3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா part - 1
நூல்
- 3000
ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
-ஆசிரியர் - ஜான் வில்சன்
(ஆரியர்கள்)
தொன்மைக்கால இந்தியாவும் தற்கால இந்தியாவும் பரப்பளவிலும் அவற்றிவன் உற்பத்தியிலும் பெருத்த வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றன. உலகின் பிற நாடுகளோடு அவை கொண்டிருக்கும் தொடர்புகளிலும் வேறுபாடு இருக்கின்றது. தற்கால இந்தியா, வடக்கில் இந்துகுஷ்
இமயமலைத் தொடர்களையும் தெற்கில் சிலோன் (இலங்கைத் தீவையும் முழுமையாக உள்ளடக்கியிருக்கிறது. மேற்கில் சிந்து, குஜராத், கொங்கன், மலபார் கடற்கரைப் பகுதிகள் முதல், கிழக்கில் சீனா, பர்மா, ஒரிசா, கொரமண்டல் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பிரிட்டானிய அரசுக்குச் சொந்தமானது என்றும், இதன் மொத்தப் பரப்பளவு 14,65,322 சதுர மைல்களாகும் என்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகின்றது. (ஏறக்குறைய 15,05,322 சதுர மைல்).
உலகில் மிக உயரிய, கண்ணுக்கினிய, விழுமிய மலைத் தொடர்களுக்கும் தொகுதிகளுக்கும் இடையே பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களும் பழங்குடி மக்களும் அடங்கிய இருபது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்டிருந்த அந்தப் பெரும் நிலப்பரப்பு, அளவான குளிர்காலத்தையும் வேனிற்காலத்தையும் பெற்றிருந்தது. அந்த நிலப் பரப்பைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலிருந்து நீர் ஆவியாகி, மண்ணை வளப்படுத்தும் வான்மழையாக மலைப்பகுதிகளில் பொழிந்து செழிப்பாக்குகிறது.
பருவ காலத்தில் கதிரவன் தன் ஆற்றல்மிக்க ஒளிக் கதிர்களால் பயிர்களுக்கு உயிர்ப்பூட்டி உற்பத்தியைப் பெருக்குகிறான். இருப்பினும் இதன் சில பகுதிகளில் குறிப்பாக இராஜபுதனத்தின் எல்லைப் பகுதிகளில் மழை இல்லை; ஆதலின் அவை மழையில்லா மாவட்டங்களாகி அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தும் மரணத்தின் நிழல்படிந்த பாலை நிலமாகக் காட்சியளிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கே வைத்து உற்று நோக்கினால், இந்த நாடு மிகச் சிறந்த இயற்கை வளத்தையும் வல்லமையையும் பெற்றுத் திகழ்கிறது எனலாம்.
உலகில் மிக உயரிய, கண்ணுக்கினிய, விழுமிய மலைத் தொடர்களுக்கும் தொகுதிகளுக்கும் இடையே பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களும் பழங்குடி மக்களும் அடங்கிய இருபது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்டிருந்த அந்தப் பெரும் நிலப்பரப்பு, அளவான குளிர்காலத்தையும் வேனிற்காலத்தையும் பெற்றிருந்தது. அந்த நிலப் பரப்பைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலிருந்து நீர் ஆவியாகி, மண்ணை வளப்படுத்தும் வான்மழையாக மலைப்பகுதிகளில் பொழிந்து செழிப்பாக்குகிறது.
பருவ காலத்தில் கதிரவன் தன் ஆற்றல்மிக்க ஒளிக் கதிர்களால் பயிர்களுக்கு உயிர்ப்பூட்டி உற்பத்தியைப் பெருக்குகிறான். இருப்பினும் இதன் சில பகுதிகளில் குறிப்பாக இராஜபுதனத்தின் எல்லைப் பகுதிகளில் மழை இல்லை; ஆதலின் அவை மழையில்லா மாவட்டங்களாகி அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தும் மரணத்தின் நிழல்படிந்த பாலை நிலமாகக் காட்சியளிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கே வைத்து உற்று நோக்கினால், இந்த நாடு மிகச் சிறந்த இயற்கை வளத்தையும் வல்லமையையும் பெற்றுத் திகழ்கிறது எனலாம்.
வடக்கில் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர்களிலிருந்தும் சமவெளிப் பகுதிகளிலிருந்தும் உருவாகித் தென்மேற்காக ஓடிவரும் சிந்து நதியும் (INDU) அதன் கிளை ஆறுகளும், தென்கிழக்கில் ஓடிவரும் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளும் இணையில்லா ஆறுகளாக விளங்குகின்றன. இவை வேளாண்மைக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் பெரிதும் பயன்பட்டதோடு, மிக இன்றியமையாதவையாகவும் திகழ்ந்தன. விந்தியாத்ரி, சாகியாத்ரி மலைத் தொடர்களில் உருவாகி ஓடிவரும் துணையாறுகள் மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்தோடி மக்களின் தொழில், வணிகத் துறைகளை வளப்படுத்துகின்றன. மேலும் ஆங்கில அரசின் கீழ், பணியாற்றத்தக்க, தகுதியுடையவர்களாக அவர்களை அறிவியல் துறையில் வளர்த்தன. அதன் காய்கறி உற்பத்தியானது மக்களின் தேவைக்கும் ஆடம்பர வாழ்வுக்கும் ஏற்ற வகையில் உதவியாக இருந்தது. அது மட்டுமல்லாது இந்த மண்ணின் தொல்குடி மக்களது தேவைக்குமேல் காய்கறி உணவுப் பொருள் உற்பத்தி இருந்தமையால் அவர்கள் புலால் உணவை நாடவேண்டிய தேவை இல்லாமற் போய்விட்டது.
இந்த மண்ணில் அழியாது விளைந்து கொண்டிருந்த சிலவகைத் தாவரங்களிலிருந்து தங்கள் ஆடைகளை அவர்கள் தயாரித்துக் கொண்டார்கள். தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே வளர்ந்திருந்த ஒருவகை மரத்தின் கிளைகளையும் இலைகளையும் கொண்டு தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்களின் உழைப்புக் கருவிகளைச் செய்வதற்கான மூலப் பொருள், அந்த நிலங்களிலேயே விளைந்து கிடந்தன. சில மாவட்டங்களில் பயன்மிக்க கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக, இயந்திரங்களுக்குப் பயன்படும் நிலக்கரி முதலான கனிமங்களை அவர்கள் பண்படுத்தப்பட்ட, பண்படுத்தப்படாத நிலங்களிலிருந்து தோண்டி எடுத்தனர்.
அரசர்கள் காட்டுவிலங்காண்டிகளைப் போலப்) பேராசை கொண்டவர்களாக முத்துக்களையும் பொன் அணிமணிகளையும் அணிந்திருந்தனர். வைரம், பொன், மாணிக்கம் முதலானவை நாகரிகம் படைத்த இந்த மண்ணில் செல்வர் வீடுகளிலும் அரண்மனைகளிலும் ஒளிவீசி அழகு செய்தன.
தங்களது உற்பத்திப் பொருட்களை அயல்நாட்டுப் பொருட்களோடு பண்டமாற்றுச் செய்து கொண்டு வெளிநாடுகளுடன் வணிக உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். இதனைத் தங்களின் வசதிக்காகவே அவர்கள் செய்து கொண்டார்களேயொழியப் பொருளியல் முட்டுப்பாடுகளுக்காக அல்ல. தொலைதூர நாடுகளிலிருந்து பண்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டன. அவற்றைக் கையிருப்பில் மிகையாக வைப்பதற்காக அல்ல; இயற்கைப் பேரழிவு நேரிடும்போது, எல்லைப் புறத்தில் வாழும் மக்களின் தேவைக்காகப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இதன் ஆண்டு வருமானத்தில் பிரிட்டானிய அரசுக்கு 300,00000 ஸ்டெர்லிங் இந்தியா செலுத்திக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நாட்டின் மொத்தப் பொதுக்கடன், அதன் சொத்துக்களைக் கொண்டு உடனடியாக எளிதில் தீர்த்துவிடக் கூடியதாகவே இருந்தது; இதன் ஈராண்டு வருமானத்தைவிட அந்தக் கடன் குறைவாகவே இருந்தது. (1855 - இல் இந்திய அரசின் ஆண்டு வருமானம் 2,91,33,000 ஸ்டெர்லிங்காகவும் இந்த ஆண்டில் அதன் பொதுக் கடன் 5,55,31,120 ஸ்டெர்லிங்காகவும் இருந்தது.)
இந்த நாடு ஏற்றுமதி செய்த பொருட்கள் மிக அதிகமானவை; அருமைப்பாடு மிக்கவை; மதிப்புமிக்கவையாக இருந்தன. உலகின் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்களின் வாயிலாக ஏறக்குறைய 11 லட்சம் டன் பொருட்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. மேற்கத்திய நாடுகளிலிருந்து பெருமளவு செல்வம் தொடர்ந்து இங்கே வந்து குவிந்து கொண்டிருந்தது. இப்போது அது பரந்த உள்ளம் கொண்ட, நற்செயலாற்றும் விருப்பமுடைய,
ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஓர் அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இன்னும் அதனைப் பாராட்ட அது கற்றுக் கொள்ளவில்லை. உலகிலேயே அறிவிற் சிறந்த, கொடைக்குணம் கொண்ட நாடு அது என்பதை இவர்கள் இன்னும் சரியானபடி உணர்ந்து கொள்ளவில்லை.
இந்த மாலை வேளையில் நாம் கலந்துரையாடப் போகும் பழங்கால இந்தியா இன்று பெற்றுள்ளதைப் போன்ற பெருமையை - முதன்மையை அன்று பெற்றிருக்கவில்லை. இண்டஸ் என்னும் ஆறு பாய்ந்தோடும் நாடு என்ற அளவிலேயே அது அறியப்பட்டிருந்தது. இண்டஸ் என்னும் இந்தச் சொல்லில் இருந்துதான் அது
(இந்தியா) என்று தன் பெயரைப் பெற்றது. பின்னர் மேலே நாம் குறிப்பிட்டுள்ள எல்லைகளுக்குட்பட்ட பரந்த நிலப்பரப்பிற்கு அந்தப் பெயர் வழங்கி வருவதாயிற்று. இது முதன்மையாக பஞ்ச நாடா, கிரேக்கர்களின் பென்டிபொடாமியா அல்லது பிற்காலத்தில் வழங்கப் பெற்றதைப் போல அய்ந்து ஆறுகள் பாயும் நிலமான பஞ்சாப் என்று பெயர் பெற்றது. இண்டஸ் ஆற்றின் கிளையாறுகள் பாய்கின்ற மாவட்டங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது.
தொன்மைச் சமஸ்கிருதத்தில் அது சிந்து அல்லது சிந்தஸ் என்று பெயரிடப்பட்டது. இதற்கு இண்டஸ், என்ற சொல்லே ஒப்பானதாகும். (நிகரானது). உஸ் என்னும் ஒலிப்புடைய அந்த எழுத்து h என்று உருமாற்றம் பெற்றுவிட்டது. கிரேக்கர்களைப் போல இங்கு வாழ்ந்த மக்களும் மிக எளிதில் அந்த உருமாற்றத்தைச் செய்தார்கள். நாம் மிகக் கவனமாகத் துல்லியமான - சரியான உச்சரிப்புடன் அதனைக் கையாள வேண்டும். இண்டஸ் நதி பாய்ந்தோடிய நிலப்பரப்பே (அது மட்டுமே) ஆதி இந்தியாவாகும். இப்போது இந்தியாவை விட்டுவிட்டு சிந்து அல்லது பஞ்சாப்பைப் பற்றிப் பேசுவது என்றால், அது பிரிட்டனின் வடபகுதியிலுள்ள நார்தம்பிரியப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பழைய ஆங்கிலியா மாவட்டங்களுக்குச் செல்லும்போது நான் இங்கிலாந்தை விட்டு வெளியேறிவிட்டேன் என்று கூறும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானதாகும்.
பழங்கால இந்தியா, தற்கால இந்தியா உள்ளடக்கியிருக்கும் எல்லைப் பரப்பில் அல்லது வாய்ப்பு வளங்களில் இருபதில் ஒரு பகுதியைக் கூடப் பெற்றிருக்கவில்லை. இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இதன் பெருமைமிக்க செல்வச் செழிப்பைப் பற்றித் தெரியவில்லை. அவர்களின் பின் சந்ததியினர் பிற்காலத்தில் இக்கண்டத்தை விரிவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு அவர்கள் பெறப்போகும் வெற்றிகளைப்பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. தங்கள் இனத்தவரின் திறமையும் ஆற்றலும் எந்தத் துறையில் வளரப் போகின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
தொன்மைமிக்க இந்த நிலத்தில் அவர்களுக்கு முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த தொல்குடி மக்களை (இந்த மண்ணின் மைந்தர்களை) எவ்வாறு முன்னேற்றுவது அல்லது அவர்களை எவ்வாறு அடக்கி ஒடுக்கித் தாழ்நிலையில் வைத்திருப்பது என்பதில் தங்களின் பின் சந்ததியினர் தங்கள் திறமையைப் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் அவர்கள் அறியவில்லை; மனிதக் குடும்பத்தின் மூலவர்களாகிய அப்பழங்குடி மக்கள், இயற்கையின் வியப்பிற்குரிய வளங்களைத் தெரிந்து கொள்ளவும் அந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்த இயற்கை வளங்களைச் சுவைக்கவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த இயற்கை வளங்கள் இன்றும் நம்மைச் சூழ்ந்து நின்று களிப்பூட்டுகின்றன.
இந்தியக் கண்டத்தைப் பற்றிய, புவியியல் விளக்கங்களோடு கூடிய இந்த முன்னுரை போதுமானதாகும். அடுத்து, காலவரிசைப்படியும் இனப்பரப்பு வகையிலும் சிறியதொரு விளக்கத்தைக் காணலாம். இந்தச் சொற்பொழிவுக்கு, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா அல்லது, வேதகாலத்து ஆரியர்களின், இண்டஸ் நதிக்கரையில் அவர்களது சமூக வாழ்க்கை நிலை என்று நாம் தலைப்பிட்டிருக்கிறோம். ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் இவ்வாறு நாம் செய்திருக்கிறோம். அதனால் நாம் இலக்கியச் சான்றாவணமாக மாற்றியிருக்கிறோம். முறையாக அமைந்திராத
பண்படுத்தப்படாத பழங்கதைத் தொகுதிகளைக் கொண்ட தொன்மை வாய்ந்த இந்திய - சிங்களப் படைப்புகளைக் (இலக்கியங்களைக்) கொண்ட தொகுதிகளின் இடையே, ஒன்றிரண்டு காலப் பகுதிகளைத் துல்லியமாக வரையறை செய்திருக்கிறோம்.
இவற்றில் மிக முக்கியமானது கி.மு.544
அல்லது 543 ஆம் ஆண்டில் புத்தவியலைத் தோற்றுவித்த சாக்கியமுனியின் மரணமாகும். புத்தவியல் என்பது எதற்கும் அஞ்சாத யூகங்களைக் கொண்ட ஒரு முறையாகும். அது உயிர் வாழ்வனவற்றையும், தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களையும் இயற்கையின் மேலும், வளர்நிலைப் போக்கின் மேலும் ஏற்றிச் சொல்லும் முறையாகும். அது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த படைப்பாளனைப் பற்றி அல்லது நீடித்து நிலைத்திருக்கும் கடவுளைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பேசுவதாகும். மேலும் அது தனி மாதிரியான அவனுடைய ஆன்மவியல் அழிவில்தான் மனிதனின் மிகச் சிறந்த நற்பண்புகளை உணரமுடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்தச் சிந்தனை சார்ந்த மனப்போக்கு
முழுமையான வளர்ச்சியடையாத அல்லது அமைப்பாக (நிறுவனமாக) உருவாகாத இக்கருத்தியல் பிறருடைய எழுத்துக்களிலும் காணப்படுகிறது. குறிப்பாகச் சாங்கியத் தத்துவத்தைத் தோற்றுவித்தவரான கபிலமுனியின் எழுத்துக்களிலும் இக்கருத்தியல் நிலவுகிறது. சாங்கியம், இந்தியத் தத்துவ முறைகளில் ஒன்றாகும். இது புத்தவியலுக்கு
முன்பு தோன்றியதாகும்; தொன்மைசான்ற சாங்கிய புத்தவியல் நூல்களும், காலத்தால் இவற்றிற்கு முற்பட்டவையாகக் கருதப்படும் வேறு இரண்டு தத்துவங்களும் இவற்றிற்கு முன்பாகவே இசைப்பாடல் வடிவிலான இலக்கியம் இருந்தமையை ஒப்புக் கொள்கின்றன. அவை வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இந்தத் தத்துவத் துறைகளில் ஒன்றான - குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பூர்வமீமான்சா (அல்லது பழைய மீமான்சா) என்பது வேதங்களைப் பற்றி, பழமை வாத விளக்கங்களைத் தருவதற்கு முற்படுகின்றது. இதன்மூலமாக இவற்றைத் தொன்மை வாய்ந்த உயரதிகாரப் படைப்புக்களாக அது ஏற்றுக்கொள்கிறது. மீமான்சாவுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த உத்தர மீமான்சா (அல்லது பிந்தைய மீமான்சா) அல்லது வேதாந்தா என்பது அவர்களின் முடிந்த முடிபான தெய்வீக ஆற்றலின் பல்வேறு வடிவங்களை நிலைநிறுத்துவதற்கு முற்படுகின்றது. அஃதொன்றே உயர்ந்தது என்று இவை குறிப்பிடுகின்றன. வேதங்கள் தோன்றிய காலத்திலிருந்து ஊகக் (கற்பனைக்) கருத்துக்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்தத் தத்துவத் துறைகள், உரைநடையில் எழுதப்பட்ட பிரமாணங்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. பிரமாணங்கள் வேதங்களோடு தொடர்புடையவை; ஆனால் இவற்றின் நடை,
சொல்லாட்சி, வேதங்களின் பாட்டடிகளை எடுத்தாள்கின்ற தன்மை ஆகியவற்றை வைத்து நோக்கும்போது இவை இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வேதங்களுக்குப் பிற்பட்ட காலப் பகுதிகளில் வழங்கிவந்த பல்வேறுபட்ட பாடல் துணுக்குகளின் தொகுப்பே என்பது தெளிவாகிறது. இவை உருவாக்கப்பட்ட காலத்திற்கும் தொகுப்புக்களாக வடிவமைக்கப்பட்ட காலத்திற்கும் பெரும் இடைவெளி இருந்திருக்க வேண்டும்; அதன் பின்னரே பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டன. அவை சம்கிதாஸ் எனப்பட்டன.
வேதம் என்ற சொல்லுக்கு அறிவின் ஊற்று என்று பொருள் கொள்ளலாம். இதனுடைய சமஸ்கிருத மூலச் சொல் விட் (vid) அல்லது வித் (vidh) என்பதாகும். கிரேக்க மொழியில் விதா (vidha), (vida) என்றும் லத்தீன் மொழியில் விடோ (vido), விடியோ (video) எனவும், ஆங்கிலத்தில் விட் (wit) எனவும், வேதம் என்ற சொல்லின் மூலங்கள் காணக் கிடக்கின்றன. நான்கு வேதங்களிலும் ரிக் வேதமே மிகவும் தொன்மை சான்றதாகும். ரிக் வேதம் 11,000 ரிக்குகள் அல்லது ஈரடிச் செய்யுள்களைக் கொண்டதாகும்.
ரிக் என்பதிலிருந்தே ரிக் வேதம் எனும் பெயர் இதற்கு ஏற்பட்டது. இவற்றின் ஆசிரியர்களுக்கேற்ப இசைப்பாடல் வடிவில் இவை அமைக்கப்பட்டன. தத்தம் கடவுளரை எழுப்புவதற்காக இவை இவ்வாறு அமைக்கப்பட்டன. யஜுர் வேதாவின் கண்ணிகள் யாஜசனேயா என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பாடற் கண்ணிகள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையே இவை கூறுகின்றன. யஜுர் வேதத்தின் பாதி அளவுள்ள சாம வேதம், ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே வழிமொழிகின்றது.
உயிர்ப்பலி கொடுப்பதற்குரிய பாடல்களை சாம வேதம் வரிசைப்படுத்திக் கூறுகின்றது. அதர்வண வேதம் காலத்தால் மேற்கூறிய மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டது. சாம வேதப் பாடல்களும் எதிரிகளை அழிப்பதைப் பற்றியே பேசுகின்றன. அதர்வண வேதமும் ரிக் வேதக் கருத்துக்களை அப்படியே வழிமொழிகின்றது.
இவை இவ்வாறு அமைந்திருக்க ஒரு நேர்மையான திறனாய்வின் வழி நாம் இவற்றின் காலத்தைக் கணக்கிட்டால் இவை
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக அதாவது ஏசு பிறப்பதற்கு முன்பு கி.மு.பதினைந்து அல்லது பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்ற முடிவிற்கு நாம் வரலாம். இந்திய வரலாற்றில் இந்தக் காலப் பகுதிதான் மிகுந்த சுவையுடையதாகும். இக்காலப் பகுதியில்தான் இந்தியாவில் உருவான நிறுவனங்களின் கருமூலத்தை ஊற்றுக் கண்ணினைத் தோற்றுவாய்தனை நாம் காண்கிறோம்.
இந்தியாவோடு தொடர்பு இருந்தபோதிலும் மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் வாழ்ந்த மக்களுக்கு இதனைப் பற்றி நீண்டகாலம் முழுமையாகத் தெரியவில்லை. வேதங்களை ஓதிக் கொண்டிருந்தாலும் பாடிக் கொண்டிருந்தாலும், இந்தியர்களுக்கு, இன்றுவரை அவர்களுக்கு உரிமை படைத்த வழிபாடுகளில் அவர்கள் இவ்வாறு ஓதிவந்த போதிலும், அவர்கள் தங்களின் முன்னோர்களைப் பற்றியோ தங்கள் தாய்நாட்டைப் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் போற்றி வணங்கிய புனிதமான வேதங்களோடு ஒத்துப்போக வேண்டிய தொன்றுதொட்டுவந்த மனத் தடுமாற்றமும், பிற்காலத்து எழுந்த சாத்திரங்களின் வல்லாண்மை அதிகார மிரட்டலும் அவர்களைப் பணிய வைத்ததோடன்றி, அவர்களின் கடவுளாகிய பிரம்மாவின் நான்கு வாயில்களிலிருந்தும் (முகம், தோள், தொடை, கால்) அவர்கள் எல்லோரும் பிறந்ததாக அவர்கள் கருதினார்கள்.
மேலைநாட்டு அறிஞர்கள், இவற்றை அறிந்து ஆராய வேண்டும் என்னும் அறிவுக் கூர்மையோடு வரும்வரை இத்தகைய பழமைக் கருத்துக்களை அவர்கள் தங்களுடனேயே வைத்திருந்தார்கள். அய்ரோப்பியப் பொற்காசுகளும் அவர்களின் விடாப்பிடியான வற்புறுத்தல்களும், நம்முடைய காலத்திலேயே, வேதங்களை அய்ரோப்பியரின் உடைமைகளாக்கிவிட்டன.
(ரிக் வேதத்தின் முதன்மைப்படி ஒன்று பல ஆண்டுகளாக என்னிடம் இருந்தது. பம்பாய் ஆட்சித்துறை உயர் அதிகாரியாக இருந்த ஜெ.எஸ்.லா என்பவருக்காக அதை நான் பெற்றுக் கொண்டுவந்தேன். அது கிறித்துவத்தின் வெற்றி நினைவுப் பரிசாகக் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஒரு பார்ப்பனரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்).
அய்ரோப்பியக் கல்வியும் அய்ரோப்பிய அறிவுடைமையும், இந்தியாவிலிருந்தவர்களின் உதவியும் அவர்களின் முன்னோர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களும் வேதங்களைப் பற்றிய விளக்கங்களுக்குக் காப்பிடமாக அமைந்துவிட்டன. பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் இப்போது வேதங்களை வெளியிடுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். கிழக்கிந்திய கம்பெனி இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதோடு இவற்றை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்டும் பணியையும் அது செய்து வருகின்றது.
ரிக் வேதத்தின் மூன்று தொகுதிகள் திறனாய்வுக் குறிப்புகளுடன், சாயன ஆச்சாரியா எழுதிய விளக்க உரையுடன் சமஸ்
கிருதத்தில், கிழக்கிந்திய கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாக்சு முல்லர் இதனை வெளியிடுவதற்காகப் பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதனையடுத்துப் பேராசிரியர் வில்சன் (எனும் ஆங்கிலேயர்) ரிக் வேதத்தின் மூலத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
(வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் அவற்றை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் பார்ப்பனர்க்கு ஆங்கில அரசின் கிழக்கிந்திய கம்பெனி பெருமளவில் நிதி உதவி செய்துள்ளது என்பதை இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பு ஆசிரியர்)
வேத நூல்களைத் திறந்து பார்க்கும்போது, அவை யாரைப் பற்றிப் பேசுகின்றன, யாருடைய மதச் செயல்களைப் பற்றிப் பேசுகின்றன என்றால், அவை ஆரியர்களைப் பற்றிப் பேசுகின்றன. வேதங்களுக்கு உரையெழுதிய பார்ப்பன உரையாசிரியர்களும், இவர்களைத் தொடர்ந்து எழுந்த இலக்கியப் படைப்புக்களும் ஆரியர் என்னும் இந்தச் சொல்லுக்கு மதிப்பிற்கு உரிய மனிதர்கள் என்று பொருள் கூறுகின்றனர்.
எனினும், ஆரியர் என்ற சொற்பெயர் ஒரு பட்டப்பெயர் அல்ல என்றும் அது ஆரியர்களின் மூதாதையர் வழிவந்த ஆரியர் இனத்தைக் குறிக்கும் சொல் என்றும் வேதங்கள் தெளிவாக நிறுவுகின்றன. ரிக் வேதத்தில் பல இடங்களில் ஆரியா என்ற சொல் மதிப்பிற்குரிய, மிக உயர்ந்த, மேலான என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் இதனை பார்சி மொழியில் வழங்கும் அய்ரியா என்பதற்கு இணையானதாக ஒப்புக் கொள்வர். வேண்டிடாட் எனுமிடத்திலும் வேறுசில பகுதிகளிலும் வழங்கி வந்த தூய அய்ரியா, கிரேக்கர்களின் ஆரியானா, ஈரானின் கிழக்குப் பகுதியில் பிற்காலத்தில் வழங்கிவந்த ஆரியானா ஆகியவை இங்கே குறிப்பிடத் தக்கவையாகும். (யாட்ஸ் போன்ற பொது வழிபாட்டு முறை வாசகச் சுவடிகளில் உள்ளதைப் போன்று, அண்டை நாடான தூரான் அல்லது தூய்ரியா என்பதனுடன் இது மிக நெருக்கமாக இணைக்கப் பட்டிருக்கிறது) பெகிஸ்டன் பட்டயத் தகடுகளில் உள்ள மறைபொருளைக் கண்டறிந்து, சர்.ராலின்சன், பேரா. வெஸ்டர்கார்ட், திரு.நாரிஸ் ஆகியோர் மொழிபெயர்த்து வெளிப்படுத்தியுள்ளமையைப் போன்று இவற்றை விளக்க வேண்டும்.
முடிவாக, வேதங்களின் தாயகத்திற்கு ஆரியா என்ற சொல்லின் முடிந்த முழு நீட்சியே பெயராக அமைந்துவிட்டது. சொராஸ்டிரியர்களின் தூய அல்லது மூலவடிவ அய்ரியா இதனின்றும் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஈரானின் பழங்குடி மக்கள் சொராஸ்டிரியப் பகுதியிலிருந்து சிதறுண்டு போயினர்.
வேதகாலத்தில் ஆரியர்கள், நாகரிக முதிர்ச்சியற்ற அவர்களது நாட்டில் இருக்கவில்லை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலமாகத் தெளிவாகின்றது என்று நான் கருதுகின்றேன். பனிக் காலங்களை வைத்து ஆரியர்கள் அவர்களது ஆண்டுகளைக் கணக்கிட்டுக் கொண்டனர். பனிக்காலம் ஒரு நாட்டில் குறிக்கப்படுவதைக் கொண்டு ஆரியர்கள் காலத்தைக் கணக்கிட்டனர். வடக்கில் வாழ்ந்த பழங்குடி மக்களைப் போல ஆரியர்கள் குதிரைகளை உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதில் (அசுவமேத யாகம்) அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டினர். ஆரியர்கள், அவர்களைச் சுற்றி வாழ்ந்தவர்களைக் காட்டிலும் வெண்ணிறமாகவும் அழகாகவும் இருந்தனர். அவர்கள் அக்காலத்தில் வந்தேறிய எல்லைப் பகுதிகளில் முழுமையாக அமைதியை நாடுகிற வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
இங்கே நான் குறிப்பிடுகின்ற உண்மைச் செய்திகள் யாவும், ரிக் வேதத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மொழிபெயர்த்த அறிஞரான பேராசிரியர் எச்.எச்.
வில்சன் அவர்களின் கருத்துக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்கள் (தொல்பழங்காலத்து இந்தியர்கள்) வடக்கத்திய இனமரபு வழியில் வந்தவர்கள் என்பது அவர்களின் பேச்சு முறையினால், கருத்து வெளிப்பாட்டு முறையினால் உறுதியாகின்றது. அவர்கள் வழிபாடு நடத்தும்போது, நீண்ட நாள் வாழ வேண்டுவதும், நூறு பனிக் காலங்களைக் காண அருள்புரிய வேண்டுமெனக் கேட்பதும் வெப்பம் மிகுந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் விருப்பமாக இருக்க முடியாது. ஆரியர்கள் அழகு மிகுந்த தோற்றமுடையவர்கள்; இந்தியாவை முற்றுகையிட்ட வெளிநாட்டவர்களில் இவர்கள் கவர்ச்சி மிகுந்த தோற்றம் கொண்டவர்களாக விளங்கினர்.
மழைக் கடவுளான இந்திரன், இந்த நிலத்தின் தொல்குடி மக்களை, நாகரிகமற்ற காட்டுவிலங்காண்டிகளை அழித்துவிட்டு வளம் நிறைந்த வயல்வெளிகளையெல்லாம் வெண்ணிறமும் அழகிய தோற்றமும் கொண்ட தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அழிக்கப்பட்ட மக்களை தஸ்யூக்கள் என்று குறிப்பதனால் நமக்குச் சில அய்யப்பாடுகள் எழுகின்றன. தஸ்யூ என்னும் சொல்லாட்சி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தஸ்யூக்கள் என்ற ழைக்கப்படும் இவர்கள், மதச் சடங்குகளைச் செய்யாதவர்கள், அத்துடன் இவர்கள் மதச் சடங்குகள் செய்வோரை அவ்விடத்தினின்றும் விரட்டியிருக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றது. (ரிக் வேதத்தின் பல இடங்களில் இவ்வாறு கூறப்படுகின்றது. தொன்மைத் திராவிடர்கள் மதச் சடங்குகளுக்கு எதிரானவர்கள் எனும் வரலாற்றுண்மை இதனால் புலனாகின்றது மொழிபெயர்ப்பு ஆசிரியர்)
தஸ்யூக்கள் என்று இங்கே குறிப்பிடப்படுவோர், பார்சி (மொழி)யில் உள்ள புனித நூல்களில் குறிக்கப்பட்டுள்ள டாக்யூஸ் எனும் இனத்தவரே என்பதில் அய்யமில்லை. பெகிஸ்டன் பட்டயங்களில் டாகியாஸ் என்று கூறப்படுபவர்களும் இவர்களே. இதற்கு நாடுகள் என்றும், மாநிலங்கள் என்றும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இவர்கள், யூதரல்லாத கோயிம், அல்லது ஜென்டைல்ஸ் (யூதருக்குப் புறம்பானவர்கள்) என்னும் உயர்நிலையிலிருந்த மக்கள் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் இவர்கள் காட்டு விலங்காண்டிகளல்லர்.
தனிச்சிறப்பு வாய்ந்த நகரங்களையும் நிறுவனங்களையும் இவர்கள் அமைத்துக் கொண்டு நாகரிகமான வாழ்க்கை நடத்தி வந்தனர். இதன் பின்னர் ஆரியர்கள் பல்வேறு தட்ப வெப்பம் உடைய நிலப்பரப்பைக் கடந்து தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். எனினும் அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுக்கு வலிமை வாய்ந்த எதிரிகளாகவே தென்பட்டனர்.
இவ்வாறு இப்பெரு நிலப்பரப்பின் தொல்குடி மக்களாகிய திராவிடர்களை ஆரியர்கள் தஸ்யூக்கள் (தாசர்கள் - அடிமைகள்) என்றும், அரக்கர்கள் என்றும், உக்கிரர் என்றும் பெயரிட்டு இழிவுபடுத்தினர். இவர்கள் அனைவரையும் சூத்திரர் என்ற பொதுத் தலைப்பின்கீழ் ஆரிய நூல்கள் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்கிரர் என்பவர் சத்திரிய ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று மனுதருமம் விளக்கம் தருகிறது.
ரிக் வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மனுதரும சாத்திரம் விளக்கம் கொடுக்கிறது. இதனால் ஆரியரின் நூல்கள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய உறவு கொண்டவை என்பது தெளிவாகும்.
ரிக் வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மனுதரும சாத்திரம் விளக்கம் கொடுக்கிறது. இதனால் ஆரியரின் நூல்கள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய உறவு கொண்டவை என்பது தெளிவாகும்.
மேலும் உக்கிரன் எனும் சூத்திரப் பட்டத்தை ஆரியர்கள் தமிழ் மன்னர்களுக்குச் சூட்டியிருக்கிறார்கள். பாண்டிய மன்னன் ஒருவன் உக்கிரப் பெருவழுதி என்ற பெயரைத் தாங்கியிருக்கிறான். (புறநானூறு - -21, 367). சூத்திரப் பெருவழுதி என்பதை அவன் பெருமைக்குரிய பட்டம் என்று கருதியிருக்கிறான்.
ஆரியர்கள் நேருக்கு நேர் மோதுகின்ற போர் மரபை எப்போதும் கடைப்பிடிக்க மாட்டார்கள். மரத்தின் பின்புறத்தே மறைந்து நின்று இராமன் வாலியைக் கொன்றதைப் போல,
ஆரியர்கள் மறைந்து நின்றே எதிரிகளை அழிப்பவர்கள். அவ்வகையில் தங்களின் எதிரிகளுடைய ஆயுதக் கிடங்குகளுக்கு நெருப்பிட்டுப் போர்க்கருவிகளை அழித்திருக்கிறார்கள். இதனை மழைக் கடவுளான இந்திரனே செய்தான் என்று எழுதி வைத்தார்கள். நாளந்தா பல்கலைக் கழகத்தை ஆரியர்கள் நெருப்பிட்டு அழித்ததையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பு ஆசிரியர்)
வேதங்களின் முன்பகுதிகள் தொகுக்கப்பட்ட காலத்தில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியதைப் போல ஆரியர்கள் இண்டஸ் ஆற்றின் கிளையாறுகளின் கரைகளிலும், இப்போது பஞ்சாப் என்று பெயரிடப்பட்டுள்ள மாநிலத்திலும் குடியேறிவிட்டார்கள். வேதங்களுக்கு உரையெழுதிய பார்ப்பனரான சாயன ஆச்சார்யா கிறித்துவுக்குப் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வளம் கொழிக்க வாழ்ந்தவர்; வேதங்களில் குறிப்பிடப்படும் ஆறுகள், தற்கால இந்தியாவை வளப்படுத்திக் கொண்டிருக்கும் பேராறுகள் என்று சாயனர்
உரை எழுதியுள்ளார்.
ஆனால், வேதங்களில் உள்ள மூலப் பாடல்களில், சாயன ஆச்சார்யாவின் கருத்துக்கு எந்தச் சான்றாதாரமும் இல்லை! வேதங்களில் கூறப்படும் ஆறுகள் அனைத்தும், சுக்தா எனப்படும் வேத இசைப் பாடல்களை எழுதியவர்களின் கண்முன் தோன்றியவை போலக் காட்டப்படுகின்றன. இந்த இசைப் பாடல்களில் இருந்துதான் ரிக் வேதம் தொகுக்கப்பட்டது. இந்திரனே! நீ பசு மாடுகளைக் காப்பாற்றி ஓட்டிவந்தாய்; சோம பானத்தை வெற்றி கொண்டவன் நீ!
ஏழு ஆறுகளைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாய்ந்தோடுமாறு செய்தாய்! பேராசை பிடித்தவனைப் போல ஒரு பருந்துப் பாய்ச்சலில் 99 நீரோடைகளைக் கடந்து நீ வந்திருக்கிறாய்!
இந்த அற்புத வேலைகளில் அவன் (இந்திரன்) புகழ் வாய்ந்தவன். அந்த நான்கு ஆறுகளையும் அவன் இனிமையான நீரால் நிரப்புகிறான்;
இந்தப் பூமியின் மேற்பரப்பில் பாய்ந்து பரவி ஓடுமாறு செய்கிறான். பலியிடப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் அக்னியில் பதப்படுத்தப் படுகின்றன. ஏழு பெரிய ஆறுகளும் ஒன்றிணைந்து கடலில் கலக்கின்றன. பஞ்சாப்பில் தெற்கிலிருந்து அல்லது வடக்கிலிருந்து நாம் கடந்து சென்றால், நான்கு, அய்ந்து அல்லது ஏழு அல்லது இவற்றிற்கு அதிகமான ஆறுகளைப் பார்க்க முடியும்.
பார்சிகளின் வெண்டிடாட்டில் இந்த மாவட்டம் ஃகப்த ஃகெண்டு (Hapra
Hendu) என்று பெயரிட்டழைக்கப்படுகிறது. இதற்கு ஏழு இண்டீஸ் என்று பொருள். ஃகெண்டு எனும் சொல் சிந்து எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். சிந்து என்பது இண்டஸ் என்பதற்கான சமஸ்கிருதப் பெயராகும். (அதாவது இண்டஸ் என்பதற்கு சமஸ்கிருதத்தில் சிந்து என்று பெயர்.) வேதத்தில் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருக்கும் இண்டஸ் ஆற்றின் கரைகளில்தான், வேத இசைப் பாடல்களை உருவாக்கியவர்களில் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை. இவ்வாறு, எங்களுடைய பரந்த வயல்வெளிகளை நீரால் நிரப்பி வளப்படுத்தி எங்களுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொடுக்கும் புகழ்பெற்ற சிந்து நதியே! நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக என்று கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
சிந்து நதிக் கரையில் வாழும் அரசனாகிய பாவ்யாவின் புகழை மனம் விரும்பி நான் மறுபடியும் கூறுகிறேன். ரிக் வேதத்தின் பாடல் ஒன்றில், வேதங்களை வழிபடுவோருடன் தொடர்புபடுத்தி - இணைத்து மூன்று ஆறுகள் இவ்வாறு குறிக்கப்படுகின்றன:- மனுவின் வழிவந்தோர் குடியிருப்பதற்கு இடமாகக் கொண்டுள்ள, திரிசாத்வதி, அபாயா, சரஸ்வதி ஆகிய ஆறுகளின் கரைகளை ஓ!
அக்னியே! புகழ்மிக ஒளியூட்டு! இந்த ஆறுகள் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்தவை; தென்கிழக்குப் பகுதிக்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. இந்திய ஆறுகளின் அமைப்பின்படி இதுவே சரியானது என்பது எனது கருத்தாகும்.
இவற்றில் இரண்டு ஆறுகள் மனுவால் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன. புனித ஆறுகளாகிய சரசுவதி, திரிசாத்வதி ஆகியவற்றிற்கிடையே கடவுளர்களால் அமைக்கப்பட்ட நாட்டிற்கு பிரமவர்த்தா என்று பெயர். பேராசிரியர் வில்சன், தம்முடைய விஷ்ணு புராணம் என்னும் நூலில் சரஸ்வதியை, தானேசுவரத்திற்கு (ஸ்தானேஷ்வர்) வடமேற்கில் ஓடுகிற சர்சூடி (sursuri) என்று குறிப்பிடுகிறார். வேதங்களில் இந்த ஆறு குறிப்பிடப்படுகின்ற முறையை நோக்கும்போது, இது ஆரியர்களின் தனிப் பாசத்திற்குரிய ஆறாக விளங்கியிருக்கிறது என்பது தெரிகின்றது.
மேலும், வேர்ச்சொல் ஆய்வின்படி இது ஏரி என்று பொருள்படுகிறது. மணலால் மூடப் பெற்று, தன்னை இழந்து கொண்டிருந்த இந்த ஆறு,
அய்ரியாவின் மூலப்பகுதியிலிருந்த அரகுவாய்டி என்பதனுடன் ஒப்புமை உடையதாக இருந்தது. (பர்னூஃப் எனும் ஆய்வாளர் சரஸ்வதி என்பதற்கும் அரசுவாய்டி என்பதற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளை விரிவாக ஆராய்ந்துள்ளார். அரகுவாய்டி என்பதிலிருந்து கிரேக்கர்களின் அரக்கோட்டியா என்ற மாவட்டம் தோன்றியது என்கிறார் பர்னூஃப்.) திரிசாத்வதி ஆறு,
சரஸ்வதி ஆற்றுக்கு அருகிலேயே ஓடியதாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற விபாபா, திரிசாத்வதி விபாசா ஆகியவற்றில் ஒன்றான விபாபா என்பதுதான் அபாயாவாக இருக்கலாம்.
ஆனால், இது எதுவென்று அடையாளம் காணப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ரிக் வேதத்தின் வேறு சில பாடல்களில், மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற விபாஷா என்னும் ஆற்றுக்கு இணையாக - வேர்ச்சொல் ஆய்வின்படியும் வேதத்திற்கு உரையெழுதிய பார்ப்பன உரையாசிரியர் கருத்துப்படியும் ஒப்பானதாகக் கூறப்படுகின்ற விபாத், தற்போதைய பியாஸ் ஆற்றின் தோற்றமும், கிரேக்கர்களின் அய்பாசிஸ் அல்லது பாபாசிஸ், சுடுட்ரி - பிற்காலத்தில் சுடுட்ரி அல்லது சட்லெஜ் ஆகிய ஆறுகள் விசுவாமித்திர முனிவருடன் உரையாடல் நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
விசுவாமித்திரர் வேதங்களில் பல பாடல்களை இயற்றியவர். விபாஷி, விதாஸ்தாவின் அருகில் வாழ்ந்தவர்கள், அய்டாஸ்பெஸ் அல்லது ஜீலம், சரயு (இது அயோத்திக்கு அருகில் இருந்ததா இல்லையா என்பது உறுதியாகவில்லை). இவை அனைத்தும் வாம் தேவாவின் இசைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப்பும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்திய ஆரியர்களின் மூலக் குடியிருப்பிடங்களாக அமைந்திருந்தன என்று தெரிய வருகின்றது. தென்கிழக்கு ஆறுகளின் அமைப்பு, ரிக் வேதத்தின் இன்றியமையாத பகுதிகளில் பேசப்படுகிறது.
ரிக் வேதத்தின் நான்காம் அஷ்டகா (பிரிவு)வில் அத்ரியின் மரபு வழியைச் சேர்ந்த சாயவஷ்வா என்பவரால் முதன்முதலில் யமுனை, கோமதி ஆறுகள் குறிப்பிடப்படுகின்றன. (விசுவாமித்திரரின் சம காலத்தவர் என்று இந்து பழமரபு நூல்களால் குறிப்பிடப்படுகின்ற வசிட்ட முனிவராலும் யமுனை ஆறு பேசப்படுகிறது.) கங்கை ஆறு ஒரே ஓரிடத்தில் மட்டுமே, அதுவும் அதனுடைய எட்டாவது அல்லது கடைசிப் பிரிவில் பேசப்படுகிறது. (இங்கு ஆறுகளைப் புகழ்ந்து, தற்குறிப்பேற்றமாக வேதத்தில் இசைப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து நதி ஆண் பாலாகவும், ஏனைய நதிகளெல்லாம் பெண் பாலாகவும் கற்பித்துக் கூறப்படுகின்றது. சிந்து நதியே தலைவன்; இதற்குக் கீழ்ப்பட்டவையே மற்ற ஆறுகள்! கீழ்க்காணும் வரிசையில் அவை அமைக்கப்பட்டுள்ளன. சிந்து - தலைவன்; கங்கை; யமுனை; சரஸ்வதி; சுதுத்ரி; அய்ராவதி;.....)
வேதங்களில் புலியைப் பற்றிய எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. சிங்கத்தைப் பற்றி மட்டும் சில இடங்களில் கூறப்படுகிறது. இதனால் வேதங்களை உருவாக்கிய ரிசிகள் இவற்றை உருவாக்கிய காலத்தில்
இன்னும் அவர்கள் புலிகளின் பூமியை வந்தடையவில்லை என்பது தெரிகின்றது. சரியானாவதி எனும் ஏரி,
பக்திமானாகிய ரிஜிகா என்பவரது ஆட்சி எல்லைக்குள் அமைந்திருந்ததாகச் சில இடங்களில் சுட்டப்படுகிறது. இதுவே பிற்காலத்தில் குருச்சேத்திரா என்ற நாடாகியது என்று கூறப்படுகிறது.
மனுவின் சட்டத் தொகுப்பு புத்தவியலுக்கு,
அதன் எழுச்சிக்கு முற்பட்டது எனத் தெரிகின்றது; கிறித்துவுக்கு முன் ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அதன் காலத்தைக் கருதுவர். மனு நூலின் பழைய பகுதிகளின் காலத்தைச் சேர்ந்த ஆரியர்கள் தங்கள் எல்லையை இண்டஸ் ஆற்றின் எல்லைக்கு அப்பாலும் (அதனைக் கடந்து) விரிவுபடுத்திக் கொண்டார்கள். அந்த நிலையிலும் கூட அப்போது ஆரியர்கள், விந்திய மலைத்தொடர்களுக்கு வடக்கில்தான் பெரும்பான்மையும் இருந்தார்கள்.
கிழக்குக் கடற்பகுதிக்கும் மேற்குக் கடற்பகுதிக்கும், அதாவது விந்திய மலைக்கும், ஃகிமாவாட் மலைக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பை அறிஞர்கள் ஆரிய வர்த்தம் (ஆரியர் வாழும் இடம்) என்று பெயரிட்டு அழைத்தார்கள் என்று மனுநூல் கூறுகிறது. ஆரிய வர்த்தம் என்னும் இந்தப் பொதுவான பகுதி, பிரம்மார்ஷி என்னும் பகுதி என்று குறிக்கப்படுகிறது. குருச்சேத்திரா, மச்சயா, பாஞ்சாலம், சூரசேனா முதலான பகுதிகளை அது உள்ளடக்கியிருந்தது. (மனு ஐஐ.
19). ஃகிமாவாட், விந்திய மலைகளுக்கு இடையில் அமைந்திருந்த நாடு கிழக்கில் வினாசனா வரைக்கும் மேற்கில் பிரயாகை வரைக்கும் (பிரயாகை கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம்) பரந்திருந்த அந்த நாடு மத்திய தேசம் அல்லது இடைப்பட்ட நாடு என்று வேறுபடுத்திக் காட்டப்பட்டது (மனு). இண்டஸ் ஆற்றின் கிளை நதிகளின் மேல் இருந்த ஆரியர்களின் குடியிருப்புக்களுடன் இப்போது நான்கு வேறுபட்ட ஆனால், முன்னேறிக் கொண்டு நகர்ந்து சென்று கொண்டுள்ள ஆரியக் குடியேற்றங்களை வட இந்தியாவில் நாம் பார்க்கிறோம்.
தென்னகத்தை நோக்கி ஆரியர் முன்னேறி வந்தமையை இங்கு நான் விளக்கத் தொடங்கினால் அது மிக விரிவாகிவிடும். ஆதலின் இங்கே குழுமியிருக்கும் பார்வையாளர்களை மனத்துள் கொண்டு நான் சில செய்திகளை குறிப்பிட விரும்புகிறேன். அயோதா என்னும் நகரம் சரயு நதிக்கரையில் அவர்களால் உருவாக்கப்பட்டது;
இராமாயணம் எனும் புராணக் கதையால் அது பெரும்புகழ் பெற்றது. ஒரு போர்வீரன் இருப்பிடமாக அது இருந்திருக்கலாம். (ஒருவேளை பாசறையாக இருக்கலாம்). எல்லை கடந்துவந்த தொன்மையான அய்ரியக் குடியிருப்பாளர்களுக்குத் தெரிந்ததொரு சிறப்புப் பெயர்தான் இது! (இவர்கள் குதிரைகளை அடக்குபவர்கள்; குதிரைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்).
இந்த நாட்டிலிருந்த இந்தியர்கள், தங்களது துணைக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர் என்பது வியப்பிற்குரியது இல்லையென்றாலும், வடக்கில், தங்கள் கடவுளரின் உறைவிடங்கள் எனக் கருதிய, விழுமியதும் கடந்து செல்ல முடியாததுமான மலை அவர்களுக்கு அப்போது தடையாக இருந்தது. வளம் மிகுந்த அந்த நாடு, தொடக்கக் காலத்தில் அந்த நாட்டின் தொன்மைக் குடிமக்களாக இருந்திருப்போம் என்று அவர்கள் எண்ணத் தொடங்கியிருக்க வேண்டும். தொலைவில் உள்ள ஒரு நிலத்திலிருந்து பிறிதொரு நாட்டில் சென்று குடியேறிய காட்சிகளை அவர்கள் மறந்திருக்க வேண்டும். நர்மதை ஆற்றுக்குத் தெற்கே ஆரியர்கள் முதன்முதலாக அறிமுகமானது மதம் பரப்பும் அடிப்படை நோக்கத்தில்தான்!
அதன் பின்னர் வணிகத் தொடர்புகளின் மூலமாகத் தெற்கில் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. (மதத்தைப் பரப்பும்போதுகூட ஆரியர்கள் வலிந்து சென்று திணிக்கும் முறையைக் கையாளவில்லை. புனிதத் திருத்தலங்கள் என்று சில இடங்களைத் தேர்வு செய்து, கவர்ச்சியான முறையில் தீர்த்தம் தெளிப்பது போன்ற முறைகளால் தங்கள் மதச் சடங்குகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்திழுத்தனர்). இதன் பிறகு ஆரியர்களின் குடியேற்றமும் இங்கு வாழ்ந்த மக்களை வென்று அடிமைப்படுத்திய நிகழ்வும் நடந்தேறின. தென்னிந்தியாவில் பாண்டிய மன்னர்கள்தாம் முதன்முதலில் ஆரியர்களுக்குக் குடியிருப்புகளை (காலனிகளை) அமைத்துக் கொடுத்த இந்தப் பணியைத் தொடங்கி வைத்தவர்கள். சேரனும், சோழனும் ஒதுங்கி இருந்தனர் என்றே தோன்றுகிறது. பேராசிரியர் லாசன் அவர்கள் கருத்துப்படி இந்தப் பேரரசுகளின் சிறப்புப் பெயர், ஆதிக்கம் செலுத்திய வெள்ளை நிறத்தவரிடமிருந்து தோன்றியிருக்கலாம்.
கோகோ (chogho) வுக்கு அருகில் உள்ள தற்போது சிகார் என அழைக்கப்படும் சின்கா எனும் இனத்தவரின் தலைநகராகிய சின்காபூர் எனுமிடத்திலிருந்து சின்கா (sinho) இனத்தவர், இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிறுவினர். இலங்கைத் தீவை வென்று அதனை சிங்களதீபா என்று பெயரிட்டழைத்தனர். மேலும், கீழைக்கடல் பகுதியில் இருந்த பல இடங்களையும் கைப்பற்றித் தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவு செய்தனர். மகாராஷ்டிரா அல்லது மராத்தா நாட்டில் ஆரியர்கள் பெருந்தொகையினராகச் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கிறித்துவ ஊழியிலும் அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளிலும் அதன் அருகிலிருந்த மாநிலங்களிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அது ஆரியகே (ARIAKE) அதாவது ஆரியர்களின் நாடு (Land
of Aryas) என அழைக்கப்பட்டது. இவ்வாறு அழைத்தவர்கள் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புவியியலாளரான டாலமி (Ptolemy) என்பவரும் அவருடைய சமகாலத்தவராகக் கருதப்படுகின்ற கடலோடியான அட்ரியன் (Atrian) என்பவரும் ஆவர். இதன் விளைவாக, தற்காலத்திய கன்னடியர்களில் ஒரு சில மராத்தியருக்கு ஆரியா (ஆரியர் எனும் பொருளில்) என்று பெயர் ஏற்பட்டுள்ளது.
மேலும், தென்மராத்திய நாட்டில் இருக்கும் மாங் எனும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கும் இப்பெயர் வைக்கப்படுகிறது. பாந்தர் அல்லது உண்மையான வெண்ணிறம் என்பது இன்றும்கூட மராட்டியப்
பகுதிகளில் உள்ள நகராட்சிகளுக்கு உரியதாக உள்ளது. இங்குள்ள மக்கள் இந்தப் பட்டப் பெயரின் தோற்றத்தைப் பற்றி சிந்திக்கவில்லையென்றாலும் (பாந்தர்...) இதைப்பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆரியர்களுக்கு எதிரானவர்களாக வேதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்ற தஸ்யூக்கள் என்பவர்களைப்பற்றி, வேறு சான்றுகள் எவற்றையும் நாம் காண முடியவில்லை; மனுதருமத்தில் மட்டும் ஒன்றிரண்டு இடங்களில் அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தஸ்யூ என்னும் சொல்லில் இருந்து உருவாகிவந்த தாஸ் (தாசன்) எனும் சொல் முடிவில் ஒரு கொத்தடிமையைக் குறிப்பதற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்தப் பொருளில் இதற்கு இணையாக நம்முடைய ஆங்கிலச் சொல் SLAVE (அடிமை) என்பது உள்ளது. SLAVE எனும் இந்தச் சொல் ஸ்லேவி (SLAVI) இனத்து மக்களிடமிருந்து தோன்றியது. இவர்களில் பெரும்பான்மையோர், தற்காலத்தில் இவர்கள் வாழ்கின்ற பகுதிகளிலேயே அடிமைகளாக மாறிவிட்டனர். வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற சில தஸ்யூக்களின் பெயர்களும் ஆரிய இனத்தவரின் ஏனைய எதிரிகளின் பெயர்களும் ஆரிய மூலத்திலிருந்து தோன்றியவை எனத் தெரிகின்றது.
ஆனால், இந்திய மொழிகளில் உள்ள சமஸ்கிருதமல்லாத நூல்களில் இவர்கள், சித்தியன் அல்லது துரேனியன் இனமரபைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் வாழ்விடங்களை விட்டு இங்கு வந்து குடியேறியவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குஜராத்திலும் அதற்கு அண்மையில் உள்ள மற்ற மாநிலங்களிலும் காணப்படுகின்ற துரானியர்கள், இன்றும் கலி பிரஜா அல்லது கருப்பினத்தவர் என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றனர். வெண்ணிறத்தவரிடமிருந்து (உயர்ந்தோர்) இவர்களை வேறுபடுத்திக் காட்டவே இவ்வாறு இவர்கள் கூறப்படுகின்றனர். என்றாலும் ஆரியர்களின் ரத்தம் இவர்களிடத்தில் அதிகமாகவோ குறைவாகவோ காணப்படுகின்றது.
வேதகாலத்து ஆரியர்கள் முதன்மையாக நாட்டுப்புற வாழ்வினர்; அத்துடன் அவர்கள் வேளாண் தொழிலையும் செய்து வந்தனர். (இதற்கு ஏராளமான சான்றுகள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. இங்கு நான் குறிப்பிடும் ஒவ்வொரு கருத்துக்கும் வேதங்களில் சான்று இருக்கிறது.) ஆரியர்களின் ஆட்டு மந்தைகள், செம்மறி ஆடுகள், கால்நடைகள், வெள்ளாடுகள், பசுமாடுகள், எருமைகள், குதிரைகள், ஒட்டகங்கள், காளை மாடுகள் ஆகியவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. இவற்றைத் தங்களுக்குக் கொடுத்தமைக்காகக் கடவுளர்க்கும், மனிதர்களுக்கும் முறையே வழிபடு பொருளாகவும், நன்றி செலுத்துவதற்கு உரிய பொருளாகவும் இவை விளங்கின. அவர்களில் ஒரு பெண்மகள் துகித்ரி அல்லது பால்காரப் பெண் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாள்.
மேலும் கோபா என்பதும் கோபால் என்பதும் அல்லது கால்நடைகளை வைத்திருப்பவர் என்பதும் பொதுவாக அவர்களுக்குள்ளே ஒரு பாதுகாவலர் என்று பொருள்பட்டது. கால்நடைகளை,
பசு மாடுகளை வைத்திருந்தோர் அந்தச் சமுதாயத்தில் மிகப் பெரிய இடத்தில் இருந்தனர். நாட்டுப்புற வாழ்க்கையில் உருவான அவர்களுடைய உரை வெளிப்பாடுகள் பலவற்றில் அவர்தம் இனம் சார்ந்த பொதுவியலான பொருளை அவர்கள் மொழியில் காண முடிகிறது. தங்கள் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் மக்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. ஆனால், அவர்களின் எதிரிகள் நாகரிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகத் திரளாக ஒன்று கூடி வாழ்ந்த குடும்ப வாழ்க்கையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கென்று சிற்றூர்களும், நகரங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான இருப்பிடங்களும் அங்கு இருந்தன. வீட்டுப் பயன்பாட்டுக்கான ஆடம்பரப் பொருட்களுடன் அவர்கள் வசதியான வாழ்க்கை நடத்திவந்தனர். அவர்கள் நெசவுத் தொழிலை நன்கு அறிந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான ஆடைகளை அவர்களே நெய்து கொண்டனர். இரும்பும் அவர்களுக்குப் பயன்படு பொருளாக இருந்து வந்தது. கொல்உலைத் தொழில், செப்புத் தொழில், தச்சுத் தொழில் முதலானவற்றோடு பிற கைத்தொழில்களிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். தங்கள் காடுகளில் இருந்த மரங்களை வெட்டுவதற்குக் கைக்கோடாரிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
அவர்களுக்கு விருப்பமான அஷ்வதா பலாஷா (உயரிய மரவகைகள்) ஆகிய மரங்களோடு அகாசியா மரக் குடும்ப வகையைச் சேர்ந்த பிற மரங்களையும் அவர்கள் வெட்டினர். தங்கள் தேர்களை இழைத்துத் தேய்த்து மெருகூட்டி அழகுபடுத்தவும் அவர்கள் அறிந்திருந்தனர். வண்டிச் சக்கரங்களைச் சுற்றி மாட்டப்படும் இரும்பு வட்டகைகளையும் அவர்கள் செய்து கொண்டனர். கவசம், தடிகள், வில், அம்புகள், வாள், கேடயம் முதலான போர்க் கருவிகளை அவர்களே வடிவமைத்துக் கொண்டனர். சங்கொலி கேட்டவுடன் அவர்கள் போருக்கு ஆயத்தமாகுமாறு அழைக்கப்பட்டனர்.
வீட்டுப் பயன்பாட்டிற்காகவும், வழிபாட்டிற்காகவும், அவர்கள் சிறு சிறு கிண்ணங்கள், பாத்திரங்கள், நெடியதும், சிறியதுமான அகப்பைகள் முதலானவற்றை அவர்களே செய்து கொண்டார்கள். தங்கள் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்குத் தொழில்முறையிலான நாவிதர்களை அவர்கள் அமர்த்தியிருந்தனர். விலை உயர்ந்த உலோகங்களையும், கற்களையும் வணிகப் பயன்பாட்டில் எப்படி மாற்றுவது என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர். பொன்னாலான காதணிகள், வைரக் கழுத்தணிகள், பொன்வட்டில்கள் முதலானவற்றை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். தங்களுக்குப் பயன்படும் விலங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தொல்பழங்காலத்து எகிப்தியர்களைப் போல அவர்கள் போர் செய்வதற்காகத் தேர்கள் வைத்திருந்தனர்.
போக்குவரத்துக்காகக் குதிரை வண்டிகளையும் மாட்டு வண்டிகளையும், பயன்படுத்தினார்கள். குதிரைகளையும், மாடுகளையும் கவனித்துக் கொள்வதற்காகப் பணியாளர் இருந்தனர். எகிப்தியரிடம் இதனைக் காண்பதற்கில்லை. நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட தங்கள் குதிரைகளைப் பற்றியும், சிறந்த குதிரை, தேர்ப்படை வீரர்களைப் பற்றியும் பேசுவதில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; மகிழ்ச்சியடைந்தனர். தங்களது வண்டி வாகனங்களைப் புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர். அவர்களுடைய இளவரசர்கள், குருமார்கள், கடவுளர்கள் ஆகியோர் சில நேரங்களில், குதிரை இனத்தோடு தொடர்புடைய பெயர்களையும் பட்டங்களையும் பெற்றிருந்தனர். யானைகளைப் பழக்கி அடக்கி வைத்திருந்தார்கள்!
ஆனால், தென்னகத்தின் தொல்குடி மக்களைப்போல இவர்கள், போர் செய்தல் போன்ற வேலைகளுக்கு யானைகளைப் பயன்படுத்தினார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மருத்துவக் குணமுடைய சில மூலிகைச் செடிகளை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். சோமலதா அல்லது நிலவுச் செடி என்னும் தாவரத்திலிருந்து குடித்து மகிழ ஒருவகை மதுவை அவர்கள் உருவாக்கினார்கள். மருத்துவக் குணமுடைய அந்தச் சாறு (சர்வோஸ்டமா விமினாவிஸ்) கடவுளர்க்கும் மனிதர்க்கும் போதையூட்டு வதற்கும் மகிழ்ச்சியில் திளைப்பதற்கும் (இருவர்க்கும்) ஏற்புடையது என்று அவர்கள் கருதினார்கள். கிரிட்டா அல்லது நெய், அவர்களின் பின்னோர்க்குப் பயன்பட்டதைப் போலவே அவர்களுக்கும் பயன்பட்டது. பார்லி கஞ்சியின் புளிப்புத் தன்மை அவர்களுக்குப் புதியதல்ல; அந்தச் சமூகத்தில் கஞ்சியும் உணவாக இருந்தது.
தீயொழுக்கமுடைய பெண்கள் நகரங்களில் காணப்பட்டனர்; தங்கள் செயலைப் பற்றி அவர்கள் பெரிதும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. சாராய விற்பனையாளர்களிடம் இவர்கள் இணக்கமாகவே இருந்தனர். (தற்கால இந்துக்களின் அமைப்பு முறையின்படி சாராயம் குடிப்பது மாபாதகச் செயல் அல்லது மாபெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. தாயோடு உறவு கொள்ளல் அல்லது ஒரு பார்ப்பனனைக் கொலை செய்வதற்கு இது ஒப்பானது என்று கூறப்படுகிறது.)
அவர்களுக்கென்று நீதிமன்றங்களை அவர்கள் வைத்திருந்தார்கள். அவர்களின் வழிபாட்டுமுறை, மனையை விட்டகலாத குடும்பம் சார்ந்த வழிபாட்டுமுறையாக இருந்த போதிலும் பலியிடும் அரங்குகளும் பலிப்பொருளை உண்ணும் அரங்குகளும் வெளியில் இருந்தன. இவற்றோடு உருவ வழிபாடு ஒருபோதும் தொடர்புபடுத்திக் கூறப்படவில்லை. பரிசில், படகு, தெப்பம், கப்பல் முதலானவற்றை அவர்கள் கட்டினார்கள். அவர்கள் வழக்கமாக வாழ்ந்த இடங்களிலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு வணிகத்தின் பொருட்டுப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் கிடைக்காத பொருள்களில் அவர்களின் கண்களுக்குப் பட்டது காந்தார் ஆடுகளின் மெல்லிய மயிர்தான்!
அவர்களுடைய இசைப் பாடல்களில் கடலைப் பற்றிய பாடல் எப்போதாவது இடம் பெற்றிருக்கும்; இண்டஸ் ஆற்றில் பயணம் செய்து கடலை அடைந்ததன் விளைவாக இத்தகைய பாடல்கள் எழுந்தன எனலாம். அவர்களில் சிலர் பிறர் பொருளைக் கவரும் எண்ணத்துடன், மரக்கலங்களில், கூட்டங் கூட்டமாகக் கடலிற் பயணிப்போரை மனத்திற் கொண்டு சென்றனர். அயல்நாடு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கப்பல் பயணம், கப்பல் பாறை மீது மோதியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தோடு முடிவடைந்ததாகக் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. அண்டை நாட்டு இளவரசர்களுக்கு அவர்கள் தூதுவர்களை அனுப்பினார்கள். ஆனால், பக்கத்து நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதை அவர்கள் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது. அவர்களது நாட்டின் புகழ்வாய்ந்த ஆறு,
மோசசின் காலத்திலேயே எகிப்தியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. பி சோன் சிந்து, (இதில் பி- சோன் என்பது எகிப்தியச் சொல்) (காபூலில் இருந்து வந்த இதன் கிளைஆறு வடக்கு நோக்கிச் செல்வது) என்று குறிப்பிடப்படுகிறது.
இப்போது நாம் குறிப்பிட்டுப் பேசும் இந்தக் காலகட்டத்தில் எழுத்து வடிவிலான கலைப் படைப்புக்கள் எதையும் ஆரியர்கள் பெற்றிருக்கவில்லை. ஓதுவதற்காகவே வேதங்கள் செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டன. ஆதலால் அவை சுருதிகள் என்று பெயர் பெற்றன. அதாவது அவை கேட்கப்படுபவை என்று பெயரிடப்பட்டன.
வேதங்களுக்கு முற்பட்டவை என்று நாம் முன்னரே குறிப்பிட்ட இந்துக்களின் தொன்மைசான்ற தத்துவ நூல்கள் எல்லாம் சூத்திரங்களாகவும், சிறுசிறு கண்ணிகளாகவும் நினைவில் நிற்கக்கூடிய நூற்பாக்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனுதருமத்தின் அமைப்பு ஸ்மிருதி வடிவில், அதாவது நினைவிற் கொள்ள வேண்டியது என்னும் பொருளில் அமைந்துள்ளது. இந்துக்களின் மிகப் பெரிய காப்பியங்கள் என்று கருதப்படுகின்ற இராமாயணமும், மகாபாரதமும் வடிவ அமைப்பில் மிகவும் தொன்மை சான்றவை. ஆதலால் அவை புத்தர் காலத்திற்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றன.
பேராசிரியர் லாசென் இவை இரண்டும் வாய்மொழியாகப் பின்னையோர்க்கு வழங்கப்பட்டு வந்தவை என்று மிகச் சரியாகவே குறிப்பிடுகின்றார். இக்கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். (பேரா. லாசன் இவ்விரண்டு காப்பியங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தெரிவித்துள்ளார். சடங்குகள், திருவிழாக்கள் நடைபெறும் காலத்தில் இவற்றைப் படிப்பார்கள்; இவை முதன்முதலாகப் பெற்ற, வடிவத்திற்கும் அடுத்த வடிவத்திற்கும் நீண்ட கால இடைவெளி இருந்துள்ளது. வால்மீகி, இராமனின் சமகாலத்தவர் என்று கூறப்படுவதனால் இராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி என்று கூற முடியாது. மகாபாரதம், இராமாயணத்திற்கு முற்பட்டது; வியாசர் என்பவர் அதனைத் தொகுத்தவர். ஓர் அரசனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற ஒரு வீரகாவியமாக அது விளங்கவில்லை. பார்ப்பன பலியீட்டின்போது அது திரும்பக் கூறப்படும் ஒரு வீரகாவியமாகவே தோன்றுகிறது.)
Comments
Post a Comment