அய்யாவின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு தவறா?
ஆரியர் எதிர்ப்பைவிட கன்னடர், மலையாளி, தெலுங்கர் எதிர்ப்பையே எடுத்திருக்க வேண்டும். தமிழர் பகுதியை யார் பறித்தார்கள் ஆரியர்களா பறித்தார்கள்? இவர்கள்தானே பறித்துக் கொண்டார்கள்? அப்படியிருக்க இவர்களை எதிர்க்காமல் ஆரியர்களை எதிர்த்த பெரியாரின் அணுகுமுறையாலே தமிழர் வீழ்ந்தனர் என்பது குறுக்குசால் குணாவின் அடுத்த குற்றச்சாட்டு.
குணாவின் குறிக்கோள் என்ன என்பதும், அவரது ஆரிய சார்பு நிலையும், இவர் இந்த நூல் எழுதியதன் நோக்கமே, தமிழர்களிடம் மேலோங்கி நிற்கும் ஆரியப் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு நிலையை குலைக்கவேண்டும் என்பதே என்பது இக்குற்றச்சாட்டைப் படிக்கும் எல்லோருக்கும் விளங்கியிருக்கும்.
·
ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்கும் அணுகுறையே தப்பாம். பெரியார் மலையாளியை, கன்னடர்களை, தெலுங்கர்களை எதிர்த் திருக்க வேண்டுமாம்!
·
பெரியார் போட்ட பிச்சையில், சூடு சுரணை பெற்று நாமும் மனிதன் என்ற உணர்வு பெற்று, தீண்டத்தகாதவன் என்ற இழிவு நீங்கி, கற்கக்கூடாது என்ற தடையைத் தகர்த்து, இன்று கல்வி வேலை வாய்ப்பில் வாய்ப்புகளைப் பெற்று, பார்ப்பனர்களைவிட மேலாய் வந்துள்ள நிலையில், அதற்கான 100 ஆண்டு காலப் போராட்டத்தையும் புறந்தள்ளி, கொச்சைப்படுத்தி, அத்தனை உழைப்பும் வீண், அவற்றால்தான் தமிழர் வீழ்ந்தனர் என்று ஒருவர் நூல் எழுதுகிறார். இதைவிட தமிழர்க்கான பச்சைத் துரோகம் வேறு இருக்க முடியுமா? தமிழர்கள் கடந்த 100 ஆண்டு கால நிலையைக் கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும்.
·
ஆரியப் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிக்காரர்களைத் தவிர மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு இல்லை. மத அடிப்படையில், சாத்திர விதிகளைச் சொல்லிக் கல்வி பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்டது.
·
அவரவர் அவர் தகப்பன் தொழிலைச் செய்யவேண்டும். மாறாகக் கல்வி கற்கச் செல்லக்கூடாது.
·
கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது, மற்ற ஜாதியினர் கருவறைக்குள் செல்லக்கூடாது.
·
கோயில்களில் தமிழில் பாடல்கள் பாடக்கூடாது. பாடினால் கடவுள் தீட்டாகிவிடும்.
·
திருமணங்களில் ஆரியப் பார்ப்பனர் மந்திரமே சொல்லி திருமணம் நடந்தால் மட்டுமே அது செல்லும். மற்றபடி அத்திருமணம் செல்லாது.
·
மத்திய அரசின் அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளும் ஆரியப் பார்ப்பனர்களுக்கே! குறிப்பாக, வானொலி, இரயில்வே, அஞ்சல்துறை, வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, வருவாய் வரித்துறை, சுங்கத்துறை என்று எல்லா துறைகளிலும் பார்ப்பனர்களுக்கே வேலை. மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் மத்திய அரசு வேலையில் 90 சதவீதம் மேல் பணியாற்றினர்.
·
தெருக்களில் தாழ்த்தப்பட்டவன் செல்லக்கூடாது. கல்விக்கூடங்களில் பார்ப்பனர்களுக்குத் தனித் தண்ணீர் பானை. மற்றவர்களுக்குத் தனித் தண்ணீர் பானை.
·
உணவு விடுதியில் பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி. மற்றவர்களுக்குத் தனிப் பந்தி. பார்ப்பனர்களுக்கு உயர்வகை உணவு. மற்றவர்களுக்குச் சாதாரண உணவு.
·
இந்திய ஆட்சிப் பணியில் 90ரூ பார்ப்பனர்கள்.
·
உயர் அதிகாரி, நீதிபதி இவர்களில் 75ரூ பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டவன் நிழல்கூட பார்ப்பனர்மீது படக் கூடாது. எனவே, மாலையில் கீழ்ப்புறமாகவும், காலையில் மேல்புறமாகவும் பார்ப்பானைக் கண்டால் தாழ்த்தப்பட்டவன் ஒதுங்கவேண்டும்.
·
கேரளத்தில் நாயடிகள் என்ற ஜாதியினரைக் கண்டாலே தீட்டு என்றனர் ஆரியப் பார்ப்பனர்கள். எனவே, அவர்கள் ஆரியப் பார்ப்பனர் கண்ணிலே படாமலே மறைந்து செல்ல வேண்டும்
·
தமிழன் எழுதிய உன்னத நூல்களை எரித்தும், நீரில் விட்டும், மண்ணில் புதைத்தும் அழித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்.
·
தமிழரிடையே ஜாதியை உண்டாக்கி ஒற்றுமையைக் கெடுத்து வீழ்த்தியவர்கள், தாழ்த்தி நசுக்கி ஒடுக்கினார்கள்.
·
ஆரியர் மட்டுமே கடவுள் முகத்தில் பிறந்தவர்கள்; மற்றவர்களெல்லாம் இழிமக்கள். எனவே, அவர்களுக்கு ஆரியப் பார்ப்பனர்களுக்கு அடிமை வேலை செய்வது மட்டுமே கடமை என்று 97% மக்களை கேவலப்படுத்தினர்.
·
ஆரியப் பார்ப்பானைக் கண்டாலே தமிழன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் வீழ்ந்து வணங்கி சுவாமி என்று கூறும்படிச் செய்தவர்கள்.
·
கூலி வேலை செய்யும் தமிழனுக்கு எச்சில் உணவும், கிழிந்த துணியும், தூற்றி ஒதுக்கப்பட்ட தானியங்களும் கூலியாகக் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி அதை
50 ஆண்டு களுக்கு முன்பு வரை அமல்படுத்தியவர்கள். தாழ்த்தப்பட்ட தமிழன் நல்ல பெயர்களைக்கூட சூட்டிக் கொள்ளக்கூடாது. மண்ணாங்கட்டி, வவுத்தான், தொப்புளான், செடிசேம்பு, பாவாடை என்று கொச்சையான பெயர்களை இட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். சென்ற தலைமுறை வரை இது நடப்பில் இருந்தது. ஆங்கில ஆட்சியின்போது நிலை என்ன?
ஆர்.எஸ்.எஸ்.
குருஜி கோல்வால்கரே கூறுகிறார் கேளுங்கள்
தென்னாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அந்த ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கில அதிகாரி தனது பிராமண பியூன் பின்தொடர வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துக் கைகுலுக்கினார். ஆனால், பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி, நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால்
என்னுடைய பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாயே? என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார் : நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாய் இருக்கலாம்; ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் ஆரியப் பார்ப்பன தர்மம்.
(ஆதாரம் : M.S.Golwalkar,
Bunch of thoughts)
இதே கோல்வால்கர் ஆரியர்கள் பற்றி இன்னொரு கருத்தையும் அதே நூலில் கூறுகிறார். நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள்; அறிவுத்திறன் உள்ளவர்கள். ஆன்மாவின் விதிகளையெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாக, அறிவற்ற மக்களாய் வாழ்ந்து வந்தனர். எனவே, நம்மைத் தனிமைப்படுத்தி பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை (ஆரியர்களை) மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்ட, நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்கிறார்.
ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர நாமெல்லாம் இரண்டு கால் விலங்குகள் என்று இன்றளவும் கூறி இந்தியாவையே ஆரிய நாடாகவும், ஆரிய கலாச்சாரமுடையதாகவும் ஆக்க நினைக்கின்றது ஆரிய கூட்டம். அது மட்டுமல்ல, இந்தியாவில் இந்துக்களைத் தவிர, அதாவது இராமனைக் கடவுளாக ஏற்காதவர்களைத் தவிர மற்றவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டி இராம ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றார். அதற்கு ஜெர்மனியையும், ஹிட்லரையும் உதாரணமாகக் காட்டுகிறார்.
இனம் மற்றும் கலாச்சாரத்தின் புனிதத் தன்மையைக் காத்திட, அரேபிய இனங்களுள் ஒன்றான யூத இன மக்களைப் படுகொலை செய்து நாட்டைச் சுத்தப்படுத்தியது ஜெர்மனி. இங்கே இனத்தின் பெருமையை அதன் உயர்ந்தபட்ச அளவுக்கு உயர்த்தி பிடித்தது. அடிப்படையில் வேறுபட்ட கலாச்சார மக்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையை உருவாக்குவது இயலாது என்று ஜெர்மனி காட்டியுள்ளது. இதை இந்துஸ்தானத்திலும் நாம் கற்றுக் கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டியது ஒரு நல்ல பாடமாகும்.
(ஆதாரம் : Bunch of
thoughts)
ஆக இந்தியாவை இந்து நாடாக்க, கிறித்த முஸ்லீம்களையும், மதத்தை ஏற்காதவர்களையும் அறவே ஒழித்துவிட வேண்டும் என்கிறார். அவ்வாறு படுகொலை செய்வதற்கு அவர் சொல்வது, சுத்தப்படுத்துவதாம். அதாவது சுத்தமான இந்துத்வா உருவாக கிறித்தவ, இஸ்லாமிய மதச் சார்பற்றவர்கள் என்கிற அசுத்தங்களை அகற்ற வேண்டுமாம்.
இப்படியொரு சிந்தனையை இன்றளவும் பேசி, வெறியைத் தூண்டும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்காமல், நிலத்திற்கும், நீருக்கும் சண்டை போடுகிறவர்கள் தொழில் நடத்தி வருவாய் ஈட்டுகிறவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார் குணா என்றால் அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்ற அய்யம் எழுகிறது. எனவே, குணாக்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
காந்தியடிகள் சென்னைக்கு வந்த முதன்முறை சீனிவாச அய்யங்கார் வீட்டிற்குச் சென்றபோது, இந்தியாவின் மாபெரும் தலைவரை வீட்டிற்குள் அழைத்துச் செல்லாது திண்ணையிலே உட்கார வைத்துப் பேசி அனுப்பினார். பார்ப்பனர் அல்லாதவர் காந்தி என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரை வீட்டிற்குள் விடவில்லை ஆரியப் பார்ப்பனர்கள். ஒரு நாட்டின் தந்தை என்ற தகுதியுடைய, இந்திய மக்களின் ஓர் உயரிய தலைவரையே ஆரியப் பார்ப்பனர்கள் திண்ணையோடு திருப்பியனுப்பினர் என்றால் மற்றவர் நிலை அன்றைக்கு என்ன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
அதே காந்தியார் இரண்டாவது முறையாக அதே சீனிவாச அய்யங்கார் வீட்டிற்குச் சென்றபோது கூடத்திற்குள் அழைத்துச் சென்று உபசரித்தனர். அதன்பின் பேட்டியளித்த காந்தி, திண்ணையோடு அனுப்பப்பட்ட எனக்குக் கூடத்திற்குள் குந்தி பேச இடம், அய்யர் வீட்டில் கிடைத்ததற்குக் காரணம் ஈ.வெ.ரா.
பெரியாரின் பிரச்சாரங்களும், தொண்டுமேயாகும் என்று நன்றியுடன் கூறினார் என்றால் பெரியாரின், திராவிடத்தின் பங்கு இந்தத் தமிழ்மண்ணிற்கும் தமிழன் நிமிரவும் எந்த அளவுக்கு உதவியன என்பதை குணாக்கள் மனச்சான்றோடு சிந்திக்க வேண்டும். காந்திக்கே இந்த நிலையென்றால் அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்த அளவிற்குத் தமிழர்களை ஒடுக்கி அடக்கி உயரவிடாமல் செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள். ஆரியப் பார்ப்பனர் வீட்டில் கழிவுகளையும், மலத்தையும் எடுக்க தாழ்த்தப்பட்ட தோட்டி வரக்கூடாது. அதைவிட மேம்பட்ட ஜாதியினர் அள்ளவேண்டும்! ஆக, பார்ப்பனர் வீட்டில் மலம் அள்ளக்கூட தாழ்த்தப்பட்டவனுக்கு அனுமதியில்லை என்ற அநியாயம் நிலவிய காலத்தில் பெரியார் ஆரியப் பார்ப்பன எதிர்ப்பை எடுத்தது எப்படி தவறாகும்?
அவனவன் அவனவன் ஜாதித் தொழிலைச் செய்யவேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத்தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? இப்படிப் பேசியவர் யார் தெரியுமா? குணாவால் போற்றப்படும் இராஜ கோபாலாச்சாரியார்தான். அதுவும் எங்கு பேசினார் தெரியுமா? சென்னை திருவான்மியூரில் 29.06.1952இல் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது பேசியது (தி ஹிந்து, 30.06.1952).
சலவைத் தொழிலாளர் மாநாட்டிலே ஒரு முதலமைச்சரே இப்படிப் பேசினார் என்றால் இந்தத் தமிழ்நாட்டில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் பார்ப்பனர்களா? கன்னடர், தெலுங்கர், மலையாளிகளா? தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
இதே இராஜாஜி, ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொன்னார்.
ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாதென்றும், இதை நன்கு யோசித்துத்தான் நம் முன்னோர் வர்ணாசிரம முறையை வகுத்தனர். அதன்படி அவரவர் தங்கள் முறைக்கு (ஜாதிக்கு) ஏற்றவாறு நடந்து (தொழில் செய்து) மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்.
(கரூர் பசுபதி பாளையத்தில் 29.01.1961இல் ஆச்சாரியார் பேச்சு சுதேசமித்திரன் 1ஆம் பக்கம்)
இந்த ஆரியப் பார்ப்பனரின் யோக்கியதைப் பற்றி காமராசர் என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்.
1937இல் அவர் (இராஜாஜி) முதலமைச்சராக வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1952இல் மீண்டும் முதலமைச்சராக வந்தபோது 6000 பள்ளிகளை மூடி, மீதியுள்ள பள்ளிகளிலும் அரை நேரம் படிப்பு, அரைநாள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்றார்... என்று சுட்டிக்காட்டும் காமராசர்- ஆச்சாரியார் முதல்மந்திரியாக இருந்தபோது 15,000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது 27,500 பள்ளிகளாக உயர்த்தி இருக்கிறோம். 1952இல் எல்லா இடத்திலும் பள்ளியைத் திறக்க விரும்புகிறேன்... என்றும் கூறியுள்ளார்.
(ஆதாரம்: ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்
தந்தை பெரியார், திராவிடர் கழக வெளியீடு, பக்கம் 108).
காமராசரின் இந்தப் பேச்சு போதாதா? பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்து தமிழர்களுக்குக் கல்வி கொடுத்துக் காப்பாற்றியதே மிகச் சரியான செயல் என்பதற்கு.
அதனால்தான் காமராசர், சுயமரியாதை என்பது என்ன? அறிவுக்கும், உழைப்புக்கும் உயர்வு தரும் பண்புதான். இந்த சுயமரியாதை இயக்கத்தின் பயனாகத்தான் தமிழ்நாட்டில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
நம்மிடையே நிலவி வரும் பலவிதமான வேற்றுமைகளும், ஜாதி முதலிய பேதங்களும் கூடாது. அவற்றை அடியோடு அகற்ற வேண்டும். அதுதான் சுயமரியாதை வாழ்வு. அதுதான் இந்த நாட்டிற்குத் தேவை!
(17.08.1961இல் காமராசர் சென்னையில் பேசியது. நவ இந்தியா 18.08.1961, 4ஆம் பக்கம்).
ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பதே நம் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று தமிழறிஞர் மறைமலையடிகள் வலியுறுத்திக் கூறினார்.
தமிழ் மக்கள் எல்லார்க்கும் தொடர்ந்து தீது புரிந்து வரும் ஆரியப் பார்ப்பனரை நஞ்சினுங் கொடியராக நினைத்து, அவர் எவ்வகையிலும் நம்பால் அணுகுதற்கு இடந்தராது விழிப்பாயிருத்தலே தமிழர் ஒவ்வொருவரும் கருத்தூன்றிக் கைக் கொள்ளற்பாலதாகிய முழு பெருங் கடமையாகும்.
(மறைமலையடிகளாரின் வேளாளர் நாகரிகம்
பக். 87)
தமிழன் இடம், தமிழன் கட்டிய கோயில் சிதம்பரம் நடராசர் கோயில் அந்தக் கோயிலில் ஆறுமுகசாமி என்ற முதியவர் திருவாசகம் பாடியதற்காக, வயிற்றுப் பிழைப்பிற்கு வந்த தீட்சதர் கூட்டம் அவரை அடித்து உதைத்துக் கொடுமை செய்தது. இச்செய்தி 04.6.2000 கல்கி ஏட்டிலே வந்துள்ளது. பெரியார் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியபின்பு, இன்றைக்குக்கூட இக்கொடுமை நடக்கிறது என்றால் அன்றைக்கு நிலை என்ன?
தமிழர்களுக்குச் சமஸ்கிருத ஆண்டைத் திணித்துத் தமிழ்ப் பண்பாட்டைக் கொடுத்தனர்; தமிழர் வீர வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப்பெரியோர் வழிபாடுகளை, சடங்கு வழிபாடுகளாக ஆக்கிப் பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம், திருமஞ்சனம், யாகம் என்று எண்ணற்ற மூடத்தனங்களைத் திட்டமிட்டுப் புகுத்தி அறிவோடு வாழ்ந்த தமிழனத்தை மடமையில் வீழ்த்தி, அடிமையாக்கினர். இதையெல்லாம் கன்னடர்களும் தெலுங்கர்களுமா செய்தனர்.
வரதட்சணை, சீமந்தம், விவாக சுபமுகூர்த்தம், கன்னிகாதானம் என்று சடங்குகளைப் புகுத்தி, தமிழர் மேற் கொண்டிருந்த பகுத்தறிவு வாழ்வைப் பாழ்படுத்தினர். வெட்டிச் செலவில் தமிழர்கள் கடனாளியாகி, இருக்கும் சொத்தை இழந்து வருவாய்க்கு வழியின்றி வறுமையிலும் கடனிலும் கவலையுடன் காலம் கழிக்கிறார்கள்.
எந்த ஆரியப் பார்ப்பனராவது அலகு குத்துகிறாரா? நெருப்பில் நடக்கிறாரா? சாமி ஆடுகிறாரா? தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கிறாரா? அக்கினிச் சட்டி ஏந்துகிறாரா? ஆனால் நம்மவரை இத்தனையும் செய்யச் சொல்லி அதில் கடவுள் மகத்துவம் இருக்கிறது என்கின்றனர். அதற்கு நாளேடுகளில் பக்கம் பக்கமாகச் செய்தி வெளியிடுகின்றனர்.
ஆக, தமிழ் மக்களை முட்டாளாக்கி, அவர்கள் விழிப்பு பெற்று மேலே வருவதைத் தடுக்கும் முயற்சியில் ஆரியப் பார்ப்பனர்கள் அக்காலந்தொட்டு இக்காலம் வரை முழு மூச்சாக இருக்கிறார்களே இதில் தமிழர் எதிரிகள் யார்?
இன்றைக்குப் பெங்களூரிலும், கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் தமிழர்கள் இலட்சக் கணக்கில் வாழ்கிறார்கள், அதேபோல் அவர்களும் தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இன்றைக்குப் பொறியியல் படித்த தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் பெங்களூரில்தான் வேலை பார்க்கின்றனர்.
ஆனால், எந்த ஆரியப் பார்ப்பனர் நிறுவனத்திலாவது அவர்களைத் தவிர வேறு யாருக்காவது வேலை தந்திருக்கிறார்களா? பெரியார் ஆரிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய காலத்தில், அவர்களின் ஆதிக்கமும், கொடுமையும், நம் மக்களை இழிவுபடுத்தியதும், தாழ்த்தியதும், உயர வரவிடாமல் நசுக்கியதும், நம் திறமைகளைப் பல நூற்றாண்டுகளாய் ஒடுக்கியதும் கொஞ்சம் நஞ்சமா? பழைய வரலாற்றை, நடப்புகளை திருப்பிப் பார்த்தால் உணர்வுள்ள தமிழனின் இரத்தம் கொதிக்குமே!
உண்மை இப்படியிருக்க தமிழன் எதிர்த்துப் போராட வேண்டியது ஆரியப் பார்ப்பனர்களைத்தானேயன்றி மலையாளிகளையோ, கன்னடர்களையோ, தெலுங்கர்களையோ அல்ல. நமக்கும் அண்டை திராவிட மாநிலத்தவர்களுக்கும் உள்ள சிக்கல்கள் உரிமை சார்ந்தவை. பங்காளிச் சண்டை போன்றது. ஒரு வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி அடித்துக் கொள்ள வில்லையா? கொலைகூடச் செய்வதில்லையா? அப்படித்தான் இது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கக் கூடாது என்று அடம் பிடித்தனர். அமைதியான புரிந்துணர்வு பேச்சின் மூலம் சிலை திறக்கப்பட்டது.
இப்படி காவிரி நீர்ச் சிக்கலானாலும், முல்லைப் பெரியாறு ஆனாலும், பாலாறு சிக்கலானாலும் ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்து உரிமைப்படி, நீதிப்படி தீர்வு தர வேண்டும். இதுவே சரியான வழிமுறை.
இதற்காக நாம் அவர்களுடன் மோத வேண்டும் என்று குணா போன்றோர் உசுப்புவது, உண்மை எதிரிகளான
ஆரியப் பார்ப்பனர்களை ஒதுக்கிவிட்டு, நம் இனத்தவர்களுக்குள் மோத விடுவதும் அதற்கு வழிகாட்டும் செயலாகும்; தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத்
துரோகமாகும்.
ஆகவே, பெரியார் அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்களை எதிரியாகக் கொண்டு, இனப்போர் செய்ததும், அவர்கள் ஆதிக்கத்தைத் தகர்த்து நம்மை தட்டி எழுப்பி உயர்த்தியதும் சரியான அணுகுமுறையாகும்.
எனவே, இனப்பகை எது, உரிமைச் சிக்கல் எது என்பதற்கான வேறுபாடு அறிந்து தமிழர்கள் செயல்பட வேண்டும். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியம் யாருக்குப் பயன்படும்? இதை குணாக்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாது குணா குற்றஞ்சாட்டுவது அறியாமையில் அல்ல, ஆரியத்தின் மீதுள்ள பற்றுதலால். எனவே, இவர்களிடமும் இவர்கள் பரப்பும் கருத்துக்களை ஏற்பதிலும் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது ஆரியத்திற்கே ஆதாயம் தரும்! தமிழர்க்கு அழிவு தரும்!
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment