மீது கண்மூடித்தனமாகத் திணிப்பது பெருந்தவறு. இங்குதான் தமிழர்மீது திணிக்கப்பட்ட ஆரிய திராவிடக் கொள்கை முதல் அடியை வாங்குகிறது.
தமிழரின் தாயகம் கடைச்சங்கக் காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை எனக் குன்றிவிட்டது. அவ்வாறு தமிழரது தாயகம் சுருங்கியபின், எந்தவொரு நேரடி ஆரியப் படையெடுப்பாவது தமிழகத்தின்மீது நடந்ததுண்டா?
குறுக்குசால் ஓட்டும் குணாவின் குணக்கேடான உளறல் குற்றச்சாட்டு இது.
கடைச் சங்க காலத்தில் தமிழரின் எல்லை வடவேங்கடம் முதல் தென்குமரி வரையென சுருங்கியது என்றால், அதற்குமுன் தமிழகத்தின் எல்லை எதுவாக இருந்தது? அது யாரால் சுருங்கியது என்ற உண்மையை அறிவு நாணயத்தோடு அறிவிக்க வேண்டுமல்லவா?
அயோக்கியத்தனமாக அதை அப்படியே மறைத்துவிட்டு, கடைச்சங்கக் காலத்திற்குப் பின் ஆரியர் படையெடுப்பு தமிழர் மீது உண்டா என்று கேள்வி எழுப்புவது, ஆரியத்திற்கு அடிவருடும் துரோகச் செயலாகும். வரலாற்றை வசதிக்கேற்ப எடுப்பதுதான் ஆய்வா?
இமயம் முதல் பரவியிருந்த தமிழர் பூமியும், தமிழ் மொழியும் வடவேங்கடம் முதல் குமரி வரையென்று குறுகிப் போனதற்கு அயல்நாட்டு ஆரியர்களின் ஊடுருவல் அல்லவா காரணம்! சூழ்ச்சியாலும், வஞ்சனையாலும், சதிச் செயல்களாலும் வடக்கேயிருந்த தமிழர் பகுதிகளை மெல்ல மெல்ல கைப்பற்றி ஆரிய வர்த்தம் என்று ஆக்கி தமிழர்களை மெல்ல மெல்லத் தென்னிந்தியாவிற்கு ஒதுக்கிய இன எதிரிகளான அயல்நாட்டு ஆரியர்களை மிகத் தந்திரமாகக் காப்பாற்ற சூழ்ச்சி செய்கிறார் குணா.
தமிழர்களின் இடம் பறிபோனது மட்டுமல்ல. தமிழரின் மொழியும் சமஸ்கிருதம் கலந்து கெட்டது, சிதைந்தது. ஆரியர்கள் திறந்து வைத்த கதவு அரேபியர், மங்கோலியர், பாரசீகர் என்று பலரும் உள்ளே நுழைய வாய்ப்பளிக்க, தமிழோடு சமஸ்கிருதம், உருது என்று பல மொழி கலந்து, பல இனம் கலந்து வடஇந்தியாவே கலப்படமானது. வடஇந்திய கிராமப் பகுதிகளில் மட்டும் தமிழர் ஒதுங்கினர். அவர்களும் காலப்போக்கில் மொழியால் இந்தி பேசும் நிலைக்கு வந்து தமிழர் அடையாளத்தை இழந்தனர்.
அது மட்டுமன்றி, தமிழனின் அறிவுசார் நூல்களையெல்லாம் களவாடி சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டு, தமிழ் மூலத்தை அழித்தனர். தமிழரின் தொன்மை நூல்களை ஆற்றிலும், நெருப்பிலும் எறியச் செய்தனர்; எரியச் செய்தனர்.
அறிவோடு வாழ்ந்த தமிழினத்தின் மூளையில் மூடநம்பிக்கைகளை நுழைத்தனர். ஜாதியற்ற தமிழ்ச் சமுதாயத்தை ஜாதியால் பிரித்துக் கூறாக்கி ஒற்றுமையைக் குலைத்து, தமிழர்க்குள் மொழியழிய வழி செய்தனர்.
தமிழன் கற்கக்கூடாது, அடிமை வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆக்கி, அவனது கோயிலில் அவன் சென்றால் தீட்டு, அவன் மொழி சென்றால் தீட்டு என்று ஆக்கி, அதை இன்றளவும் சட்ட ரீதியாகக் காத்து நிற்கும் ஆரியர்களின் அனைத்து ஆதிக்கம், அநியாயம், அடாவடித்தனங்களை மறைத்து, கடைசங்கத் திரையில் மறைத்துவிட்டு, அதற்கு அப்பால் நமக்குக் காட்சிகளைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார் குணா.
ஆரிய திராவிடப் போர் என்பது உலக அளவில் ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாய் இருக்க, அது திணிக்கப்பட்டது என்று ஒரு திரிபுவாதத்தை முன்வைக்கிறார் இந்தத் தில்லுமுல்லுப் பேர்வழி!
அது மட்டுமல்ல, வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழக வரலாற்றின்மீது கண்மூடித் தனமாகத் திணிப்பது பெருந்தவறு என்று வேறு கணிக்கிறார் இந்த அரைவேக்காட்டு வரலாற்று ஆசிரியர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடஇந்திய வரலாறுதானே தமிழனின் தொன்மையை, நாகரிகத்தை, மொழி வளத்தை, மொழி தன்மையை, கலைத் தொன்மையை, சமதர்மச் சிந்தனையை, பகுத்தறிவு வாழ்வை, பறைசாற்றும் ஆதாரம். அதை விட்டுவிட்டு, ஆரிய கலப்பால் ஜாதி, மத,
சடங்கு, கடவுள் என்று மூடநம்பிக்கையில் தமிழன் தடம் மாறி மூழ்கிக் கிடந்த காலத்திலிருந்தா தமிழனின் வரலாற்றை, அதுவும் வடவேங்கடத்திற்கு தெற்கே மட்டும் ஆராய்வது?
அப்படி ஆராய்ந்தால் அது எப்படி தமிழனின் வரலாறாகும். ஆரியக் கலப்பற்ற தமிழனின் மரபும், தொன்மையும், மொழியும் அல்லவா ஆராயப்பட வேண்டும்! அப்போதுதானே அத்தனையும் கெட்டது யாரால், கெடுத்தது யாரால், இனப்பகை எது என்பது விளங்கும்.
உன் தாத்தாவைக் கொலை செய்தவன் குடும்பத்தை ஆராயாதே! உன் தந்தை காலத்திலிருந்து பார் என்று கூறித் தாத்தாவைக் கொன்றவனைத் தப்ப விடுகின்ற தகிடுதத்த வேலையை அல்லவா இந்தத் தரங்கெட்ட குணா, தமிழர் உணர்வு என்ற பேரால் தந்திரமாகச் செய்கிறார்!
ஆரியப் பூச்சாண்டி காட்டியே தமிழகத்தில் தம்மை நன்கு வலுப்படுத்தியும், வளப்படுத்தியும் கொண்ட தெலுங்கு கன்னட ஆண்டைகள்... தமிழ்மண்ணை விழுங்கிச் செரித்துவர திராவிடக் கொள்கை ஒரு பெரிய கருவியானது. கன்னட, தெலுங்கு நலன் களின் திசை திருப்பல் உத்தியே ஆரியப் பூச்சாண்டி என்பது எந்தமிழருக்கு இன்னுமா விளங்கவில்லை? என்று ஆரியத்திற்கு அடி சொரியும் குணா, தமிழர்மீது அளவுகடந்த பற்று கொண்டு பேசுவதுபோல் பேசுகிறார்.
அது மட்டுமல்ல, வேங்கடத்தை ஆரியனா வந்து பறித்துச் சென்றான்? இல்லையே! தெலுங்கனாகிய திராவிடத்தான் தானே அதைப் பட்டப்பகலில் கவர்ந்து சென்றான்? குமரியை இன்று மெல்ல மெல்ல அரித்துத் தின்று கொண்டிருப்பவன் ஆரியன் அல்லனே! திராவிடனான மலையாளிதானே! என்று. இடப்பகையைப் பெரிதாக்கி இனப்பகையை ஒழிக்கப் பார்க்கிறார். இவரது ஒவ்வோர் அசைவும் ஆரியத்தைக் காக்கும் முனைப்பு கொண்டு நிற்பதை இந்நூலின் நெடுகக் காண முடிகிறது. நான் முன்னமே சொன்னதுபோல் பங்காளிச் சண்டை வேறு; அந்நியனனா ஆரியர் அபகரித்தல் வேறு. ஆரியனா அபகரித்தான் என்று கேட்கிறார் இந்த ஆரியதாசன். ஆரியன்தான் இந்தியாவையே தமிழர்களிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டானே! இனி பறிக்க என்ன இருக்கிறது. அவன் பறித்து வைத்துக் கொண்டும் ஆதிக்கம் செலுத்தும் மண்ணில்தான் மலையாளியும், கன்னடனும், தெலுங்கனும், தமிழனும் வரப்புக் கட்டிக் கொண்டு வம்பு செய்கிறார்களே தவிர எவனுக்கு எந்த மண் உரிமை? அறிவு நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்.
தெற்காசிய பகுதிக்கே சொந்தக்காரனான தமிழனுக்குச் சொந்த நாடு என்று இன்று உண்டா? இந்த நிலை வர யார் காரணம்? அதைப் பேசாமல், இன்று நடக்கும் சட்டப் படியான உரிமைச் சண்டைகளைச் சொல்லித் தமிழர்களைக் குழப்புவது யார்?
ஆயிரக்கணக்கான ஆண்டு இனப்பகையை, அதற்கு எதிரான போரை பூச்சாண்டி காட்டுவதாய் கூறும் இந்த ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்வதே கேவலமாய் உள்ளது. என்ன செய்ய, கேவலமாய் நிற்கும் தமிழனுக்குச் சொரணையூட்ட, கீழ்த்தர பேர்வழிக்கெல்லாம் பதில் சொல்லும் அவலம் நேர்கிறது!
நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். தமிழ்த் தேசியம் பேசும் யாராயினும் உண்மையிலே அதற்கான உறுதியும், வீரமும், ஆற்றலும் இருப்பின் இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கிளர்ந்து, தமிழ்நாட்டைத் தனியே பிரிக்கப் போராட வேண்டும். இல்லையென்றால் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.
மாறாக, நடைமுறைக்கு ஏற்காதவற்றை ஏட்டில் எழுதி தமிழனுக்கு சூடு சொரணை ஊட்டி, ஆரியத்தை அடித்து வீழ்த்தி தமிழனைத் தலைநிமிரச் செய்பவர்களைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பது தமிழனுக்கு எதிரான செயலாகும். ஆரியத்திற்கு ஆதரவு நிலையாகும்!
திராவிடம் என்ற சொல் எடுக்கப்பட்டது இனமீட்சிக்காக மாறாக இடம் மீட்க அல்ல. ஆரியம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம்மைப் பல்லாற்றானும் பாழ்ப்படுத்திய தோடு, அடிமைப்படுத்தியும், இழிவுப்படுத்தியும், விழிப்பற்று விலங்காய் உழலச் செய்த சமுதாயம் அவலம் நீங்கிச் சரிநிகர் சமானமாய் எழுந்து நிமிர்ந்து நிற்க.
திராவிட நாடு என்ற கோரிக்கை வைத்தது, நம் பண்பாட்டை, நாகரிகத்தை, கலாச்சாரத்தைப் பாதுகாத்து, மீட்டெடுத்து, நம்மை நாமே ஆளும் தன்னுரிமை, தன்னாட்சி பெற வேண்டும் என்பதற்காக.
ஆனால், எப்போ மொழிவாரி மாநிலம் வந்ததோ அப்போதே இடஉரிமைப் பிரச்சினை அற்றுப் போயிற்று. இப்போது உள்ளதெல்லாம் மாநில எல்லைப் பிரச்சினையே!
அப்போதுகூட பெரியார் விழிப்போடு இருந்து ஒரு கோரிக்கையை வைத்தார். எப்போது மொழிவாரி மாநிலம் என்று பிரிக்க முயன்றமோ, அதன்பின் தமிழர்க்குரிய பகுதி தமிழர்க்கு வேண்டும். அதில் எதையும் இழக்கவோ விட்டுத் தரவோ கூடாது; முடியாது என்றார்.
உண்மை இதுவாக இருக்க, இன்றைக்குத் தமிழன் தனக்கென்று நாடு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் திராவிடத்தைப் பேசியதே என்று குணா கூறுவது குணக்கேடல்லவா?
தெலுங்கனுக்கு, மலையாளிக்கு, கன்னடனுக்கு நாடு இருப்பது போலவும், தமிழனுக்கு மட்டும் இல்லாமல் போனது போலவும் ஏய்க்கப் பார்க்கிறார் இந்த எத்தர் குணா. எத்தனை வரலாறு படித்தாலும், படைத்தாலும், எத்தனை ஆய்வுகள் செய்தாலும், எத்தனை வாதங்கள் செய்தாலும், தமிழன், தன் பரந்த நிலப்பரப்பை, தன் மொழித் தூய்மையை, கலாச்சார, பண்பாட்டுப் பெருமையை, தன்மானத்தை, கல்வியை, அறிவை, விழிப்பை, உயர்வை, ஒட்டுமொத்தமாக தன்னிகரற்ற தனித் தன்மையை இழந்ததற்குக் காரணம், ஆரியர் மட்டுமே! நாடோடியாய் வந்தவர்கள், நாடுடைய தமிழரையும் நாடற்றவராய் ஆக்கினர்.
ஆரியர் இங்கு நுழையவில்லையென்றால், மலையாளம் ஏது,
கன்னடம் ஏது, தெலுங்கு ஏது?
ஆரியரும் அவர் மொழி சமஸ்கிருதமும், அரேபியரும் அவர் மொழி உருதும், பரந்துபட்ட தமிழர் நாடாம் தொன்மை இந்தியப் பகுதியில் ஊடுருவியதாலே, தமிழன் நாடற்றுப் போனான், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் பிற்காலத்தில் உருவாயின. பல்வேறு கலப்பின மக்கள் உருவாயினர்.
எந்த அன்னிய ஊடுருவலும் இல்லாது போயிருப்பின் இங்கு தமிழர் மட்டுமே வாழ்ந்திருப்பர்; தமிழ் மட்டுமே பேசப் பட்டிருக்கும். உண்மை இப்படியிருக்க, திராவிடம் பேசியதால் நாடிழந்தோம் என்பது திரிபுவாதமாகும்; தில்லுமுல்லு கருத்தாகும்.
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment