3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா - part- 2
தற்போது இந்தியாவில் காணப்படும் குரல் ஒலிப்புமுறை, எழுத்து முறை, குகைக் கல்வெட்டுக்களில் சதுரமாகவும் வட்டமான வடிவிலும் காணப்படுகின்ற நாகரி எழுத்துக்களின் மூலம், அதன் திருந்திய வடிவம், ஃபெனீசியன், கிரேக்க எழுத்துக்களிலிருந்து தோன்றியதாகும். அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு முன்னரே இந்தியாவில் கிரேக்க எழுத்துக்களின் தாக்கம் நிகழ்ந்திருக்கிறது. வடஇந்தியாவில் காணப்படும் எழுத்துக்களின் மற்றொரு பண்புக்கூறு, செமிட்டிக் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். அசோகனின் காலத்திலும் அதற்குப் பின் பேக்டீரியன் அரசர்கள் காலத்திலும் செமிட்டிக் மொழியின் தாக்கம் வடஇந்தியாவில் இருந்துள்ளது. பேக்டீரிய மன்னர் வெளியிட்ட நாணயங்களிலும் இந்த எழுத்து முறை காணப்படுகிறது. கிரேக்கர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே இந்தியாவின் வடக்கு எல்லைப்புற நாடுகளில் இந்த மொழிக் கூறுகள்,
பண்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, மேற்கத்திய நாட்டிலிருந்து தனித்தன்மை வாய்ந்த எழுத்துமுறை கொண்டுவரப்பட்ட பிறகு (வடஇந்திய) இந்த எழுத்துமுறையை மேலும் செப்பமான முறையில் செய்துருவாக்கல் பணி அதிகம் தேவைப்படவில்லை. அது அசிரிய, பாபிலோனிய, பெர்சிய ஆப்பு வடிவ எழுத்து முறைக்கு முந்தியதாக இருக்கலாம். எழுதுவது என்பதை அதுகுறித்த போதிலும் உண்மையில் செதுக்குவது அல்லது வரிசையாக வெட்டி வைப்பது என்றே பொருள்பட்டது; அல்லது சீனர்களின் ஒலியைக் குறித்துக்காட்டாத, சொல்லின் கருத்துக் குறியீட்டு எழுத்துவகை மாதிரி, இதனை முந்தியதாக இருக்கலாம்.
சமஸ்கிருதத்தில் எழுதுகோலைக் (பேனாவைக்) குறிப்பதற்குப் பயன்படும் சொற்களில் ஒன்று அக்சராட்டுலிகா அல்லது எழுத்துத் தூரிகை என்பது; இது பின் கூறப்பட்ட கருத்து யூகத்திற்குப் பொருந்துகிறது. எழுதுவது என்பதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் லிபி என்பதும் ஒன்றாகும். லிபி என்னும் இச்சொல் வண்ணம் பூசு, எண்ணெய் பூசு அல்லது வண்ணக் கலவை மேற்பூசு என்பனவற்றைக் குறிக்கக்கூடிய ஒரு வேர்ச்சொல் மூலத்திலிருந்து தோன்றியதாகும். முதலில் படம் வரை எழுத்துக்களுக்கு ஒருவேளை இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; மாஷி அல்லது மை என்பது புகைக்கரியிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
இந்த எழுத்து முறைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீர்மப் பொருள் இதுவேயாகும். வர்ணா எனும் சொல் அகர வரிசையில் ஓர் எழுத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது; முதலில் அது வண்ணம் (நிறம்) என்று பொருள்பட்டது. தொன்மைக் காலத்தில் கருத்துக் குறியீட்டின் அடையாளமாகப் படம் என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஒருவாறு நான் உறுதிசெய்து கொண்டேன். இந்தியக் குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் இந்துக்களின் மிகப் பழமை வாய்ந்த எண்ணுமுறை அமைப்பு - கிறித்துவ ஊழிக்கு முற்பட்டதும், அதனைத் தொடர்ந்து வருவதுமான இந்த எண்முறை அமைப்பு
சீனர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். என் சொற்பொழிவின் இறுதியில் இதுபற்றி நான் விளக்குவேன். இவற்றோடு மேலும் ஒரு கருத்தை நான் இணைக்க விரும்புகிறேன்.
தமக்கே உரித்தான,
சொந்தமான ஓர் அகரவரிசையை (எழுத்துக்களை) இந்தியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் தங்கள் கருத்து வெளிப்பாட்டிற்கான மாறுபடாத சிறிய ஆற்றல் உடைய எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய ஓர் அகர வரிசையை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்னும் ஒரு தனிப் பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள்! மேலும் அவர்கள் (இந்தியர்கள்) வானியல் பற்றிய கணிப்புகளையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது உறுதி. பேராசிரியர் வில்சன் குறிப்பிடுவது போல் அவர்கள் வேத காலத்திலேயே சூரிய ஆண்டையும், நிலா ஆண்டையும் இணைத்துச் சரிப்படுத்திக் கொள்வதற்கு இடைச் சேர்ப்பாக ஒரு மாதத்தையும் வைத்திருந்தார்கள்.
கிரேக்கர்களுக்கு முன் இவர்கள் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டிருந்தார்கள் என்று நான் கருதவில்லை. வேதங்களின் காலத்திலேயே இவர்கள், பொன்னையும், விலைஉயர்ந்த கனிமங்களையும் அவற்றின் எடைக் கனத்தைக் கொண்டு பயன்படுத்தினர். மனுவின் காலத்தில் சிறுசிறு தங்கத் துண்டுகளும், வெள்ளித் துண்டுகளும் மக்கள் வழக்காற்றில் இருந்தன. மற்ற நாடுகளில் அப்போது வழக்கிலிருந்த நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த முத்திரைகளைப் போல இத்துண்டுகளின் மீதும் அவற்றின் எடை அளவை அறிந்து கொள்வதற்காக முத்திரை பதித்திருந்தனர்.
வேதங்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். அவை பல்வேறு சந்தாக்கள் அல்லது அளவுகளைக் கொண்டுள்ளன. இந்த அளவுகள் எல்லாம் சமஸ்கிருத மொழிக்குத் தக்கவாறு செய்யுள்களாக மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க வகையிலும் ஓதுவதற்கேற்றவாறும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அளவுகளில் ஏழு அளவைகள், சில நேரங்களில், அக்னி என்ற கடவுளின் ஏழு வாய்களைப் போல, ஒன்றாக இணைத்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சில நேரங்களில் அந்தத் தொகுப்பிலேயே திரும்பவும் எடுத்துக் காட்டப்படுகின்றன. இவற்றில் முதன்மையானவை காயத்ரி, திருஷ்டப், ஜகாதி என்று அழைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் அவற்றின் தனித் தன்மைகளை விளக்கிப் பேசுவது தேவையற்றது என்று நான் கருதுகிறேன்.
வேதங்களின் இசைப் பாடல்கள் சுக்தா அல்லது லாதேஷன் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படுகின்ற கடவுளர்கள், அவர்கள் பெற்றிருப்பதாகக் கருதப்படுகின்ற திறன்களின் அடிப்படையில் அவர்கள் வேண்டிக் கொள்ளப்படவில்லை; மாறாக வழிபடுவோரின் விருப்பங்களையும் நன்மைகளையும் அவர்களிடமிருந்து (கடவுளிடமிருந்து) பெற்றுக் கொள்வதற் காகவே அந்தக் கடவுளர்கள் புகழ்ந்து பாடப்படுகிறார்கள். இவர்களை வழிபடுவோர் இவர்களிடம் வேண்டுவன யாவும் பொருளியல் சார்ந்தவையாகவே இருக்கின்றன. மழையை வேண்டும்பொழுது, தங்கள் வயல்களை வளப்படுத்த வேண்டும் என்றும், செல்வத்தை வேண்டும் பொழுது, கால்நடைச் செல்வத்தை (ஆடு, மாடுகளை) வழங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்.
ஆனால், குழந்தைகளைப் பற்றி வேண்டுகிறபோது, சிரார்த்தம், ஈமச் சடங்குகள் முதலானவற்றைச் செய்வதற்குக் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொள்வதைப் பற்றிய குறிப்பே இல்லை. பிற்காலத்தில் இந்துக்களின் வேண்டுதல்களில் இது முகாமையான இடம் பெற்றிருந்தது. உடல் நலத்தைப்பற்றி வேண்டுகையில் வலிமை, ஆற்றல், திறன் ஆகியவற்றையும், வெற்றியைப் பற்றி வேண்டுகையில் தங்கள் எதிரிகளை அடிமைப்படுத்துவதற்குத் துணைபுரிய வேண்டும் என்றும் அவர்கள் வழிபட்டு வேண்டிக் கொண்டனர். மாயையின் அழிவைப் பற்றிய சூத்திரங்களுக்கு (சுக்தா)ச் சில சிறப்புத் தன்மைகளைக் கொடுத்து அதனுடன் இணைத்திருக்கிறார்கள். இவற்றில் ஒன்று ரிக் வேதத்தின் இறுதி அஷ்டகாவிற்குக் கடைசியில் வருகிறது. அது உடலின் அனைத்து உறுப்புக்களிலுமுள்ள நோய்களை நீக்குமாறு வேண்டி ஓதப்படும் மந்திரமாகும்.
இந்த வேத இசைப் பாடல்களின் ஒரு சிறிதளவு பார்வை பட்டால்கூட, இந்த நாட்டு மக்களின் உற்பத்திக்கு (குழந்தைகள் உட்பட) அது புனிதமானதொரு தன்மையைக் கொடுக்கும் என்று பிற்காலத்து இந்து ஆசிரியர்கள் கூறினார்கள். பிரம்மா அல்லது வேறு எந்தக் கடவுளின் வாயிலிருந்தும் வேதங்கள் வெளிப்பட்டதாக அவர்கள் கூறினால் அது முழுவதும் தவறானதாகிவிடும். (என்று கருதப்பட்டது). அவற்றின் சூத்திரங்கள், பொதுவாக அவற்றை உருவாக்கிய மனிதர்களின் - ஆசிரியர்களின் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. அவற்றின் தொகுப்பிலும் இப்பெயர்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. தத்துவ ஆய்வு நூல்கள் சிலவற்றிலும் வேறு சில நூல்களிலும், இப்பெயர்கள், இவற்றை ஓதக்கூடாத வாய்மொழிப் பாடகர்களின் பெயர்கள் என்னும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
ஆனால், வேத இசைப் பாடல்களின் உள்ளடக்கப் பொருளை உற்று நோக்கும்போது இக்குற்றச்சாட்டு ஏற்கத் தக்கதாக இல்லை. கிரேக்கக் கவிஞர்கள், தங்கள் பாடல்கள் நன்முறையில் உருவாக வேண்டி உதவிக்கு வருமாறு அவர்தம் கலைத் தெய்வத்தை வேண்டி வணங்குவதைப் போலவே, இங்கும், முனிவர்கள் (சாதுக்கள்) தங்கள் இசைப்பாடல்கள் நல்ல வண்ணம் அமைவதற்குக் கடவுளரின் துணையை வேண்டி வணங்குகின்றனர். இத்தகைய பகுதிகள் பின் வருவனவற்றைப் போல வேதங்களில் அமைந்து கிடக்கின்றன. செல்வத்தில் விருப்பமுள்ள ஓ!
அக்கினியே! இந்திரனே! உங்களை என் மனத்தில் வைத்துச் சிந்தனை செய்கிறேன். உற்றார் உறவினராகவும் சுற்றத்தாராகவும் உங்களை நான் கருதுகிறேன்.
நீங்கள் எமக்கு அளித்துள்ள, வேறு எவரும் தராத
தெளிந்த புரிதல்களின் அடிப்படையில், நான் இந்தப் பாடலை உங்களுக்காக இயற்றி உள்ளேன். எம்முடைய உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் பேணி உதவுமாறு எம் விருப்பங்களை அதில் தெரிவித்துள்ளோம். இந்தப் புகழ்ச்சி
- மாருட்ஸ்
அவருடைய இசைப்பாடல்களின் வழியாக மதிப்பிற்குரிய ஓர் ஆசிரியர் உமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார். உம்முடன் இருப்போரின் நன்மைக்காக இந்தப் புகழ்மாலை உம்மை வந்தடையட்டும்!
அதனால் உணவும், வலிமையும், நீண்ட வாழ்க்கையும் எங்களை வந்தடைவதாகுக! இதே இசைப்பாடல் சொல் மாற்றமின்றி வேறோர் இடத்திலும் அப்படியே திருப்பிக் கூறப்படுகிறது. இந்த வழிபாட்டுப் பாடலை கிரிட்சாமதாஸ் இயற்றினார்; இந்தப் புகழ்ச்சிகள் அஷ்வின்ஸ் உங்களின் பெருமகிழ்ச்சிக்காக! சினம் தணிந்து இவற்றால் அமைதி அடைவீராக! சடங்குகளின் தலைவர்களே! இங்கே வாருங்கள்! பின்வருவோரால், திறன்மிக்க அவர்களால் வாழ்த்தப் பெறுவீர்கள்! இந்த உயிர்ப் பலியின்போது உங்களைச் சிறப்பான முறையில் நாங்கள் பெருமைப்படுத்துகிறோம். இதைப் போன்ற பல பகுதிகள் மாற்றம் ஏதுமின்றி வேதங்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. புத்துணர்ச்சியுடன் அதுவும் மனிதநிலைக்கு மேம்பட்ட ஒருவரிடமிருந்து, பிழையில்லாத - தவறில்லாத வழிகாட்டுதல், வேத இசைப்பாடல்களில் வேண்டப்படுவதைக் காண முடியவில்லை.
ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் ஆரியர்களும் நாமும் ஒரே மூல இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ரிக் வேதத்தின் பதிப்பாசிரியராகிய டாக்டர் மாக்சு முல்லர், இதனை உறுதியுடன் உண்மையென வெளிப்படுத்துகிறார். இந்தோ டியூடோனிக் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவுகளை உணர்ந்து கொள்ளாமல், சேகரிக்கப்பட்ட சான்றுகளை மட்டும் நோக்குவது சரியானதன்று; இந்தச் சொற்கள் எல்லாம் ஓர் உண்மையான மொழியின் எச்சங்கள், ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த ஓர் இனம் பேசிய மொழி அது, அந்த மொழியின் எச்சங்களைப் பிற்காலத்தில் வரலாற்றாசிரியர் உணர்ந்து கொள்வது மிகக் கடினமான பணியாகப் போய்விட்டது.
யூதர்களின் புனித நூல்களைப் படைத்தோரைப் புரிந்து கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. இருந்தபோதிலும், தொன்மை சான்று அந்தக் காலத்தின் பழம் பொருள்களான நினைவுச் சின்னங்கள் இப்போது நம் கைகளில் இருக்கின்றன. அறிஞர் பாப் அவர்களால் எடுத்து விளக்கிக் கூறப்பட்டுள்ள சொற்களின் வேற்றுமைப் பாகுபாடு, ஒப்பீடு, ஒன்றிணைவு முதலானவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, நூற்றுக்கணக்கான சொற்கள் புராணக் கதைச் சிறு தெய்வங்களைப் பற்றியனவாகவும், வானியல் கோள்களைப் பற்றியனவாகவும், புவியியல் பெயர் சார்ந்தனவாகவும் இருப்பதை நாம் காணமுடிகிறது.
பருப்பொருள் கூறுகளில், நாள்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் இவற்றில் ஏற்படும் மாறுதல்களில்; நம் உடல் உறுப்புக்களில், அறிவுசார் உழைப்பில், உடல்சார்ந்த உழைப்பில், நம் குடும்ப அமைப்புகளில், நம் உறவினர்களின் தகுதிப் பாடுகளில், நம்முடைய சமூகச் சார்பு நிலையில், விலங்குகளின்,
தாவரங்களின் பெயர்களில், அவற்றின் பாகங்களில், நம் வீடுகளில், தட்டுமுட்டுப் பொருள்களில், கருவிகளில், மதச் சடங்குகளில், வழிபாடுகளில்; அவர்களின் செயற்பாடுகளில், இயக்கங்களில், நோக்கங்களில், அவற்றின் விளைவுகளில், முடிவுகளில் இவை அனைத்திலும் தோற்றத்திலும், இவற்றின் வெளிப்பாடுகளிலும் இவை ஒன்று போலவே இருக்கின்றன. இன்றுவரை இந்த ஒற்றுமை நிலவுகிறது. ஆகவே ஆரியர்களும் நாமும் (வெள்ளையரும்) உடன் பிறந்தாரின் பிள்ளைகள்; மனிதக் குடும்பத்தில் நாம் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது வெளிப்படை.
இந்த மக்களில் ஒரு பிரிவினர் தெற்கு நோக்கிப் பயணமானவர்கள், மலைக் கணவாய்களைக் கடந்து இண்டஸ் ஆற்றை நோக்கி இந்தியாவிற்குள் வந்தார்கள். தங்கள் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பின்தொடர்ந்து (மேய்ச்சலை நோக்கி) அவர்கள் சென்றார்கள்; அங்கு வாழ்ந்த துரேனிய, தஸ்யூ மக்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு வந்தமையால், அவர்களின் தோலில் கருநிறம் ஏற்படத் தொடங்கியது. இவர்களில் இன்னொரு பிரிவினர் மேற்கில் நீண்ட தொலைவு அலைந்து திரிந்து, அங்கேயே தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், தங்கள் கப்பல்களோடும், பொருட்களோடும் இந்தியாவுக்குள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் ஏற்கனவே இங்கு வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த ஆரியர்களையும், தஸ்யூக்களையும் அடக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கம், பிரிந்துபோன ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்ததைக் குறிக்கும்படியாக அமைந்துவிட்டது.
பிரிந்தவர் இணைந்த அந்த நிகழ்வுகூட, மிக நெருக்கமானதாக இல்லை. அதற்கு முதன்மையான காரணம் ஜாதிதான்! இந்தக் கூட்டத்தின் மய்யப் பொருளைவிட்டு அதற்கு அப்பால் அது அய்ரோப்பிய அல்லது இந்தியக் கால்வழி மரபின் பெருமையோ சிறுமையோ அதற்கு அப்பால் செல்ல நான் விரும்பவில்லை.
இன்னும் இந்த நிலத்தில் இருள்சூழ்ந்து கிடக்கிறது! அய்யகோ! மாபெரும் இந்த நிலத்தில் வெறுப்பு, பிரிவு, மனமுறிவு, பிணக்கு, கொடுங்கோன்மை ஆகியவை மூலவிசையாக இருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு இது இந்தியாவின் சாபக்கேடாக விளங்கப் போகிறது! அறிவுக்குப் பொருந்தாத வெறிபிடித்த (ஜாதிய) நிறுவனங்கள் தவறான பாதையைச் சார்ந்து நின்று ஏமாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள பிரிட்டானிய அரசாங்கம் பொறுமையுடன் இதனை எதிர்கொண்டு வருகிறது. கிறித்துவத் தேவாலயம் நேர்மையான முறையில், வெளிப்படையான, அமைதியான முறையில் மதத்தைப் பரப்பிவருகிறது.
கடவுளின் கருத்தைப் பரப்புவதற்காக மட்டுமே
அதனை நம்பியே தன் பதாகைகளை அது விரித்துள்ளதாக மனமார ஒப்புக்கொள்கிறது. தற்போது ரத்தத்தாலும் புழுதியினாலும் மூடப்பட்டுக் கிடக்கும் அருவருப்பான மக்கள் நடமாட்டமில்லாத பாழ்பட்ட நிலமாகக் கிடக்கும் இந்த நாடு கடவுளின் பார்வையில்
- மனிதரின் கருணை மிகுந்த பார்வையில் இது சிறந்து விளங்குவதாகுக!
இந்தச் சொற்பொழிவில் ஒரு சுவையான உண்மையை எடுத்து மொழிவதற்கு என்னை இக்கருத்து அழைத்துச் செல்கிறது. முறையாகச் சொல்வதென்றால் வேத காலத்தில், தொல்பழங்காலத்து இந்தியர்களிடம் ஜாதி ஒரு நிறுவனமாக இயங்கியதில்லை; அதனைக் காண்பது அரிதாகவே இருந்தது. ரிக் வேதத்தின் அஷ்டகாவில்வரும் கடைசிப் பகுதியில் வரும் புருஷ சுக்தாவில் முதன்முதலில் ஒரு ஜாதிய முறை குறிப்பிடப்படுகிறது. அதுவும்கூட, தெளிவில்லாத முறையில், வளர்ச்சியற்ற முறையில் காணப்படுகிறது. அதன் சொல்லாட்சி முறையும் பல தெய்வ வழிபாட்டுணர்ச்சியும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தொன்மைமிக்க இந்த வேதங்களின் கலப்படமில்லாத எந்தப் பகுதியிலும் இதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், மனுவின் (தருமத்தின்) காலத்திலேயே ஜாதிய அமைப்பு நிலவியிருந்ததாகவும், இந்த அமைப்பு உருவாக்கம் அவரைச் சேர்ந்தது என்றும் வழிவழியாகக் கூறப்பட்டு வருகின்றது. அய்ரோப்பாவைச் சேர்ந்த கீழைப்புல ஆராய்ச்சியாளர்கள், இந்த முறை வேதங்களில் இணைப்பாகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஜாதிய அமைப்பு முறைக்குக் கொடுக்கப்படும் சான்றாதாரம் கூட ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. மேற்கண்ட கருத்திற்கு, அதாவது ஜாதி அமைப்புக்குப் பெரிதும் ஒத்திருக்கும் பகுதி வருமாறு:- அவர்கள் புருஷரை உண்டுபண்ணியபோது அவனை எத்தனைப் பகுதிகளாகப் பிரித்தார்கள்? அவனுடைய வாய் என்ன? அவனுடைய கைகள் எவை?
அவனுடைய தொடைகளும் காலின் கீழ்ப்பகுதிகளும் என்ன? என்று அறிவிக்கப்பட்டன?
பார்ப்பான் அவனுடைய வாயாகவும், இளவரசர் (போர்வீரர்) அவனுடைய கைகளாகவும், வைசியன் தொடைகளாகவும், சூத்திரன் அவனது காலடிகளாகவும் அதாவது கால்களில் தோன்றியவனாகவும் குறிப்பிடப்படுகிறது. இது அத்தொகுப்பில் நுண்பொருளாகவும், வெளிப்படையாக இல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளது. இது முதன்மையாகக் கீழ்வரும் கருத்துப் பண்பை வெளிப்படுத்துகிறது; பிராமணன், கடவுளின் விருப்பங்களை நமக்கு விளக்கியுரைப்பவர்; மிகப் பெரிய மனிதராகக் கருதப்படுபவர்;
மேலும் கடவுளர்க்குப் படைக்கப்படும் கொடைப் பொருள்களையும் படையல்களையும் பெற்றுக் கொள்பவர்; இவரே அந்த (ஆண்)
புருஷரின் வாயாகத் திகழ்பவர்; இளவரசர் அல்லது போர்வீரர், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பாதுகாப்பிற்கும் உரிய கருவியாக விளங்குபவர், இவரே அந்த புருஷரின் தோள்களாகத் திகழ்பவர்; வைசியர் வேளாண் தொழில் செய்பவர்; அதன் செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பவர்; இவரே அந்த புருஷரின் தொடைகளாக விளங்குபவர்; சூத்திரன் அல்லது அடிமை, அவர் உடம்பின் கீழ்ப்பகுதியில் கடைநிலையில் உள்ள உறுப்பினர், இவரே அவருடைய (பாதங்கள்) காலடிகள் ஆவார். இவையெல்லாமே நுண் பொருளாகவும், உருவகப் பொருளாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளன; பிற்காலத்தில் இவை வரலாறாகவும் கோட்பாடுகளாகவும் பார்க்கப்படலாயின.
வேதங்களின் நேர்மையான சிறந்த பகுதிகளை நாம் உற்று நோக்கும்போது, வேதகாலத்தில் ஜாதி இருக்கவில்லை என்ற முடிவிற்கு (ஊகம்) நாம் வருவது உறுதிப்படுகின்றது.
1.
பார்ப்பனர்கள் ஒருவகைத் தொழிற் பிரிவினராகவே குறிக்கப்படுகின்றனர். தனி ஜாதியாக அல்ல. மக்களிடமிருந்து அவர்கள் பிறப்பு (தோற்றம்) வேறுபட்டது என்பதனைக் குறிக்கும் ஒரு சொல் கூட வேதங்களின் நேர்மையான பகுதிகளில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அவர்களின் மூலத்தோற்றம் (பிறப்பு) காரணமாக அவர்கள் எவ்விதச் சிறப்புச் சலுகைகளை, அல்லது உயர்தகுதிகளை அவர்கள் கேட்கவில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் நிகழ்வுகளிலும் பிற மதச் சடங்குகளிலும் ஏனைய அர்ச்சகர்களோடு (பூசாரிகளோடு) சேர்ந்து (புரோகிதம்) பூசாரித் தொழில் செய்பவராகவே பார்ப்பனர்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் வேதங்களில் இவ்வாறுதான் குறிப்பிடப்படுகிறார்கள்: வேதங்களை இசையோடு ஓதுவோர், சதக்ருது! (இந்திரன்) உன்னைப் புகழ்ந்து ஓதுகிறார்கள். ரிக்குகளை இசைப்போர், உன்னைப் போற்றிப் பாடுகிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! ஒரு மூங்கில் கழியைப் போலப் பிராமணர்கள் உன்னை மிகமிக உயர்த்திப் புகழ்கிறார்கள். நீ அக்னி, ஃகோத்ரியின் அலுவலகமாக, போத்ரியின் இருப்பிடமாக, ரிட்விஜ் இடமாக, நெஷ்டிரியின் நிலையமாக நீ விளங்குகிறாய்!
உன் பக்தர்களின் அக்னீதரனாக நீ விளங்குகிறாய்! பிரசாஸ்திரியின் இயக்கமாக நீ இருக்கிறாய்! நாங்கள் வாழும் இல்லத்தின் உரிமையாளனாகவும் நீ திகழ்கிறாய்! இதில் எண்வகைப் பூசாரிகள் குறிக்கப்படுகின்றனர். இவர்களில் பிராமணன் கடைசியாக இடம் பெறுகிறான். மிகப் பெரிய சடங்கு நிகழ்வுகளில் பதினாறு வகைப் பூசாரிகள் இடம் பெறுகின்றனர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். வேதங்களின் மிகத் தொன்மை வாய்ந்த பகுதிகளுக்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே பிரம்மா அல்லது பிராமணன் என்ற சொல், கடவுளின் முகத்தில் தோன்றிய அர்ச்சகன் (பூசாரி) என்ற தனிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பிராமணன், தனது வேதியத் தொழிலிலிருந்து ஜாதிய உயர்நிலைக்கு எவ்வாறு மாறினான், எவ்வாறு வளர்ச்சி பெற்றான் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான பணி அல்ல; உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்பட்ட வேதகாலச் சடங்குகளில் அவனது சிறப்புக்குரிய தகுதி சடங்கு நடத்துநர் என்பதுதான். புரோகிதன் அல்லது வேலை செய்பவன் என்பதுதான் அதன் நேர் பொருளாகும்.
முதலில் இந்த மதிப்பினை (மற்றவர்களிடம்) மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டான்; பின்னர் விசுவாமித்திரனைப் போன்ற பலர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அக்னி நெருப்புக் கடவுள்; வானகத்துக் கடவுளர்க்கெல்லாம் அக்னியே புரோகிதன்; பிரம்மா அல்லது பிராமணனை அக்னியின் சார்பாளனாக (புரோகிதராக) இந்தப் பூவுலகில் அரசர்கள் வைத்துக்கொள்வது மிகவும் பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. இந்தப் புரோகித முறை, பிரம்மா, (பிராமணன்) என்ற அமைப்புமுறை, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற அமைப்பு முறையாக மாறிவிட்டது. பிராமணர்கள், பெரும் செல்வச் செழிப்புமிக்கவர்களின் இல்லங்களிலேயே தங்கி வாழ்ந்தனர். குறிப்பாக அரண்மனைகளில் அவர்கள் இடம் பிடித்துக்கொண்டு, அரசர்களைப் புனிதப்படுத்தும் செயல்களிலும், அவர்கள்
குதிரைகளை உயிர்ப்பலி கொடுத்து நடத்திய வேள்விகளை,
யாகங்களைப் புனிதப்படுத்தும் வேலைகளிலும் பிராமணர்கள் ஈடுபட்டு மிகுந்த செல்வாக்குப் பெற்றனர்.
அரசர்களின் வெற்றிக்காகவும் அவர்தம் கால்வழி மரபு நன்கு செழித்தோங்கவும் பிராமணர்கள் யாகங்கள் நடத்திப் பெருஞ்செல்வத்தைச் சுரண்டிக் கொண்டார்கள்; பிராமணரின் படிப்பும், கல்வியும் அவர்களுக்குப் படிப்படியாக மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்தன. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. அரசருக்கு அறிவுரை கூறுபவர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். கடவுளரோடு இவர்கள் பெற்றிருந்ததாகக் கூறப்பட்ட சிறப்பான தொடர்பு இவர்களுக்குத் தனியானதொரு புனிதத் தன்மையைக் கொடுத்தது; பிராமணன் ஆட்சி செலுத்தும் நிலைக்கு உயர்ந்தான்.
இந்தத் தகுதியோடு பிராமணன், இந்த நிலவுலகில் ஒரு கடவுளாகத் தன்னை மாற்றிக் கொண்டான். பூதேவர்களாகப் பிராமணர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்கள். இத்தகைய உயர்வு, அதாவது கடவுள் நிலைக்கு ஒரு மனிதன் தன்னை உயர்த்திக் கொண்ட உயர்வு, அல்லது கடவுளுக்கும் மக்களுக்கும் இடைத்தரகு வேலை பார்க்கும் உயர்ந்தோனாக ஏற்படுத்திக் கொண்ட உயர்வு, வேறு சில நாடுகளிலும் நடைபெற்றிருக்கிறது.
(2) வேதங்களின் ஆசிரியர்களாகக் கூறப்படுவோர் ரிஷிகள் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டனர். இவர்களே ஆரியச் சமூகத்தில்
மதவழிப்பட்ட நோக்கில் மிக உயர்ந்தோராகக் கருதப்பட்டனர்; இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிராமணர்கள் வகித்த உயர்பதவி, செய்த தொழில் ஆகியவற்றைப் பெரிதெனக் கருதிய மக்கள் இவர்களைத் தங்களின் ஆதாரமாகவும், உயர்வுக்கு உதவுபவராகவும் கருதிப் போற்றினர். பிராமணர்கள் பார்த்துவந்த இத்தொழில்கள் பரம்பரையாக வந்தபோதிலும், இந்திய மக்களிடையே அவர்கள் ஒரு வகுப்பாராக மட்டும் இருக்கவில்லை. மக்கள் சமுதாயத்தில் இவர்கள் அரச வகுப்பினராகவும், புரோகித வகுப்பினராகவும் இருந்து வந்தனர்.
வேதங்களில் பல்வேறு இசைப் பாடல்களை இயற்றியவர் என்று கூறப்படுகின்ற விசுவாமித்திரர், விஷ்ணு புராணத்தில் குறிப்பிடுவதைப் போல மிக இன்றியமையாத பழங்கதை மரபு சார்ந்த ஏழு ரிஷிகளில் ஒருவர்; இந்து மதவாதிகளால் ராஜரிஷி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விசுவாமித்திரர், அரசர்களில் அவர் ஒரு ரிஷியாக விளங்கியவர்; பிரம்மரிஷி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர்; அல்லது பிராமணன், அதாவது ரிஷிகளின் தரவரிசையில் முதன்மையாக இடம்பெறுபவர், அவருடைய திறமைகளுக்காகவும் கூர்த்த மதி நோக்கிற்காகவும் அவர் இவ்வாறு போற்றப்பட்டார். (இந்து மதத்தில் விசுவாமித்திரர் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். வரலாற்றியல்
பவுராணிக ஆசிரியர்களால் விசுவாமித்திரர் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறார். அதாவது அரசர், போர்வீரர் வகுப்பைச் சேர்ந்தவர்; சிறிது காலம் அவர் முடிமன்னராகவும் இருந்தவர்.
சூரிய குலத்தைச் சேர்ந்த குஷா வகுப்பினர்; பல அரசர்களின், முனிவர்களின் முன்னோராக விசுவாமித்திரர் விளங்குகிறார். அவருடைய தவ வலிமையின் ஆற்றலால், விசுவாமித்திரர் பிரம்மாவை வற்புறுத்தித் தன்னைப் பிராமண வகுப்பு வரிசையில் சேர்க்கும்படி செய்தார். வசிஷ்டருக்கு நிகராகத் தன்னை வைக்கும்படி செய்தவர்; வசிஷ்டரோடு பலமுறை வாதப் போர் புரிந்தவர் விசுவாமித்திரர்.)
வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற ஜமதக்னியும் ஒரு ரிஷியாவார். இவர் பிற்காலத்து இந்துப் புராணக் கதை மரபில் அவதாரா பரசுராமனின் தந்தை என்று கூறப்படுகிறார். மேலும் விசுவாமித்திரரின் மருமகனாகவும் இவர் விளங்குகிறார். விசுவாமித்திர,
ஜமதக்னி ஆகிய இருவரிடமிருந்தும் ரத்தக் கலப்புடைய பல்வேறு பிராமணப் பழங்குடியினர் தோன்றினர் என்று பழங்கதை மரபு கூறுகின்றது. வேதங்களின் பல்வேறு இசைப்பாடல்கள் அரச மரபினரால் அல்லது இவர்களிலிருந்து உயர்ந்தோராக்கப்பட்ட புரோகித வகுப்பினரால் இயற்றப்பட்டவையாகும்.
(3) ரிஷிகளும், புரோகிதர்களும் சமுதாயத்தின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். இப்போது உள்ள பிராமணர்களுக்கு இந்த உண்மை நன்கு தெரியும். ஆனால், பிற்காலத்திய அவர்களது சாஸ்திரங்களுக்கு நன்மதிப்புக் கொடுக்கும் வகையில் அவர்கள் இத்தகைய திருமணங்கள் அவர்களது தனிச் சிறப்புரிமை என்று கூறி வருகின்றனர். அதாவது அவர்கள் பிராமண வகுப்பில் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், அதற்குமேலும் உயர்வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பெண்ணை அவர்கள் திருமணம் செய்துகொள்வது அவர்களது தனிச்சிறப்புரிமை என்று நிலைநாட்டினர்.
ஆனால், கீழ்க்காணும் கதையைப் பற்றி அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ரிக் வேதத்தின் பல சூத்திரங்களின் ஆசிரியராகிய நிதி மஞ்சாரியின் தாயான உஷிக் என்பவள், அங்கா என்னும் அரசனின் அடிமை பெற்ற புகழ்பெற்ற மகள் ஆவாள்! காக்ஷிவாட்(நிதி மஞ்சாரி), தன் படிப்பை முடித்துக் கொண்டு, தன் ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை நோக்கிப் பயணமானான்; இரவு நேரம் ஆகிவிட்டதனால், சாலை ஓரமாகப் படுத்து உறங்கினான். காலையில், சானயா எனும் அரசன் (இவன் பாவயாவ்யா என்பவனின் மகன்) தன் பரிவாரங்களுடன் அந்த இடத்திற்கு வந்தவன், அந்தப் பிராமணனின் அயர்ந்த உறக்கத்தைக் கலைத்து அவனை எழுப்பினான்.
அந்த அரசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைக் கைதட்டி அருகில் வருமாறு அழைத்தான். அந்தப் பிராமணனின் தனித் தோற்றத்தைக் கண்டு அரசன் வியப்பில் ஆழ்ந்தவனாய், அவன் தகுதிமிக்க நற்குடியில் பிறந்தவனாக இருந்தால் அவனுக்குத் தன்னுடைய பத்துப் பெண் பிள்ளைகளையும் திருமணம்
செய்து கொடுத்து விடுவதென்று முடிவுசெய்தான். அவனது தகுதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், காக்ஷிவாட் எனும் அந்தப் பிராமணனைத் தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். பின்னர் தன் பத்து மகள்களையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.
அதேநேரத்தில் அந்தப் பிராமணனுக்கு ஏராளமான பொன்னையும், நூறு குதிரைகளையும், நூறு காளைகளையும், ஆயிரத்து அறுபது பசுமாடுகளையும், பதினொரு தேர்களையும் (ஒவ்வொருவருக்கும் ஒரு தேர்) ஒவ்வொரு தேரையும் இழுப்பதற்கு நான்கு குதிரைகள் எனக் கணக்கிட்டு 44 குதிரைகளையும் அவனுக்குப் பரிசளித்தான். காக்ஷிவாட், வேதத்தில், தன் மாமனாரின் பெருந்தன்மை மிக்க கொடைக் குணத்தை இவ்வாறு மகிழ்வுடன் கொண்டாடுகிறான்:- பெருந்தன்மை வாய்ந்த எந்த அரசர் என்னை அழைத்தாரோ அந்த அரசரிடமிருந்து காக்ஷிவாட் ஆகிய நான், தயக்கமின்றி அவர் அளித்த அளவற்ற பொற்காசுகளையும் நுற்றுக்கணக்கான போர்க் குதிரைகளையும், காளைகளையும் ஏற்றுக் கொண்டேன். இதன் வாயிலாக அந்த அரசன் தனது அழியாப் புகழை வானுலகமெல்லாம் பரவுமாறு செய்துவிட்டான்!
இவ்வாறு அந்தப் பார்ப்பானுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டவையல்ல; இன்னும் நிறையக் கொடுத்திருக்கிறார்கள் நாடாண்ட மன்னர்கள்! இதற்குப் பின்வந்த மன்னர்களும் இதே வேலையைச் செய்திருக்கிறார்கள்! பரதன் என்ற அரசன், அவனுடைய பட்டமளிப்பு விழாவின்போது, ஏழாயிரத்து நூறு கோடிக் கருப்பு யானைகளைப் பிராமணர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த யானைகளின் வெண்ணிறத் தந்தங்களுக்குப் பொற்கவசம் அணிவித்துக் கொடுத்திருக்கிறான்.
ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களுக்கு லட்சக்கணக்கிலான பசு மாடுகளைப் பரிசளித்தான் பரதன்! சொர்க்கத்தில் இருக்கும் கடவுளரைவிடப் பார்ப்பனர் நன்முறையில் வாழ்ந்தனர். அசுவமேத யாகத்திற்காக யமுனை ஆற்றின் கரையில் 78 குதிரைகளை பார்ப்பனர் எரித்துக் கொன்றனர்; கங்கைக்கரையில் 55 குதிரைகளை எரித்தார்கள். இராமாயணத்தின்படி, தசரதன் - தான் நடத்திய அசுவமேத யாகத்தின்போது, பார்ப்பனர்க்கு இந்தப் பூவுலகம் முழுவதையும் அன்பளிப்பாகக் கொடுத்தான். இந்தப் பூவுலகத்தைத் தங்களால் பாதுகாக்க முடியாது என்று அதனை மறுத்த பார்ப்பனர்கள், அதற்கு ஈடாக நூறாயிரம் பசுக்களையும் நூறு கோடிப் பொற்காசுகளையும் 40 கோடி வெள்ளிக் காசுகளையும் பெற்றுக் கொண்டனர்.
இப்போது மீண்டும் காக்ஷித் சொல்வதை நாம் கேட்போம்: போர்க் குதிரைகள் பூட்டிய பத்துத் தேர்களிலும் என் பத்து மனைவியரும் அமர்ந்திருக்க அவை என் அருகில் வந்து நின்றன; எங்களைப் பின் தொடர்ந்து ஆயிரத்து அறுபது பசு மாடுகளும் வந்தன. நாற்பது குதிரைகள் தேர்களை இழுத்து வர ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வர ஊர்வலம் புறப்பட்டது. பஜ்ராஸ் என்னும், காக்சிவாட்டின் உறவினர் குதிரைகளைத் தடவிக் கொடுத்துப் பொன்னாடைகளை அவற்றிற்கு அணிவித்தான்.
காக்ஷிவாட் தன் சொந்த (பார்ப்பன) வகுப்பில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளவில்லை என்று தெரிகின்றது. அந்த அரசனிடமிருந்து பெற்றுக்கொண்ட பெண்களே அவனுடைய தேவைக்கு அதிகமாக இருந்தார்கள்!
ரிஷிகளும் புரோகிதர்களும் அரச குடும்பத்துப் பெண்களை மணந்து கொண்ட நிகழ்வுகள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. (சியாவணா சுகன்யாவையும் ஜமதக்கினி ரேணுகாவையும் மணந்து கொண்டனர்.)
(4) சட்டப் புத்தகங்களிலும் சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்படுகின்ற சத்திரியா என்ற சொல் இந்து சமுதாயத்தில் இரண்டாம் படிநிலையில் உள்ள போர்வீரர்களை (வகுப்பை)க் குறிப்பதாகும். இது வேதங்களில் வலிமை வாய்ந்தவர்களைக் குறிப்பதற்கு வழங்கப்படுகின்ற பட்டப் பெயர் என்ற பொருளில் வருகின்றது. அதாவது யார் வலிமை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் சத்திரியர்கள் ஆவர். இந்தப் பொருளிலேயே இந்தச் சொல் வருணன், இந்திரன் முதலான கடவுளரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்களில் செத்ரோபதி என்ற சொல் (வயல்களின் உரிமையாளன்) நில உரிமையாளருக்குரிய பெயராகக் குறிக்கப்படுகின்றது; சத்ரபதி என்ற பெயர் அதிகாரத்தைப் பெற்றுள்ளவன் என்று பொருள்படும்; இவன் தன் அதிகாரத்தை எதன் மீதும் - எவர் மீதும் எந்த அளவும் செலுத்தக் கூடியவன்.
சத்திரியா என்ற சொல் சத்ரபதி என்ற சொல்லுக்கு இணையானதாகும். சத்ர என்ற சொல் பேரா. லேசன் குறிப்பிடுவதைப் போல செந்த் மொழியிலுள்ள ஷத்ரா (இது கட்டற்ற வல்லாட்சி என்றும் பொருள் தரும்) கிரேக்க மொழியிலுள்ள சதாரக் என்ற சொல்லுடன் பொருந்துவதாகும். இவற்றின் வேர்ச்சொற்பொருளை நோக்கினால் இவை அனைத்தும் உடல் வலிமையைக் குறித்து நிற்கின்றன என்பது விளங்கும். சத்திரியா என்ற சொல் விஷாஸ்பதி அல்லது விஷாம்பதி என்றும் பொருள்படும். ஓர் ஊரின் அல்லது மக்களின் தலைவன் என்று இச்சொற்கள் பொருள்படும்; ராஜ் என்பது லத்தீன் மொழிச் சொல்லாகிய ரெக்ஸ் (அரசன்) என்பதற்கு இணையானது; ராஜன்யா என்பது (இளவரசன்) ராஜ் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. ஆரிய அரசர்களும் ஆரிய இனத்தின் தலைவர்களும் ரிஷிகளால் வேதங்களில் அடிக்கடி புகழ்ந்துரைக்கப் படுகிறார்கள்.
ஆனால் இவர்கள் தெய்வீக ஆற்றலால் கடவுளின் நெற்றியில் தோன்றியவர்கள் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை; இதைப் பற்றி ஒரு சொல்லைக் கூடக் காண முடியவில்லை. பேராசிரியர் வில்சனும் மற்றவர்களும் குறிப்பிடுவதைப் போல,
அக்காலத்து அரசர்கள் சடங்கு முறைகளுக்கு எதிராகத் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டி அவற்றைப் புறக்கணித்து இருக்கிறார்கள் என்பதற்கு வேதங்களிலேயே பல குறிப்புக்கள் இருக்கின்றன. ஆதலின் பார்ப்பனரைப் போர்வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கும் எதிர்ப்பு இருந்துள்ளது என்பது மாபெரும் உண்மையாகும்.
மகாபாரதத்தில் அரச மரபினரான குருமரபினரும் பாஞ்சாலரும் தங்களின் அரசவைக் கூட்டத்தின் செயற்பாடுகளுக்குப் பார்ப்பனரின் அறிவுரையைக் கேட்காமலேயே சென்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மனுவின் சட்ட நூற்படி அரசர்கள், பார்ப்பனரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டுதான் தங்களின் அன்றாட அலுவல்களைத் தொடங்க வேண்டும். இது அரச மரபினருக்குக் கட்டாயம் தேவையான ஒன்றாகும்.
(5) வேத காலத்தில் விஷா என்பது பொதுவாக மக்கள் என்ற பொருளுடையதாய் விளங்கியது. இது வெஷா (வீடு) என்பதனோடு தொடர்புடையது. இதன் பெயரடையாகிய வைஷியா (Vesha) என்பது பின்னாளில் வீட்டு உரிமையாளரைக் குறித்து நின்றது; அல்லது பொதுமக்களில் ஒரு தனிமனிதனைக் குறிப்பதாக இருந்தது. விகஸ் என்னும் லத்தீன் மொழிச் சொல்லும் விகாக் என்னும் கிரேக்கச் சொல்லும் வெஷா (ஏநளாய) என்பதற்கு இணையான தொடர்புச் சொற்களாகும். (டாக்டர் முல்லர், விஷா எனும் இந்தச் சொல்வழக்கு மேலைநாடுகளின் ஊர்ப்பெயர்களோடு ஒட்டி வருவதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்; Greenwichwoolwich ) விஷா என்பது சில நேரங்களில், சமுதாயத்தில் நிலவிய நாட்டுப்புற, வேளாண் தொழில்சார்ந்த, ஏனைய தொழில்சார்ந்த வகுப்பினரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது அவர்கள் செய்துவந்த தேவைக்கேற்ற சிறுசிறு தொழில்களைக் குறிப்பதையே நாம் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தத் தொழில்களில் அவர்களுக்கு ஏகபோகத் தனிஉரிமை தரப்படவில்லை. ரிக் வேதத்தில் அஷ்வினை நோக்கி உரைக்கப்படும் உரைகளில் அந்தச் சமுதாயத்தின் பொதுவான விருப்பங்களையும், வழிபடுவோரின் விருப்பங்களையும் அல்லது உயிர்ப்பலி கொடுத்து அந்த வேள்வியைச் செய்வோரின் விருப்பங்களையும் நாம் காண முடிகிறது. பிரம்மாவை அன்புடன் ஆதரிக்க வேண்டுகிறோம்; இந்த யாகத்தினை அன்புடன் ஆதரிக்க வேண்டுகிறோம்;
அரக்கர்களைக் கொன்றொழிக்க வேண்டுகிறோம்; தீமைகளை வெளியேற்றுக; கத்ராவை (ஆற்றலை)ஆதரிக்க வேண்டுகிறோம்; மனித ஆற்றலை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்; பசுவை (தேனு - சொத்துக்களைக் குறிப்பது காமதேனு) ஆதரிக்க வேண்டுகிறோம்; மக்களை (அல்லது
இல்லத்தை விஷா) ஆதரிக்க வேண்டுகிறோம். இங்கு பொதுவான விருப்பங்கள் என்று குறிப்பிடப்பட்டவை பிற்காலத்தில் குறிப்பிட்ட ஜாதிகளுக்குச் சொந்தமானவையாக மாற்றப்பட்டுவிட்டன.
(ரிக் வேதத்தில் வரும் இந்தப் பகுதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிற்காலத்தில் இந்தப் பகுதியில் வரும் பல சொற்கள் உருமாற்றம் செய்யப்பட்டும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டும், சேர்க்கப்பட்டும் காணப்படுகின்றன. சாயன ஆச்சாரி, ஜாதிய உணர்வுடன் வழிபாடு -
பிரம்மா
என்பதை பிராமணன் என்றும், அதாவது வழிபடுகிறவன், சத்ரா (ஆற்றல்) என்பதை சத்திரியர்
அதாவது அந்த அதிகார ஆற்றலைச் செயற்படுத்துகிறவன் என்றும், தேனு
(பசுவையும்) விஷா (மக்கள்) வையும், வைசியர்கள் என்றும், இந்த வேள்விச்செயல் மக்களுக்குரியது என்றும், உரை எழுதியிருக்கிறார். இந்த விளக்கம் வியப்பிற்குரியதல்ல. (ஏனெனில் இதனை எழுதியவர் சாயன ஆச்சாரி) ஆனால், இது மிக மிகத் தவறானதாகும்.
இவை மக்களின் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் குறித்தனவேயன்றி ஜாதிகளைக் குறிக்கவில்லை.) வந்தேறிகளின் இன ஒற்றுமை தொடர்ந்தது; நாம் அடிக்கடி குறிப்பிடும் ஆரியர் என்ற பெயரால்
அவர்களின் மூதாதையர் வழிப் பெயரால் அவர்கள் குறிக்கப்பட்டனர். மகாபாரதத்தின்படி, பாண்டவர் காலத்தில் வைசியர்கள் அரசின் நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்தனர். அறிவுசான்ற விதுர், யது ஆகியோரின் செயற்பாடுகள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இஃதோர் அளவிலேயே இருந்தது; இந்தியாவின் செழிப்பு மிகுந்த சமவெளிப் பகுதிகளில் ஆரியர்கள் குடியேறிய பிறகு வைசியர்களுக்கு ஆடுகள், மாடுகள் முதலான கால்நடை மந்தைகளையும், வேளாண்மையையும் கவனிக்கும் சிறப்புக்குரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டது. இத்துடன் வாணிகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவை யாவும் மனுவின் பெயரால் நடைபெற்றன. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, பசு மாடுகளைப் பாதுகாத்து வைத்திருப்பவன் அந்தச் சமுதாயத்தின் தலைவனாக இருந்து வந்த காலம் அது!
(6) மனுவும் இந்துச் சட்டமும், சூத்திரர்களை இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கம் என்று பொதுவாகக் குறிப்பிட்டபோதிலும் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களே; இரண்டாம் பிறப்புக்கு (இரு பிறப்பாளர்) அல்லது புனிதமான பிறப்புக்கு அவர்கள் உரிமையுடையோர் அல்லர்! இப்படிப்பட்ட இவர்களைப் பற்றிப் பழைய வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. ஒரு இடத்தில்கூட இவர்கள் குறிப்பிடப்படவில்லை! இவர்கள் முதன்முதலாக, மகாபாரதத்தில்தான், அபிராஸ் என்பவர்களுடன் இண்டஸ் ஆற்றின் கரையில் வசித்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது என்பது நம் கவனத்திற்குரியதாகும். இந்த அபிராஸ் என்பவர்களை இதே நிலையில் தாலமியும் குறிப்பிடுகிறார்.
இவர்கள் வாழ்ந்த மாவட்டத்திற்கும் அபிரியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்களின் வழிமரபினர் இன்றும் சிந்து கட்ச், கத்தியவாட் பகுதிகளில் இடையர்களாகவும், உழவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தப் பகுதிகளிலும்
இவற்றை அடுத்துள்ள பகுதிகளிலும் சூத்திரர்களைப் பற்றிய மிகத் தெளிவான சிறப்புமிக்க அறிகுறிகள்
- குறிப்புகள் இருக்கின்றன. தொன்மைமிக்க வரலாற்றுக் காலத்தில், இண்டஸ் ஆற்றின் கீழ்ப்பகுதியில் இருந்த நகரத்தில் இவர்களின் பெயர் மறுபடியும் காணக் கிடைக்கின்றது என்று பேரா. லேசன் கூறுகிறார். இவ்வாறாக இவர்கள் (சூத்திரர்கள்) ஒரு தனித்த நாட்டினராக இண்டஸ் ஆற்றின் அணிமைப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது நிறுவப்படுகின்றது. அதாவது இதை இப்படிச் சொல்லலாம், பழங்காலத்தில் ஆரிய இந்தியர்கள் எந்தப் பகுதியில் வசித்து வந்தார்களோ அந்தப் பகுதியில்! ஆரியர்கள் தொன்மைக் குடிமக்களான இந்த மண்ணின் மைந்தர்களை வெற்றி கொண்டிருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகின்றது; நாட்டின் உட்பகுதியில் வாழ்ந்து வந்த இந்த மண்ணின் தொன்முது குடிமக்களை ஆரியர் வெற்றிகொண்ட பின்னர் சூத்திரா என்ற பெயர், பிறரைச் சார்ந்து அடிமை ஊழியம் செய்துவந்த ஜாதி மக்கள் அனைவருக்கும் சூட்டப்பெற்றது. இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டிருக்க முடியாது.
இதனுடைய சரியான உச்சரிப்பு - எழுத்து SUDRA என்றுதான் இருக்க வேண்டும் என்று துணிவதற்கு இடம் இருக்கிறது. இது சரியாக இருக்குமானால், பழைய பெர்சிய மொழியில் இது ஃகூத்ரா (HUDRA) என்று ஒலிக்கப்பட வேண்டும். இது மெகஸ்தனீசின் கருத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது; அதாவது இந்திய நாடுகள், அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பாக பெர்சியன்களுக்குத் துணைப் படையினரை அனுப்பியுள்ளன.
இந்த நாட்டில் ஆரியர்களால் வென்று அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிறரைச் சார்ந்து அடிமை ஊழியஞ்செய்து வந்த மக்களுக்கும் சூத்திரன் என்ற பெயர் நீட்டித்து வைக்கப்பட்டு அவர்கள் சூத்திரர் ஆக்கப்பட்ட பின்னர், மிக எளிதாகவும், மகிழ்வுடனும் வெறுக்கப்பட்ட பழங்குடியினரான சண்டாளர்களுக்கும், அம்பஸ்தாஸ் மக்களுக்கும் பிறருக்கும் சூத்திரப் பட்டம் படிப்படியாகச் சூட்டப்பட்டது. நாட்டின் உட்பகுதியில் இருந்த சூத்திரர்களில் சிலரும் பழங்குடி மக்களில் சிலரும்ஆரியர்களின் மொழியோடு ஒத்திருக்கும் ஒருவகைக் கிளைமொழியைப் பேசிவந்தனர் என்று ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர்; நானும் அவ்வாறே கருதுகிறேன். இக்கிளை மொழியானது ஆரியர்களுக்கு முற்பட்ட வந்தேறிகளின் மொழியோடு தொடர்புடையதாயிருக்கலாம் என்று கருதுகிறேன். (தஸ்யூ எனப்படுகின்ற தாசர்களின் பல பெயர்களும், ஆரியர்களின் மற்ற எதிரிகளின் பெயர்களும் ஆரியப் பொருள் உடையனவாகவே உள்ளன.
வடஇந்திய மொழிக் குடும்பத்தில் இன்றும் வழக்கில் உள்ள பல சொற்கள், சமஸ்கிருத மொழியோடு இன உறவுடையனவாகத் தோன்றுகின்றன. அவை சமஸ்கிருத மொழியோடு ரத்த உறவுடையன; அம் மொழியிலிருந்து அவை உடனடியாகப் பெறப்பட்டவை அல்ல. இந்தக் குறிப்பு அந்த நம்பிக்கையை எதிர்ப்பதற்காகக் கூறப்படுவதல்ல; இந்திய மொழிகளின் நிலை இந்தக் கருத்தினை உறுதிப்படுத்துகின்றது. ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்த பழங்குடியினர் பலரும் சித்தியன் அல்லது துரேனியன் இனவழிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.)
சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உண்மையான மத உரிமைகளைப் பற்றி ஆரியச் சமூகம் பெரிதும் அக்கறை காட்டவில்லை. ஒரு தயக்கம் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்தது. வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்களின் காலத்தில் ஆரியர் நடத்திய யாகங்களில் (வேள்விகளில்) பங்கெடுத்துக் கொள்வதற்கு அவர்கள் (சூத்திரர்கள்) அனுமதிக்கப்பட்டார்கள். ஆரியர்களின் வெற்றி தொடர்ந்து நீடித்துக் கொண்டு வந்தபோது, ஆரியர்கள் கங்கை, யமுனை ஆகிய ஆறுகளின் கிளையாறுகள் பாய்ந்த சமவெளிப் பகுதிகளில் நிலையானதோர் ஒழுங்குபட்ட சமுதாய அமைப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இக்காலத்தில் சூத்திரர்களைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளித் துன்புறுத்தி ஆரியர்கள் கீழ்மைப்படுத்தினார்கள். மனு தருமத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்களின்படி சூத்திரர்கள் இழிவாகவே நடத்தப்பட்டார்கள்; மனு கூறுவதாவது ஒரு பிராமணன் சூத்திரனுக்கு அறிவுரை தரக் கூடாது; பிராமணன் சாப்பிட்ட எச்சத்தைக் கூடச் சூத்திரனுக்குத் தரக் கூடாது; நெய்யோ, வெண்ணெய்யோ எதுவும் அவனுக்குத் தரக் கூடாது.
ஆன்மீக அறிவுரை தரக் கூடாது. சூத்திரன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் எதனையும் சொல்லக் கூடாது. அடிமைத் தொழில் செய்யும் சூத்திரனுக்குப் பாவம் போக்கும் பரிகாரச் சட்டவிதிகளை அவனுக்குச் சொல்பவனும், அவற்றைச் செய்யும் முறைகளை அவனுக்குச் சொல்லித் தருபவனும் சூத்திரனோடு சேர்ந்து அசம்விருதா என்னும் நரகத்தில் மூழ்குவான் (மனு:8:417)
இவ்வாறு இந்தியச் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களை இழித்தும் பழித்தும் தாழ்த்தும் செயல்கள் ஆதி வேதங்களில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. ஏற்கனவே கூறியதைப் போல, சூத்திரர் இருந்தனர் என்ற கருத்தை ஒருமுறைகூட எந்த இடத்திலும் மறைமுகமாகக் கூடக் கூறவில்லை.
Comments
Post a Comment